Translate

Wednesday 14 December 2011

நோக்கு வர்மம் - ஆர். நடராஜ்

ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புத்தாயிர இலக்குகள் ஒன்று நிர்ணயித்தது. வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவை இதில் அடங்கும். "மில்லனியம் கோல்ஸ்' என்ற இந்த இலக்குகள் 2015-க்குள் எட்டப்பட வேண்டும். அதற்கு எல்லா நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



ஐக்கிய நாடுகள் சபை, நாட்டில் நல்லாட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் விவரித்துள்ளது. வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புணர்ச்சி, திறமை, செயல்திறன் நிரம்பிய அரசு அமைப்புகள், வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி பல தரப்பினரின் பங்களிப்புக்கு ஏதுவான நிர்வாகம், குறை நிறைகளைக் கவனத்தில்கொண்டு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் இசைவான நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம். அதுவே சுயாட்சிக்கு வலிமை சேர்க்கும் நல்லாட்சி.


ஏழாம் அறிவு படத்தில் நோக்கு வர்மக்கலை எவ்வாறு தமிழகத்திலிருந்து சீனாவுக்குச் சென்று தற்காப்புக் கலைக்கே அடித்தளமாக அமைந்தது என்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. வர்மக்கலை உடலின் சக்தியை உள்ளிருத்தி மன வலிமை மூலம் வெளிப்படுத்துவது. பண்டைக்கால மருத்துவ முறைகள் சித்த வைத்தியத்தின் நெறிகளைக் கற்றறிந்த போதிதர்மர் என்ற தமிழனின் வெற்றிப்பயணம் சீன மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
நோக்கு வர்மம் மூலம் ஒருவரைத் தன் வயப்படுத்த முடியும். இந்த நோக்கு வர்மம் அவ்வபோது மக்களுக்கும் வருகிறது. நல்லாட்சி நெறிகளிலிருந்து தவறினால் தமது கோபத்தைத் தேர்தலின்போது வாக்குச்சாவடியில் காண்பிக்கிறார்கள். துருக்கி, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்களின் நோக்கு வர்மம் தீவிரமடைந்திருக்காவிடில் போராட்டம் வெடித்திருக்காது.


டிசம்பர் 10-ம் நாள் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகிறது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1997-ல் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தி வருகிறது. மனித உரிமைகள் கல்வி பாடமாகப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆய்வு மையங்களில் அமைத்தால்தான் விழிப்புணர்வு வளரும். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் புரிதலும் பல நாடுகளில் மிகக்குறைவு. இந்தியாவிலும் இதே நிலைதான். இல்லாவிடில், அடுத்தடுத்து இமாலய ஊழல்கள் தழைக்க விட்டிருப்பார்களா? நோக்கு வர்மம் என்ன, சாதாரணப்பார்வையும் மங்கி விட்டதே!


அதனால்தான் மனித உரிமைகள் விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த சமுதாயக் கருத்துப் பரிமாற்ற முறைகள் மூலம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. பேஸ் புக், ட்விட்டர், ப்ளாக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் சமுதாய இணைய தளங்கள் மூலம் மனித உரிமைகள் பற்றியும், எங்கு எவ்வாறு மீறப்படுகின்றன என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், நேர்மாறாக நமது நாட்டில் பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சர் தனி மனித இணைய தளங்களைத் தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது பலரால் ஒப்புக்கொள்ளப்படாமல் விவாதிக்கப்படுகிறது.


தகவல் பரிமாற்றம் தடையின்றி தாரளமாக இருந்தால்தான் உண்மை வெளிவரும். உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி நெஞ்சில் உறைந்திருப்பது மீதி என்பது நிதர்சனம். தர்மத்தை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏன் அது லேசில் நடவாதிருக்கிறது? ஏன் கெட்டவை எளிதில் தலைதூக்குகின்றன? நல்லவை மங்குகின்றன? எதை முதலில் செய்ய வேண்டும்? கெட்டவற்றைக் களைய வேண்டுமா அல்லது நல்லவற்றை ஊன்றிப் போற்ற வேண்டுமா?


இதுபற்றிய ஆய்வு பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ராய் பாமிஸ்டர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. காலங்காலமாகச் சரித்திரத்தில் நல்ல சக்திகள், தீய சக்திகள் இடையே போராட்டம் நிகழ்ந்துள்ளன. நாடுகள் இடையே இனம், ஜாதி, மொழி, மதம், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. தனி மனிதனிடம் தாமஸம், சாத்விகம் ஆகிய இரண்டு குணங்களும் உண்டு. அந்த குருúக்ஷத்திரப் போராட்டம் மனதில் தினமும் நிகழும்.
மேல் குறிப்பிட்ட ஆய்வில், கெட்ட நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கிறது. ஆனால், நல்லவற்றை அவ்வளவு நாம் ஆதரிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. நன்மைகள் நடக்கின்றன. அவை நல்லவற்றைப் போற்றுபவர்களுக்கு மட்டும் ஆறுதலளிக்கிறது. ஆனால் தீயவை, நன்மைகள் தீமைகள் மட்டுமன்றி, நல்லவர்கள் கொடியவர்கள் எல்லோரையும் பாதிக்கிறது, சும்மாவா சொன்னார் வள்ளுவர் ""தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்'' என்று!


தீயவை, நல்லவை எவ்வாறு நிர்வாகத்தைப் பாதிக்கிறது என்று பார்த்தால் ஒரு தீய குணம் படைத்த, லஞ்சத்தில் உழலும் அதிகாரியால் அந்த நிர்வாகமே குலையும். எவ்வாறு ஆப்பிள் கூடையில் ஓர் அழுகின ஆப்பிள் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் கெடுப்பதுபோல, நிர்வாகச் சரிவுக்கு அந்த ஓர் ஊழல் அதிகாரி போதும். கெட்டுப்போன ஆப்பிளை உடனே தூக்கி எறிவதுபோல திறமையற்றவர்கள், சுயநலவாதிகளை உடனே களையெடுத்தால்தான் நிர்வாகம் சீராக இயங்கும் என்று ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.


எந்த ஒரு நபர் தன்னை முதலில் இருத்தி சக ஊழியர்களைப் புறக்கணிக்கிறாரோ, எவர் சுயநலத்துக்காகத் துறையின் மேலாண்மையை அவமதிக்கிறாரோ அத்தகையவரை உடனே நீக்க வேண்டும். எவ்வளவு நல்ல திறமைசாலிகள் இருந்தாலும் ஒரு சுயநலக்காரர் நிறைவான பணிச் சூழலைக் கெடுத்துவிடுவார். இத்தகைய களையெடுப்பைத் திறம்படச் செய்த ஓர் அமெரிக்க நிறுவனம், திறமையாளர்கள் பிரகாசிக்கும் சூழலை உருவாக்கியதற்கான பரிசைப்பெற்றது.


ஆனால், அரசு நிர்வாகத்தில் சில இடங்களில் நேர்மாறாக நடக்கிறது. நெளிவு சுளிவு தெரிந்தவர்கள்தான் நிலைக்கிறார்கள், வேண்டப்படுகிறார்கள், போற்றப்படுகிறார்கள். இது எதனால் சாத்தியமாகிறது என்று அதிகம் ஆராய வேண்டியதில்லை. ஊழலுக்குத் துணைபோவது ஒன்றுதான் காரணம்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒவ்வொரு மாதமும் 80 லட்சம் புதிய மொபைல் போன் இணைப்புகள் பதிவாகின்றன. இதில் 90 சதவிகிதம் முன் கட்டணம் அதுவும் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு டாப் அப் செய்யும் ஏழைகள். தகவல் பரிமாற்றம் விரிவடைந்தால் வர்த்தகம் பெருகும், உழைக்கும் வர்க்கம் பயன்பெறும். இதை மேலும் வலுவடையச் செய்வதை விட்டுவிட்டு இதில் லஞ்சம் மூலம் ஆதாயம் தேடுபவர்கள் தேசத் துரோகிகள்.


ஜெயிலுக்குச் செல்வது இப்போது வெற்றியின் அடையாளமாகத் திரிக்கப்படுகிறது. ஜெயிலிலிருந்து தாற்காலிகமாக வெளிவருபவர்களுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாட்டின் நலனுக்காகப் போராடி சிறைவாசம் செய்து தியாகம் செய்தவர்கள் எங்கே? மக்கள் பணத்தை சூறையாடி சட்டத்தை அவமதிப்பவர்கள் எங்கே? தாழ்ந்துவிட்ட தமிழகமே என்று வேதனைப்படாமல் இருக்க முடியாது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று அமைத்து பொது நலத்தில் ஈடுப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி அரசு அமைப்புகளோடு தொடர்பு கொள்வதில் உள்ள சிக்கல்களை மனம்வெதும்பி தனது இணையதளத்தில் விவரிக்கிறார். பொதுவாக அரசு நிர்வாகத்தில் சுயநலவாதிகள்தான் அதிகம்.
தில்லி அரசு அலுவலகங்களில் விளையாட்டாகக் கூறுவார்களாம் "முதலில் என் சொந்த வேலை, பின்பு உன்னுடையது நேரம் இருந்தால் அரசுப் பணி' என்று! இந்த நிலை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது உண்மை. அரசு நிர்வாக அமைப்பில் எடுக்கக்கூடிய முடிவுகளை எதிர்த்து முறையிட வழியில்லை. எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்குச் செல்ல சாத்தியமில்லை. பல முடிவுகள் தவறு மட்டுமல்ல, தார்மிக அடிப்படையில் கொடியவை என்று மனம் வெதும்புகிறார் அந்த உயர் அதிகாரி.
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையம் உள்ளது. தகவல் அறியும் சட்டம் உள்ளது, அதற்கான ஆணையம் இயங்குகிறது. அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு இந்த அமைப்புகளின் கடமை முடிந்துவிடுமா? எவ்வளவு சமூக ஆர்வலர்கள் போராடி முடிவுகள் பெற வேண்டியிருக்கிறது. இந்த ஆணையங்களில் உள்ளவர்கள் சுய உந்துதலோடு செயல்படுகிறார்களா? மக்களுக்கு எந்த அளவு உதவுகிறார்கள்?


சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் மலங்களை மனிதர்கள் சுமந்து அகற்றும் நிலை இன்னும் பல கிராமங்களில் இருக்கிறதே, கை வண்டி இழுத்து உடல் நோக சிலர் உழைத்து ஜீவிக்க வேண்டியிருக்கிறதே, எச்சில் இலைகளில் மீதம் உள்ளவற்றை வைத்து வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறதே, தங்கும் இடம் இல்லாததால் கல்லறைக்கு அருகில் ஒண்டி குடும்பம் நடத்தும் அவல நிலை இன்றும் இருக்கிறதே. இவை எல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா? பொதுவான புள்ளிவிவரங்கள் சங்கடமில்லா தகவல்கள் தவிர தேவையான தகவல்கள் பெற முடிகிறதா? தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்களுக்காகப் போராடிய சத்யேந்திர தூபே, நாகராஜன் போன்ற 15 சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையான நிலைமை. அவர்கள் செய்த ஒரே குற்றம் நிர்வாகத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தது ஒன்றுதான்.
தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி. மனித உரிமைகள் தினத்தை ஒட்டியே அந்த மகா கவியின் பிறந்த தினமும் வருகிறது. ஜகத்தினை அழிப்பது அல்லது திருத்துவது ஒருபக்கம், குறைந்தபட்சம் கேள்வி கேட்பவருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர் ஏதோ சமூக எதிரிபோல பார்க்கப்படுகிறார் வன்முறைக்கு பலியாகிறார். இதுதான் வேதனை. தமது உரிமைகள் பற்றி போதிய புரிதலைப் பெற்று எல்லோரும் கேள்வி கேட்க வேண்டும்; அப்போதுதான் நிலைமை மாறும் என்பதுதான் மனித உரிமைகள் தினத்தைத் தொடர்ந்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள செய்தியின் மையக்கருத்து.
மூன்றாவது சுதந்திரப் போராட்டம் என்ற வகையில் ஊழலுக்கு எதிரான குரல் ஒங்கியுள்ளது. ஊழல் மிகப்பெரிய மனித உரிமை மீறல். வலுவான சட்டமும், தீர்க்கமான நடைமுறையும்தான் மனித உரிமைகளை நிலைநாட்ட வழி செய்யும்.
தீய சக்திகளுக்கு எதிரான மக்களின் "நோக்கு வர்மம்' தீவிரமடைய வேண்டும்.

No comments:

Post a Comment