Translate

Monday, 7 November 2011

த.தே. கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம்.


த.தே. கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம்.

தனி நாடொன்றைப் பிரதிநிதித்துவப் படுத்தாத அரசியல் கட்சியை இராசாங்கச் செயலகம் பேச்சுக்கு அழைத்ததானது மிக முக்கியமான செய்தி. முன்பு போல் உலக நிகழ்வுகளைத் திருப்பிவிடும் வல்லமை அமெரிக்காவுக்கு இருந்திருப்பின் இந்த அழைப்பு மிகவும் விசேடமாக இருந்திருக்கும்.
பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு ரீதியாகவும் மிகவும் நொந்து போய் இருக்கும் அமெரிக்காவால் ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வில் காத்திரமான மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதே சமயத்தில் தங்கள் கோரிக்கையை இடித்துரைக்கும் வலு கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்கு இருக்கிறதா என்பது இன்னோர் கேள்வி.

தமிழர்களுக்குத் துரிதகதியில் திருப்தியான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா இராசதந்திர முறையில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு மேல் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இலங்கை அரசுடன் கூட்டமைப்பு நடத்திய தீர்வுப் பேச்சுக்களின் நிலவரம் பற்றி விளக்கமளிக்க கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இதை நம்புவது கடினமாக இருக்கிறது. அமெரிக்காவின் கொழும்புத் தூதரகத்தின் காதுகளுக்கு ஏற்கனவே எட்டாத தகவலையா இந்தப் பயணிகள் இராசங்கச் செயலகத்திற்குச் சொல்லப் போகிறார்கள்?
வியற்நாமில் படுதோல்வியுடன் தப்பியோடிய பிரெஞ்சுப் படைகளின் இடைத்தை நிரப்பப் புகுந்த அமெரிக்கப் படைகளும் 1975ல் தோல்வியைத் தழுவின. இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு படுதோல்வியைக் கண்டிருக்கிறது. அதை நம்புவதற்குச் சிங்களவர்களும் தமிழர்களும் தயாரில்லை.
ஈழத்தமிழின அழிப்பிற்கு நேரடி உதவி புரிந்த இந்திய மத்திய அரசை தமிழ் மக்கள் நஞ்சு போல் வெறுக்கின்றனர். எரியும் வீட்டில் பிடுங்கினது அறுதி என்ற கணக்கில் காங்கேசன் துறைமுகம், சீமேந்தித் தொழிற்சாலை, சம்பூர் அனல் மின் நிலையம் போன்றவற்றை இந்தியா கையகப் படுத்தியுள்ளது.
இது போதாதென்று சிங்களவர்களுக்குச் சார்பான நாச்சியப்பன் போன்ற காங்கிரஸ்காரர்களை நல்லெண்ணத் தூதர்களாக யாழ்ப்பாணம் அனுப்புகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா பூச்சியத்திற்கு வந்ததால் பங்காளி அமெரிக்கா இப்போது த.தே கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது.
2007 ஒக்டோபர் 23ம் நாள் கார்டியன் அன்லிமிற்றட் (Guardian Unlimited) ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் “எல்லாத் தீவிர வாதிகளையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அவர்களை இயக்கும் காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
எனினும் மே 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிவை நிறுத்த அவர் முயற்சிக்கவில்லை. ஏனென்றால் அவருடைய அரசும் இந்தியாவும் கூட்டாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை இன அழிப்பு இறுதிவரை நடத்தின. இதை மனதில் கொண்ட பேராசிரியர் ஜோன் நீல்சன் (John Neelson) ஜெனிவா பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் பின்வருமாறு கூறினார்.
“அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் சாயாமல் பயங்கரவாதச் செயல் புரிந்தோர் பக்கம் மேற்கு நாடுகள் சாய்கின்றன” இந்தச் சாட்டையடி அமெரிக்காவைக் குறிவைத்து நடத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றியை ஈழத்தமிழர்கள் ஏசுபிரானின் இரண்டாவது வருகைக்கு ஒப்பிட்டு மகிழ்ந்தனர். தேர்தல் காலத் தொலைக்காட்சியில் நடத்திய இரண்டாவது விவாதத்தில் அவர் இப்படிப் பேசினார்.
“உலகின் ஏதோவொரு பகுதியில் இன அழிப்பும் இனச் சுத்திகரிப்பும் நடக்கும் போது நாம் வாளாவிருந்தால் அது எம்மைப் பலவீனப் படுத்தும்”
இப்படி பேசிய ஒபாமா முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடக்கும் போது தனது தூதர் றொபேட் பிளேக் மூலம் இலங்கை அரசிற்கு அனுசரணை வழங்கினார். அத்தோடு அமெரிக்க அதிபரின் சிறப்பு உதவியாளரும், இனப்படுகொலை, மனித உரிமைக்குப் பொறுப்பான சமன்தா பவர் (Samantha Power),
போர்குற்றம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் டேவிற் பிரெஸ்மன் (David Pressman) ஆகியோரை 2010 மே 14ம்நாள் கொழும்புக்கு அனுப்பி “பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்தமைக்கான ஒபாமாவின் வாழ்த்துக்களை” தெரிவிக்க வைத்தார்.
இரட்டை அணுகுமுறை அமெரிக்காவின் இராசதந்திர நடைமுறை. இதை த.தே. கூட்டமைப்பினர் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல் தீர்வுக்காக யாத்திரை சென்றவர்கள் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் நடக்கும் மண்பறிப்பை நிறுத்துவதற்கு அமெரிக்க உதவியை நாடியிருக்கவேண்டும்.
மண் போன பிறகு எதற்காக அரசியல் தீர்வு. குடியேற்றம் பற்றி அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஆனால் அதை தடுத்து நிறுத்த ஒரு கல்லைத் தன்னும் அது தூக்கிப் போடவில்லை. இந்தியாவும் மண் பறிப்பிற்குத் துணை போகும் நாடு தான். சம்பூர் அனல் மின் நிலையத்தை வேறெப்படி அழைக்கலாம்.
ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டிய காலம் இதுதான். அமெரிக்கப் பயணத்தில் த. தே கூட்டமைப்பைச் சேர்ந்த நால்வரும் இதைத் தான் அழுத்திக் கூறியிருக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் மாத்திரம் சுய நிர்ணய உரிமையைக் கேட்கிறார்கள் என்ற வாதம் அர்த்தமற்றது. ஈழத் தமிழர் அனைவரும் கேட்கிறார்கள் என்பதே உண்மை.
த.தே கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணத்திற்கு நிகரான முக்கியத்துவம் அதன் தொடர்ச்சியான கனடாப் பயணத்திற்கு உண்டு. கனடா ஈழத் தமிழர்களின் பெறுமதிமிக்க நட்பு நாடு. எதிர்பாராத வரவு என்று கூடச் சொல்லலாம். இராசதந்திர மொழியில் பேசாமல் வெளிப்படையாகப் பேசும் கனடாப் பிரதமரின் பேச்சு நொந்துபோன ஈழத்தமிழர்களுக்கு இதமாக இருக்கிறது.
தமிழர்கள் கனடாவில் வலுவான அரசியல் சக்தியாக மாறுவதையும் கட்சி பேதமின்றி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதையும் உலகத் தமிழர்கள் வியப்புடன் பார்க்கின்றனர். ஞாயிறு மாலை ஒக்ரோபர் 3ம் நாள் ஸ்காபரோ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் குழுமிய மக்கள் சம்பந்தன் குழுவை வரவேற்றனர்.
சம்பந்தனின் பேச்சு சில உண்மைகளைப் பூடகமாக எடுத்துக் கூறியது. அதில் முதலாவது தமிழர்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் வாழும் உரிமையை இலங்கை அரசு பறிக்கின்றது தமிழர் அடையாளங்களை அழிப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது.
இரண்டாவதாக ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் உதவியோடு அவற்றைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சி செய்வதாகவும் மிகவும் நிதானமான நகர்வுகளை மேற்கொள்வதாகவும் அவர் சொன்னார்.
மூன்றாவதாக இலங்கை அரசுடன் பேசும்படி அமெரிக்கா கூறுகிறது. அதையே இந்தியாவும் கூறுகிறது என்றார் சம்பந்தன். இதில் நம்பிக்கை தரும் அம்சங்கள் இல்லை. நீங்கள் கேட்பதை எல்லாம் எம்மால் தர முடியாது என்று ஏற்கனவே அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிவிட்டார். அப்படியானல் எதற்குப் பேச்சுக்கள்? பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு வழங்காமல் இஸ்ரேலுடன் பேசும் படி இப்படித் தான் அமெரிக்கா கூறிக் கொண்டு இருக்கிறது.
என்றாலும் த.தே கூட்டமைப்பினரின் பயணம் உடனடிப் பயன் தராவிட்டாலும் முக்கியமானதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசுவதற்கு மேற்கு நாடுகள் தயாராகியுள்ளன. இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. அரசுகளுடன் மாத்திரம் பேசும் அமெரிக்கா தமிழ் கட்சியுடன் பேசத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அரச அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய மூன்று நாட்பேச்சு வாரத்தைகளின் தாக்கம் பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை அதே சமயத்தில் அமெரிக்க நிர்வாகம் எந்த நோக்கில் இந்த அழைப்பை விடுத்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாதிருக்கிறது.
த.தே கூட்டமைப்பு ஒன்றை மாத்திரம் தவறாது மனங்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் உங்கள் பலம். தாயகத் தமிழர்கள் வாய்பேச முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள. ஈழத்தமிழனத்தின் தற்காப்புக் கவசமாக இருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் மாத்திரமே.
- ஈழம் பிரஸ்

No comments:

Post a Comment