Translate

Saturday 29 October 2011

அமெரிக்காவின் காதில் பூ சுற்றிய சிறீலங்கா


இறுதிப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் எந்த வகையிலேனும் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றால் அவரைக் கண்டறிவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என்று அமெரிக்கா இலங்கைக்கு உறுதி கூறி இருந்தது என்ற தகவலை “விக்கி லீக்ஸ்’ கசியவிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் 2009 இல் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக்குக்கும் இடையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட கேபிள் தகவலை விக்கி லீக்கிஸிடம் பெற்று வெளியிட்டுள்ளது கொழும்பு ரெலிகிராப் ஊடகம். அந்தக் கேபிளின்படி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதுடன் தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அமெரிக்கத் தூதருக்கு ஏற்கனவே வழங்கி இருந்த உறுதிமொழியை திரும்பவும் வழங்கினார்.
பிளேக் கோத்தா சந்திப்பில், தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது எந்தக் காரணம் கொண்டும் படையினர் பலவந்தமான தாக்குதல்களை நடத்தமாட்டார்கள் என்ற உறுதிமொழியையும் பாதுகாப்புச் செயலர் வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகள் அனைவருக்கும் அரசு பொதுமன்னிப்பு வழங்கும் என்ற செய்தி அவர்களுக்கு எட்டும்படி செய்யப்பட்டுள்ளதா என்று பிளேக், பாதுகாப்புச் செயலரிடம் வினவியதற்கு, அதனை வெளிப்படையாகப் பெரிய அளவில் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் சிங்களத் அடிப்படைவாதக் கட்சிகளான ஹெல உறுமய, ஜே.வி.பி. பிக்குகள் முன்னணி என்பன கடுமையான எதிர்ப்பைக் காட்டும் என்று கோத்தபாய பதிலளித்தார் என்றும் அந்தக் கேபிள் செய்தி கூறுகிறது.
பொதுமன்னிப்பு என்ற விடயம் பரந்தளவில் பரப்புரை செய்யப்படவில்லை என்றால் அது சேற்றில் புதைந்துபோய்விடும்; அதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று சுட்டிக்காட்டிய பிளேக், அதேவேளை, இலங்கையைவிட்டு பிரபாகரன் தப்பிச் சென்றால் அவரைக் கண்டறிவதற்கான உதவிகளை வழங்கக்கூடிய வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கின்றது என்பதை கோத்தபாயவிடம் சுட்டிக்காட்டினார் என்றும் கேபிள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment