தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான் உங்களுக்கு 7-6-2011, 21-6-2011, 10-10-2011, 7-11-2011 ஆகிய நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல், தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை கடிதம் எழுதியும் பயனில்லை
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தமிழ்நாட்டு பிரச்சினையாகப் பார்க்காமல், தேசிய பிரச்சினையாகவும், இந்திய மீதான தாக்குதலாகவும் கருத வேண்டும் என்று ஏற்கனவே உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களுக்கு பல முறை கடிதம் எழுதியும், நீங்கள் இந்தப் பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுபோன்ற தாக்குதல்கள் இனிமேல் நடக்காது என்று அவர்கள் உறுதி அளித்த பிறகும், தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருவதை மிகுந்த கவலையோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால், நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது.
கடந்த 15-11-2011 அன்று கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்கல் நடத்தியதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். ஒரு அதிவேக ரோந்துப் படகில் வந்த 15 இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், செல்வராஜ் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கொந்தளிப்பில் மீனவர்கள்
ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த நிலையில் அவரை உடன் வந்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து, பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. தங்களது பிழைப்பிற்காக எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில், இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது, மீனவ சமுதாயத்தினர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வையும், பல முறை வேண்டுகோள் விடுத்தும், இந்த தாக்குதலை தடுக்கத் தவறிய மத்திய அரசின் செயல்படா தன்மை மீது நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் இலங்கை அரசாங்கம் இரட்டை வேடம் போடுவது பற்றி தங்களிடம் நான் ஏற்கனவே கவலை தெரிவித்திருக்கிறேன். கடலில், வழிதவறிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும் என்று ஒருபுறம் அறிக்கை வெளியிடும் இலங்கை அரசாங்கம், மறுபுறம் தனது நாட்டு கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
4 முறை கடிதம் எழுதியும் அசையாத பிரதமர்
இலங்கை கடற்படை காலிகளால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சமீப மாதங்களில் 4 முறை பிரதமருக்கு கடிதம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால் இதுவரை பிரதமர் தரப்பிலிருந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தற்போது 5வது முறையாக அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இப்போதாவது பிரதமர் அசைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment