Translate

Wednesday, 16 November 2011

ஈழம்: பூதங்கள் புகுந்த தேசம்


-தீபச்செல்வன்- 
 
ஈழம் என்கிற தமிழர்களின் வாழ்நிலத்தில் இலங்கை இராணுவத்தினர் தொடங்கிய பூத நடவடிக்கை தற்போது தோல்வி அடைந்துள்ளது. உலகத்தின் எந்த மக்களும் பார்த்திருக்காத பூதங்களை ஈழத்து மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பூதங்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தமிழ் பேசும் மக்களை அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளியிருந்தன. இலங்கை - ஈழ அரசியலின் முரண்பாட்டு ஆயுதமாகவும் போராடும் மக்களின் மன நிலைகளைக் குழப்பிச் சிதைக்கும் உளவியல் கருவியாகவும் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளுவனாகவும் பூதப்படை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் இலங்கை அரசாங்கம் இந்தப் பூதங்களை உருவாக்கியிருக்கிறது. 

யாராலும் நம்ப முடியாத வடிவமைப்பைக் கொண்ட ஒரு படையை இலங்கை அரசு உருவாக்கியதன் மூலம் மக்களுக்குள் மக்களையே திருப்பிவிடும் உபாயத்துடன் பூதப்படைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இலங்கை - ஈழ அரசியலில் மீண்டும் ஒரு தடவை பூத நடவடிக்கைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. ஈழப் போராட்டத்தில் மீண்டும் ஒரு சூழவிடத்தை அவை உருவாக்கியிருக்கின்றன. ஈழத்து மக்களை கடந்த அறுபது வருடங்களாக ஒடுக்கி ஆண்டு வரும் அரசாங்கம் அதன் தொடர்ச்சியாகப் பூதப்படைகளை உருவாக்கியிருந்தது. கடந்த முப்பதாண்டுக் காலமாக யுத்தத்தில் ஈழத்து மக்களைப் படு கொலை செய்த அரசாங்கம் இரக்கமற்ற பூதப்படையை உருவாக்கி மேலும் பலிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டது.

மனிதப் படுகொலைகளைச் செய்வதில் இன்று உலகில் பெரும் பெயரைப் பெற்றிருக்கிற இலங்கை இன்றைய நவீன யுகத்தில் இந்தப் பூதப்படையை உருவாக்கி அதன் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தியது அதன் போக்கின் பயங்கரவாதப் போக்கை மீண்டும் வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்களைப் பலியெடுப் பதிலும் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதிலும் இன்னும் தீராத பசியோடு அலைந்துகொண்டிருக்கிற போக்கைத் திமிரோடு செய்கிறது. ஜனநாயகத்தையும் அமைதியையும் இல்லாமல் செய்து மக்களின் இயல்பான வாழ்வை முடக்கிப் போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைத்தனம் மிக்க அரசியல் புத்தியுடன் இந்தப் பூதப்படைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டிலும் ஈழத்து மக்கள் இத்தகைய பூதப்படைகளை எதிர்கொள்ள வேண்டியதென்பது மிகவும் கொடிய அனுபவமாக நிகழ்ந்துள்ளது.

ஈழத்தில் பூதங்கள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்வைச் சிதறடித்தபோது இலங்கை அரசாங்கம் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்தது. கடந்த காலங்களில் இராணுவச் சீருடைகளை அணிந்துகொண்டு மக்களைப் பலியெடுத்தவர்களும் வெள்ளை வாகனங்களில் வந்து மக்களைக் கடத்திச் சென்றவர்களும் மோட்டார் சைக்களில் சென்று மக்களைச் சுட்டுக் கொன்றவர்களும் பூதங்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு களத்தில் இறக்கப்பட்டார்கள். உடலில் கறுப்பு நிற கிறிஸ் பூசிக்கொண்டு நகங்களில் கூரிய கத்திகளை அணிந்துகொண்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பூதங்கள் மக்கள்மீது தாக்குதல்களைத் தொடங்கியிருந்தன.

இந்தப் பூத நடவடிக்கைகள் முதலில் தெற்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டன. பூதங்கள் இறக்கிவிடப்பட்ட முன் நாட்களில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் கிழக்கில் திருகோணமலை போன்ற இடங்களில் அவை விரிவுபடுத்தப்பட்டன. நாளடைவில் வவுனியாவை வந்தடைந்த பூதங்கள் கிளிநொச்சிக்கும் பரவியதுடன் இறுதியில் யாழில் உச்சகட்டமான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பூதப்படைகளின் நடவடிக்கைகள் பற்றிப் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிரான சிங்களக் கட்சிகள் விவாதங்களைக் கொண்டுவந்தபோது அப்படி எதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் திருடர்கள் என்றும் பல்வேறு தேவை உடையவர்கள் என்றும் மக்களே இப்படிப் பூதங்களாக மாறிக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் அரசத் தரப்பினர் வாதிட்டார்கள்.
பூதங்கள் பெண்களை இலக்கு வைத்தே அதிகத் தாக்குதல்களை நடத்தியிருந்தன. இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டதுடன் பெண்கள் அமைப்புகள் அவற்றைப் பெண்களுக்கு எதிரான வன்முறை என்றும் கண்டித்தன. மகிந்த ராஜபக்சவுக்கு இரண்டாயிரம் பெண்களின் இரத்தம் கிரகப் பரிகாரத்திற்குத் தேவைப்படுவதாலேயே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகப் பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரச அமைச்சர் பௌசி பெண்கள் இரண்டாயிரம் மார்புகளை மட்டுமல்ல இரண்டு லட்சம் மார்புகளையும் ஜனாதிபதிக்காகத் தியாகம் செய்வார்கள் என்று சொல்லிய கருத்து அமைந்திருந்தது.

பூதத் தாக்குதல்களை நிறுத்த இராணுவத்தினதும் காவல் துறையினதும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசு தீர்மானித்தது. நீண்ட காலமாக இலங்கையில் அமலில் இருந்துவந்த அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு அகற்றப்பட்டது. அதனால் இலங்கை அரசு இராணுவ மயத்தை நாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளும் நிலை உருவானது. ஈழத்தமிழர்கள் போராடத் தொடங்கியபோது அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதை எதிர்த்தும் ஈழத்து மக்கள் போராடினார்கள். அவசரகாலச் சட்டத்தின் பெயரால் ஈழத்து மக்கள் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்களும் மனித ஆர்வலர்களும் அப்பாவிகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஈழத்தமிழர்களை ஒடுக்கும் அரசச் சட்டமாக அவசரகாலச் சட்டத்தைப் பாவித்த அரசாங்கம் அதை மீளவும் நடை முறைப்படுத்தப் பூத நடவடிக்கைகளை உருவாக்கி நாட்டில் அச்சத்தை மீண்டும் கொண்டுவந்தது.
எனினும் இந்தப் பூதப்படைகளுக்கு மக்கள் காட்டிய வெளிப்பாடுகள் அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தன. ஈழத்து மக்களின் வாழ்க்கை பற்றிய அக்கறையும் அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் இந்தப் பூதப்படைகளைச் சிதறடித்தன. மாவிலாற்றில் இருந்து முள்ளி வாய்க்கால்வரை கொடிய யுத்தத்தை நடத்தி ஈழத்து மக்களைக் கொன்று பெரும் அவலத்திற்குத் தள்ளிய அரசு தொடர்ந்தும் ஈழத் தமிழ் மக்களின் அரசியலை ஒடுக்குவதற்குப் பூதப்படையைத் தமிழர் நிலத்தில் நகர்த்தியது. பூதங்கள் வடக்கு-கிழக்கையோ அரசியலையோ ஈழத் தமிழர்களையோ இலக்காக் கொண்டவை அல்ல என்ற பிரமையை உருவாக்கவே தெற்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அவை வடக்கு- கிழக்கிலே தான் உச்சகட்டமான வன்முறைகளை நிகழ்த்தி அச்சத்தை விரிவாக்கின.

திருகோணமலையில் கிண்ணியா என்ற முஸ்லீம் பிரதேசத்தில் பூதங்கள்மீது மக்கள் தாக்குதல்களை நடத்தினார்கள். தாக்குதலுக்கு உள்ளான பூதங்கள் இலங்கைக் கடற் படையினரின் முகாமிற்குள் நுழைந்தன. பூதங்களை வெளியில் அனுப்பும்படி மக்கள் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அந்தக் கடற்படை முகாம்மீது தாக்குதலையும் நடத்தினார்கள். கிழக்கிலும் தெற்கிலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் பூதங்கள்மீது மக்கள் கடும் தாக்குதல்களை நடத்தினார்கள். சில இடங்களில் பூதங்கள் கொல்லப்பட்டும் இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்கிற கடற்பிரதேசத்தில் பூதங்கள் புகுந்தபோது அவற்றை மக்கள் பிடித்துக் கடும் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது சம்பவத்தில் நுழைந்த இராணுவத்தினர் பூதங்களைக் காப்பாற்றிக் கொண்டுசென்றார்கள். பின்னர் பூதங்கள் இராணுவச் சீருடைகளை அணிந்து கொண்டு இராணுவத்தினருடன் இராணுவமாகச் சென்றனர். பூதங்கள் என்பது இராணுவமே! இராணுவம் என்பது பூதங்களே! என்பதை நாவாந்துறை சம்பவத்தில் அந்த மக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்கள். இராணுவத்தால் எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

அப்போதும் யாழ் இராணுவம் சம்பவத்தை மறுத்தது. யாழ் இராணுவத் தளபதி மகிந்த ஹத்துரு சிங்க பூதங்கள் என்பது வெறும் வதந்தி என்றும் யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார். மகிந்த ஹத்துருசிங்க மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தை ஆண்ட எந்த இராணுவத் தளபதியும் தனது காலத்தில் செய்யப்படும் கொலைகளை நிராகரிப்பதுடன் அதுவே சமாதானம் என்றும் அமைதி என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதி மாதம் முதல் இந்த ஆண்டின் இரண்டாம் மாதம்வரை நடத்தப்பட்ட பல மனிதப்படுகொலைகளையும் யாழ் இராணுவத் தளபதி ஏற்றுக்கொள்ளாமல் யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகிறது என்றார்.
‘மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாம்!’ என்று இராணுவம் அறிவித்தபோது, ‘பூதங்கள் இராணுவமல்ல என்றால் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளுகிறோம்!’ என்று மக்கள் பகிரங்கமாகத் தெரிவித்தார்கள். பூதங்களுக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பல இடங்களிலும் மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். போராட்டத்தையும் புரட்சியையும் புலிகளின் பயங்கர வாதம் என்று அரசு தாக்கியழிக்கும் சூழலில் புலிகளை அழித்தோம் பயங்கரவாதிகளைத் துடைத்தோம் என்று அரசு கொண்டாடும் சூழலில் இந்தப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. வீடுகளை விட்டுத் தெருவுக்கும் பூதங்கள் புகுந்த இடங்களுக்கும் வந்து மக்கள் முற்றுகையிட்டார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அடக்குமுறை மிக்க சூழலில் பூதங்களுக்கு எதிரான வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். பூதங்கள் ஈழப் பெண்கள்மீது வன்முறைகளை நிகழ்த்துவதை எதிர்த்தார்கள். ஈழப்பெண்கள்மீதான வன்முறைக்கு எதிரான போராட்டமாகத் தமது போராட்டத்தை அடையாளப்படுத்தினார்கள்.

ஈழத்து மக்களின் வாழ்வை முடக்கிப் போராட்டத்தை அழிக்கும் அரசியல்ரீதியான காரணத்தை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட பூத ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை ஈழத்து மக்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள். மக்களின் தொடர் எதிர்ப்புகளும் போராட்டங்களும் பூதங்கள் என்கிற இராணுவத்தின் நடவடிக்கைகளை முடங்கச் செய்திருக்கின்றன. கொடிய போரால் நலிவடைய வைக்கப்பட்ட மக்களிடம் இன்னும் இருக்கிற போராட்ட உணர்வையும் அழிக்கப்பட்ட மக்களிடத்தில் இன்னும் இருக்கிற வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் பூதப்படைகளுக்கு எதிரான போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. உலகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் புரட்சி வெடிக்கும் சூழலில் மிக எதிர்பாராத விதமாக ஈழத்தில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முடக்கிய ஈழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. இலங்கை அரசாங்கமும் அதன் படையினரும் ஈழத்து மக்களின் வாழ்க்கையிலும் அரசியலிலும் தொடர்ந்து எவ்விதமான ஆக்கிரமிப்பு அரசியல் நடவடிக்கைகளைச் செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்தே வாழும் ஈழத்து மக்களின் போராட்டங்களும் நடைபெறுகின்றன என்பதற்கு ஈழத்து மக்கள் பூதங்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment