நாடாளுமன்ற அவை உள்ளேயும் வெளியேயும் திருமாவளவன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் நிலையில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க நேரிடலாம் எனவும் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையிலும், நாடாளுமன்றத்தின் வெளியிலும் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வற்புறுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக்குள்ளேயே முழக்கங்களை எழுப்பியதுடன், நாடாளுமன்றத்திற்கு வெளியே காந்தி சிலை முன்பு இன்று (29Š11Š2011) காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஒரே நேரத்தில் அருகருகே இரு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"இந்திய அரசே! இந்திய அரசே! உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து!' என்றும், "பரப்பாதே! பரப்பாதே! அணை உடையும் என்று வதந்தியைப் பரப்பாதே!' என்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் முழக்கங்களை எழுப்பினர்.
இன்னொருபுறம், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், "இந்திய அரசே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கு! கேரளாவுக்கு பாதுகாப்பு தமிழகத்திற்குத் தண்ணீர்!' என்று முழக்கங்களை எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ""ஏன் இப்படி எதிர்த்து முழக்கம் எழுப்புகிறீர்கள்? புதிய அணை கட்ட நீங்கள் சம்மதித்தால் தமிழகத்திற்கு முழு அளவில் தண்ணீர் தர ஒப்புதல் அளிக்கிறோம்'' என்று கூறினர். அப்போது, ""உங்கள் கோரிக்கைக்காக நீங்கள் போராடுகிறீர்கள். எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் போராடுகிறோம்'' என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்தனர். இது மேலும் பரபரப்பை உருவாக்கியது.
சிறிது நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ. அகமது, கே.வி.எஸ். தாமஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் சந்தித்தனர். ""இரு மாநிலங்களைச் சேர்ந்த நாம் சுமூகமாக இது பற்றிப் பேசித் தீர்ப்போம். இதனைப் பிரச்சனையாக்க வேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டார்கள். ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் 12 மணிக்குக் கூடியதால் இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவைக்குக் கலைந்து சென்றனர்.
அவை கூடியதும் மறுபடியும் கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பேரவைத் தலைவர் முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர். பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் அவை மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகவும், இந்தியக் கடலோரக் காவல்படையினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெறக் கோருவது தொடர்பாகவும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அம்மனுவைப் பெற்றுக்கொண்ட மன்மோகன் சிங் இதுபற்றிப் பரிசீலிப்பதாகக் கூறினார்..
No comments:
Post a Comment