Translate

Wednesday, 16 November 2011

மன்னார் சிங்கள அரசாங்க அதிபர் நியமனம்! சிங்கள குடியேற்றத்திற்கே வழிவகுக்கும்!- செல்வம் எம்.பி சீற்றம்


மன்னார் சிங்கள அரசாங்க அதிபர் நியமனம்! சிங்கள குடியேற்றத்திற்கே வழிவகுக்கும்!- செல்வம் எம்.பி சீற்றம்
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 03:55.46 AM GMT ]

தமிழ் மக்கள் வாழுகின்ற மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ் அரச அதிபரை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமித்துள்ளமை பல்வேறு பட்ட சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


மன்னார் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த என்.வேதநாயகன் அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மன்னார் மாவட்ட மக்களை கதிகலங்க வைத்துள்ளதுடன், இச் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு தமிழ் பேசுகின்ற அரச அதிபர் கடமையாற்றி வருகின்றமையே இங்குள்ள அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் குறிப்பாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிவரும் மக்களுக்கும் சாலச்சிறந்ததாக காணப்படுகின்றது.

சாதாரண குடிமகன் ஒருவருக்கு சிங்கள மொழியோ அல்லது ஆங்கில மொழியோ தெரியாத நிலை உள்ளது. பெரும்பான்மை இன அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதனால் குறித்த பொதுமகன் தனது மொழியில் தனது பிரச்சினையை கதைக்க முடியாத நிலை ஏற்படுள்ளதோடு அரசாங்க அதிபருக்கும் பொது மகனுக்கும் இடையில் இடைத்தரகர்கள் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனால் குறித்த பொதுமகனின் தேவை பூர்த்தியாக்கப்படாமலே காணப்படும் நிலையில் இடைத்தரகர்கள் பலனடைவதற்காண சாத்தியங்கள் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டம் தற்போது இலங்கையில் முக்கிய மையமாக திகழ்ந்து வருகின்ற நிலையில் மன்னார் வளைகுடா கடற்பரப்பில் எரி பொருட்கள் கண்டு பிடிப்பு, தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான கடல் போக்குவரத்துச் சேவை, தென் பகுதியில் இருந்து தலைமன்னார் வரையிலான நேரடி ரயில் போக்குவரத்துச் சேவை என்பனவும் இடம்பெறவுள்ளது. இதனால் எமது மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நன்மையடைய வேண்டும்.

ஆனால் பெரும்பான்மையின அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் அச்செயற்பாடும் தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதோடு குறித்த செயற்பாடுடன் வரக்கூடிய வேலைகள் அனைத்தும் தமிழ் மக்களை விட்டு தென்பகுதி மக்களை சென்றடையக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் புதிய அரச அதிபரின் நியமனம் உந்து சக்தியாக காணப்படுவதாக மக்களும் அதிகாரிகளும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை விட்டு இடம் பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். அவர்களும் உரிய காலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும். யுத்தத்தின் பின் பல அழிவுகளை சந்தித்த வன்னி மக்கள் மீண்டு தமது இயல்பு நிலைக்கு அழைத்து வரப்பட வேண்டும். அதற்கு மன்னார் மாவட்டத்தின் தலைமைத்துவம் சரியான முறையில் செயற்பட வேண்டும்.

பெரும்பான்மையின அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள நகர சபை மற்று பிரதேச சபை ஆகியவை ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்து அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதே சமயம் மன்னார் மாவட்ட மக்களிடம் இவ் நியமனத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பப்படவுள்ளது.

எனவே தமிழ் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அரச அதிபர் கடமையில் இருந்த போதும் அவரை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமித்துள்ளமை பல்வேறு பட்ட சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களிலும் பல்வேறு பட்ட சந்தேகங்கள் இனி வரும் காலங்களில் ஏற்படவுள்ளது.

எனவே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசுகின்ற ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் நியமிக்கும் பட்சத்தில் மட்டுமே மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை உரிய முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி,

மன்னார் மாவட்டத்திற்கு உடனடியாக தமிழ் பேசுகின்ற அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment