Translate

Tuesday, 1 November 2011

இறையாண்மை எங்கே?


இன்றைய அரசியலில் இறையாண்மை என்று சொல்லாத நாளே இல்லை. எங்கிருந்து வந்தது இறை யாண்மை? யாருக்காக வந்தது இறையாண்மை? தற்போது யாரிடம் உள்ளது இந்த இறையாண்மை? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. SOVEREIGNTY என்ற சொல்லிற்குப் பொருள், “அரசாளுகிற உரிமை” என்பதேயாகும். எந்தக் காலத்திலும் இறைவன் இருந் ததில்லை. இல்லாத இறைவனுக்கு ஆண்மையும் இல்லை. இல்லாத ஒன்றை இறையாண்மை என்று குறிப்பிடுவது பார்ப்பனியக் குறும்பாகும்.


உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் அரசு தனது குடிமக்களையும், எல்லைகளையும் பாதுகாக்கிற தன்னிகரற்ற உரிமையைத்தான் அரசாளுகிற உரிமை என்று குறிப்பிடுகிறார்கள். ஒற்றையாட்சி முறையில் நடுவண் அரசிற்கு முழு அரசாளுகிற உரிமை சட்டப்படி அமைந் துள்ளது. கூட்டாட்சி முறையில் அரசாளுகிற உரிமை மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளுக்குப் பிரித்தளிக் கப்படுகிறது. மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளுக் கிடையே அதிகாரங்கள் சம உரிமையுடன் கூட்டாட்சியியலைப் (Federalism)) பின்பற்றுகின்ற நாடுகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே தான் ஒரு நாட்டின் பல அரசுகளுக்கிடையே சமமாக அரசாளுகிற உரிமை யைப் பகிர்ந்தளிக்கும் முறைமையைக் (Federalism implies divided sovereignty) கூட்டாட்சியில் வழங்கு கிறது என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அரசாளுகிற உரிமை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அரசமைப்புச் சட்டத்தின்படி பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேலானது, மாநில அரசு கீழானது என்ற மேலாதிக்க அடுக்குமுறைகள் உண்மையான கூட்டாட்சியியல் பின்பற்றுகிற நாடு களில் காணப்படுவதில்லை. மொழி உரிமையையோ, இன உரிமையையோ, சமய உரிமையையோ எந்தத் தரப்பினரும் பறித்துவிட முடியாது. கூட்டாட்சியிய லைப் பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே வாழ் கின்ற மக்கள் சமநிலையில் மதிக்கப்படுவார்கள். இது தான் உண்மையான பகிர்ந்தளிக்கப்பட்ட அரசாளுகிற உரிமையின் (Symbol of Divided Sovereignty) அடையாளமாகும்.

மேற்கு ஜெர்மனியில் இயங்கி வரும் அமைதி ஆய்வு நிறுவனம் (Peace Research Institute, Frankfurt), 2000ஆம் ஆண்டில் வெளியிட்ட தனது ஆய்வறிக்கை யில், சுவிட்சர்லாந்து கூட்டாட்சிதான், தேசிய இனச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னோடி நாடாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு முதன்மையான காரணம், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு இன மக்கள் வாழ்கின்ற சுவிட்சர்லாந்து நாட்டில் அரசாளுகிற உரிமை சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் புருனோ ஸ்காட்சு தனது அறிக்கையில் (Switzerland - A Model for Solving Nationality Conflicts) குறிப்பிடுகிறார். 

இதுபோன்ற அணுகுமுறையை, இந்தியா விடு தலைக்கு முன்பும் பின்பற்றவில்லை; பின்பும் பின்பற்ற வில்லை. அரசாளுகிற உரிமைக்கு அளிக்கப்படுகின்ற விளக்கமே இக்கூற்றிற்குச் சான்று பகர்கின்றது. பிரித் தளிக்கப்படுகிற அரசாளும் உரிமை (Divided Sovereignty) என்ற கொள்கை இந்திய அரசமைப்புச் சட்டம் உரு வான போதே புதைகுழிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்னர் காங்கிரசுக் கட்சி பல தீர்மானங்களை நிறைவேற் றியது. 1927ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக சில கருத்துருக்களை உருவாக்க இங்கி லாந்து ஏகாதிபத்தியம் சைமன் குழுவை அறிவித்த போது அன்றைய காங்கிரசார் கொதித்தெழுந்தனர். அக்குழு வருவது இந்திய மக்களை அவமதிக்கும் செயல் என்று கூக்குரலிட்டனர்.

நேருவின் தந்தை மோதிலால் நேரு, மே 17, 1927ஆம் ஆண்டு பம் பாயில் நடந்த காங்கிரசு மாநாட்டில், மத்திய, மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும், அரசியல் தலைவர்களையும் கலந்து இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை அமைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். இத்தீர்மானத்திலும் வாரிசு அரசியலின் சாயல் எதிரொலித்தது. தந்தை முன்மொழிந்த தீர் மானத்தை, மகன் ஜவகர்லால் நேரு 1927ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் சென்னையில் நடந்த காங்கிரசு மாநாட்டில் - விடுதலை பெற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்று விளக்கமளித்தார். 1928ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் பம்பாயில் நடைபெற்ற காங்கரசு மாநாட் டில் மோதிலால் நேரு தலைமையில் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கான கொள்கைகளை வகுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரைவினை ஆகஸ்ட் 10, 1929இல் அளித்தது. இந்திய மக் களுக்கு அரசாளும் உரிமை, அடிப்படை உரிமை, மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரங்களை அளிக் கக்கூடிய கூட்டாட்சி முறைமையைப் பின்பற்றுவது, சிறுபான்மையருக்குச் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு செய்வது போன்ற செயல் திட்டங்கள் இவ்வரைவில் முன்மொழியப்பட்டன.

1929-1946ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் காங்கிரசு, மாநிலங்களுக்குத் தன்னாட்சி அளிக்கும் மேற்குறிப்பிட்ட கொள்கையை மாற்றிக்கொண்டது. 1946 டிசம்பர் 13ஆம் நாள் அரசாளுகின்ற உரிமையுடன் கூடிய ஜனநாயகக் குடியரசை ஜவகர்லால் நேரு, அரசமைப்புச் சட்ட அவையில் முன்மொழிந்தார். இத்தீர்மானத்தில் கூட்டாட்சி அரசமைப்பு முறைமை பின்பற்றப்படும் என்றும், எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்றும், இறுதியாக அரசாளுகிற உரிமை மக்களுடையது என்றும் சுட்டப்பட்டது.

இவ்வாறு நேரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டாலும், நடைமுறையில், 1950ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட அரசமைப்புச் சட்டம் ஒரு அரைக் கூட்டாட்சியியல் (Quasi Federal) சட்டமாகத்தான் நடைமுறைப்படுத் தப்படுகிற மத்திய அரசின் பட்டியல், மாநிலப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்கள் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டன. எஞ்சிய அதிகாரங்களும்மத்திய அரசிடமே ஒப்படைக்கப்பட்டன. கடந்த 61 ஆண்டுகளில் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கல்வி, பொதுச் சுகா தாரம், சமூகநலன் போன்ற மக்கள் நலன் போற்றும் பல அதிகாரங்கள் பொது அதிகாரப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மத்திய அரசு, மாநில அரசுகள் தனித் தனியாகவும், இணைந்தும் மக்களின் நலனிற்காகச் சட்டங்களையும், திட்டங்களையும் வகுக்கக் கூடிய அதிகாரம் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனி னும், பொதுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகா ரங்கள் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டால், மத்திய அரசு இயற் றும் சட்டமே செல்லுபடியாகும். மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களை அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 200, 201ன்படி ஆளுநரிடமும், குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெற வேண்டும். அப் போதுதான் அச்சட்டம் முழுமை பெறும்.

இப்பிரிவுகள் தொடர்பாக மத்திய-மாநில உறவு களை ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா குழு (1983), ஒரு முதன்மையான கருத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
1977லிருந்து 1985ஆம் ஆண்டு வரை 1130 சட்டங்கள் மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற் றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப் பப்பட்டன. இவற்றில் 1039 சட்டங்களுக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். 31 சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 5 சட்டங்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். 55 சட்டங்கள் 1985 நவம்பர் 22ஆம் நாள் வரை குடியரசுத் தலைவர் அலுவலகத் திலேயே கிடந்தன. மத்திய-மாநில அரசுகளுக்கு இடை யே காணப்பட்ட கருத்து வேறுபாடுகளால் இச்சட் டங்கள் ஒப்புதல் தரப்படவில்லை.

தமிழ்மொழியை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தது. தமிழைக் கூடுதல் மொழியாக வழக்கு நடவடிக்கைகளில் பயன் படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றமும், 2006 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அது, ஆளுநரின் பரிந்துரையுன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இன்றுவரை குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடவில்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் 150ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நீதிநாயகம் திரு. கே. சந்துரு இந்து நாளிதழில் (ஆகஸ்ட் 15) எழுதிய கட்டுரையில் கவலை தெரிவித்துள்ளார்.

செம்மொழியான தமிழுக்கு மத்திய அரசு அளித்த மதிப்பு இப்போது புரிகிறதல்லவா? மாநில அரசு தனது அதிகார வரம்பிற்குள் இயங்குகிற நீதிமன்றத்தில் தாய் மொழியான தமிழைப் பயன்படுத்துவதற்குக்கூடக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற இழிநிலை உள்ள இந்திய நாட்டில், அரசாளும் உரிமை என்பது இந்திக்கும் ஆங்கிலத்திற்கும் மட்டுமே என்பது- கூட்டாட்சி இயலையும், பன்முகத் தன்மையையும், தமிழரின் உரிமையையும் சிதைக்கின்ற செயல்- திட்டமிட்டு தமிழையும், தமிழரையும் தாழ்த்துகிற செயலல்லவா! இதிலிருந்தே கூட்டாட்சி இயலில் முதன்மைக் கூறான, “பகிர்ந்தளிக்கப்படுகிற அரசாளு கிற உரிமை (Divided Sovereignty)” அறவே இல்லை என்பது புலனாகிறது. கடந்த 61 ஆண்டுகளாகக் கடை பிடிக்கப்பட்ட நடைமுறைகளாலும், சட்டங்களாலும், திட்டங்களாலும் இந்தியா ஒரு ஒற்றையாட்சி முறைப் பக்கமே சாய்ந்து வருகிறது. இதனால், மாநிலங்கள் இன்றைக்கு மத்திய அரசின் மறைமுக நிர்வாக அமைப்புகளாகவே மாறிவிட்டன.

திருவாங்கூர் தனி நாடாக வேண்டும் என்ற கருத்தை 1947இல் முன்மொழிந்த சர். சி.பி. இராம சாமி ஐயர் தலைமையில் 1962இல் மத்திய அரசு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைத்த போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், மத்திய அரசினுடைய முரண்பட்ட செயலை நகைச்சுவையோடு, 1962ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவையில் தனது முதலு ரையில் “ஐயா நான் கூறுவதைத் தவறாகப் புரிந்து கொண்டால்கூடப் பரவாயில்லை. ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற சொல்லே முரண்பாடு மிக்கதாகும். மக்கள் ஒன்றுசேர்ந்த பிறகுதான் நாடே உருவாகிறது. மக்கள் இணைந்து நாடாகிவிட்டால், ஒருமைப்பாட்டிற்கு எங்கே அவசியம் வந்தது? எனவே, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற சொல்லைக் குறிப்பிடுவது காலப்போக்கில் தத்து வத்தின் வறுமையை எடுத்துக்காட்டுகிறது. எனவே, நான் குறிப்பிடுகிறேன் : இதைப் பற்றி மறுசிந்தனையை மேற்கொள்வோம்” (Sir, may I, even at the expense of being misunderstood, point out that the very term “national Integration” is a contradiction in terms? People integrated a nation and if they become a nation, where is the necessity for integration? Therefore, that term ‘national integration’ shows the poverty of ideas which has been holding us up all this time.I would, therefore say this : Let us rethink.” - Anna Speaks - At the Rajya Sabha 1962- 66, P.8) என்று குறிப்பிட்டார். இவ்வுரைக்குப் பிறகும் மத்திய அரசு மக்கள் உரிமைகளை ஒடுக்குகிற சட்டங் களைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யது.

அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட அடிப் படை உரிமைகளில் பேச்சு ரிமையும், எழுத்துரிமையும் அடங்கும். இந்தப் பேச்சுரி மையைக்கூடக் கட்டுப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது திருத்தம் 1963இல் கொண்டு வரப்பட்டது. பேச்சுரிமையிலும், கருத்துச் சுதந்திரத் திலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. நாட்டி னுடைய ஒற்றுமைக்கும், அரசாளுகிற உரிமைக்கும் அறைகூவல் விடுக்கின்ற பிரிவினை கோருகிற உரிமை தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றும் போது ஓர் அரிய கருத்தைப் பதித்துள்ளார். “எங்களுடைய கோரிக்கை (பிரிவினை), அரசாளுகிற உரிமைக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று ஏன் கருதுகிறீர்கள்? இதற்குப் பதில் அளிப்பதற்கு முன்பாக, அரசாளுகிற உரிமை யைப் பற்றித் தெளிவு பெறவேண்டியது அவசியம்.

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் அரசாளுகிற உரிமை என்கிற அரசியல் உரிமை மக்களிடம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாளுகிற சட்ட உரிமை, மத்திய-மாநில அரசுகளுக்குப் பகிர்வு செய்யப்பட் டுள்ளது. எங்களுடைய கொள்கைத் திட்டத்தை ஏற்றுச் சிறப்புமிக்க மேலும் அதிகாரங்களை வழங்குகின்ற அரசாளுகிற உரிமையை மாநிலங்களுக்கு ஏன் அளிக்கக் கூடாது? ஏன் இக்கண்ணோட்டத்தோடு இக் கருத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது? நாங்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கேட்டவுடன் அரசாளுகிற உரிமையின் அடிப்படையைத் துண்டிக்கிறோம் என்று ஏன் கருதுகிறீர்கள்? அரசாளுகிற உரிமை ஒரு பகுதி யில் மட்டுமே முழுமையாகக் குவிந்திருக்கவில்லை. நாம் கூட்டாட்சி அமைப்பை ஏற்றிருக்கிறோம். எனவே தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் ஒரு ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக ஒரு கூட்டாட்சி முறை தேவை என்று கருதினார்கள். காரணம், பல்வேறு அரசியல் மெய்யியல் அறிஞர்கள் குறிப் பிட்டபடி இந்தியா ஒரு பரந்துபட்ட பகுதி - உண்மை யில் இது ஒரு துணைக்கண்டமாகத்தான் அழைக்கப் படுகிறது. இதன் மனப்பாங்கு பல்வேறுபட்டது. அதனு டைய மரபுகள் வேறுபட்டவை. வரலாறு மாறுபட்டது. எனவே ஒர் எஃகு போன்ற திடமான ஒரு ஒற்றை யாட்சி முறை இருக்கக் கூடாது” (Anna Speaks - At the Rajya Sabha 1962-66, P.38)

என்று, அழகுற அண்ணா எடுத்துக் கூறி நாட்டையே வியப்பில் ஆழ்த்தினார்.
“இதே எண்ண ஓட்டத்தில்தான் அறிஞர் அமர்த்தியா சென் இந்தியாவைப் பற்றி ‘வாதிடும் இந்தியன்” என்ற தனது நூலில், “இந்தியா என்பது பெருமளவில் வேறுபாடுகளையுடைய பல தனித்தன்மைகள் மிக்க குறிக்கோள்களையும், மிகப் பெரிய அளவில் முற்றி லும் வேறுபட்ட நம்பிக்கைகளையும், பரந்து மாறுபட்ட பழக்கவழக்கங்களையும், பல கோணங்களில் ஓர் உண்மையான கருத்து விருந்தளிக்கக்கூடிய ஒரு நாடாக உள்ளது” (The Aurgumentative India by Amartya Sen, Preface) என்று அறிஞர் அண்ணாவின் கருத்தை, 2005இல் வழிமொழிந் துள்ளார். ஆனால், நடப்பது என்ன? அரசாளுகிற உரிமை இன்று பகிர்ந்தளிக்கப்படுகிறது. மக்களுக்கா, மாநிலங் களுக்காக என்றால் இல்லை.

காஷ்மீர் மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் 64 ஆண்டுகளாக வாடுகிறார்கள். உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவினுடைய பல இலட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அசாம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய பகுதிகளில் வலிமையான மக்கள் போராட்டங்கள் தன்னாட்சி உரிமைகளுக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கெல்லாம் அடக்குமுறையே பதிலாகத் தரப்படுகிறது. ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம் போன்ற மாநி லங்களில் வாழும் ஆதிக்குடிகள் தங்கள் வாழ்வாதாரங் களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள். இவர்கள் எல்லாம் மக்களாகத் தெரிய வில்லையா? அப்படி என்றால் அரசாளுகிற உரிமை மக்களுக்கு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது யாருக்கு? விளங்கவில்லையா? மன் மோகன்சிங்கின் ஆட்சியை ஒரு முறை நோக்குங்கள். பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் இந்தியாவின் புனிதமான அரசாளுகிற உரிமை அள்ளி அள்ளி ‘ஆடித்தள்ளுபடி’ போல் அளிக்கப்படுகிறது.

மாநில அரசுகளிடம் இருந்து 61 ஆண்டுகளாகப் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் இன்று “தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்” என்ற உலக வங்கியின் நெருக்குதலின்படி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தாரைவார்க் கப்படுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரிவுகள் 27 துறைமுகம், 28 வான்வழிப் போக்குவரத்து, 31 அஞ்சல், தந்தி, தொலைபேசி, கம்பியில்லா ஒளி, ஒலி பரப்பு, இதர ஒளி, ஒலிபரப்பு, 45 வங்கி, 47 காப்பீடு, 48 பங்குச் சந்தை, எதிர்காலச் சந்தைகள், 49 காப்பீடு தொடர்பான இனங்கள் ஆகியன பன்னாட்டு முத லாளிகளுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் எந்தவித அரசமைப்புச் சட்டத் திருத்தம் இல்லாம லேயே அரசாளுகிற உரிமைகள் தாரை வார்க்கப் பட்டுள்ளன.

இவ்வித இழிவான சூழலில், இந்திய அரசியல், பன்னாட்டு முதலாளிகளால் வழிநடத்தப்படுகிறது. ஈழத்தில் தமிழன் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன? முள்வேலியில் நின்றால் என்ன? எங்களுக் குக் கவலை இல்லை. எத்தனை முறை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தாலும், எத்தனை முறை சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவைகள் எல்லாம் மத்திய அரசினுடைய குப்பைத் தொட்டியில்தான் போய் விழும். ஏனென்றால், மாநிலச் சட்டமன்றங்கள் மக்கள் நலனிற்காக இயற்றிய பல சட்டங்கள், தில்லியில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, சட்டமன்றத் தீர்மானங்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்?
என்றைக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன்னாட்சி பெறுகிறதோ, என்றைக்குத் தில்லியின் முதலாளித்துவ மேலாதிக்கமும், மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் உடைக்கப்படுகிறதோ - அன்றைக் குத்தான் மக்களின் உரிமைகள் போற்றப்படும். மக்க ளுக்கும் மாநிலங்களுக்கும் உண்மையான அரசாளுகிற உரிமை கிட்டும். இது உறுதி.

நன்றி- கீற்று

No comments:

Post a Comment