Translate

Saturday, 10 December 2011

‎''பெருந்தன்மையே நமது பலவீனம்!'' - முல்லைப் பெரியாறு விவகாரம்... முஷ்டி முறுக்கும் திருமா!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனல் கிளப்பிக்கொண்டிருப்பது முல்லைப் பெரியாறு விவகாரம்தான்! 

இரண்டு வார காலமாக தினமும் காலை 10.30 மணிக்கு, கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்றாக ஆஜராகிவிடும் கேரள எம்.பி-க்கள், தமிழகத்துக்கு எதிராக அரை மணி நேரம் கோஷம் போட்டுவிட்டுத்தான் நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்கள். தமிழக எம்.பி-க்களோ, வழக்கம் போல ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள்.


அ.தி.மு.க. எம்.பி-க்கள் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்த... தி.மு.க. எம்.பி-க்களும், இடதுசாரிகளும் தனித்தனியாக பிரதமர் மன்மோகனைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், தி.மு.க. மனு கொடுக்கச் சென்றபோதும், அழைப்பு வராமலேயே தாமாகவே சென்று அவர்களோடு இணைந்து கொண்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கடந்த 7-ம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். உண்ணாவிரத களைப்பு நீங்காதவராக இருந்த திருமாவளவனிடம், ''ஒட்டுமொத்தக் கேரளமே திரண்டு வந்து முல்லைப் பெரியாறு பிரச்னைக்காகப் போராடும்போது, தமிழகக் கட்சிகளிடம் இன்னும் அந்த ஒற்றுமை இல்லையே?'' என்று ஆரம்பித்ததுதான் தாமதம்... தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டார். 

''முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, 'முல்லைப் பெரியாறு அணையால் ஆபத்து’ எனக் குறும்படங்கள் மூலமாகப் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது கேரளம். கடந்த ஒரு மாதமாக அவர்கள் எல்லை மீறிச் சென்று விட்டார்கள். கேரளத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்யும் காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்கள் அனைவரும், தமிழகத்துக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கிறார்கள். ஒரு கும்பல், கடப்பாறையை எடுத்துக்கொண்டு அணையை உடைக்கப் போகிறது. இன்னொரு கும்பல், தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளைத் தாக்க முனைகிறது. கேரளாவிலும் காங்கிரஸ் அரசு, மத்தியிலும் காங்கிரஸ் அரசுதான். தேசிய ஒருமைப்பாட்டுக்கே அச்சுறுத்தல் விடுக்கும் கேரள வன்முறைக் கும்பல்களின் அட்டகாசத்தை, மத்திய அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அடக்க முடியும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு எதிரான வன்முறைகளைப் பரவவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லை.

பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவரின் அலுவலகம், சோனியாவின் வட்டம் என டெல்லி அதிகார மையங்களில் செல்வாக்காக இருக்கும் மலையாளிகள் லாபியும், கேரளத்தின் அடாவடிக்குத் தைரியம் கொடுக்கிறது. கேரளத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், தமிழகத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார். அதே நாளில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். கேரளத்தில் அச்சுதானந்தனும், உம்மன்சாண்டியும் இந்தப் பிரச்னையில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தமிழகத்திலோ, அரசியல் கட்சிகளுக்கு அமைதி வேண்டுகோள் விடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முன்னாள் முதல்வர் கலைஞரும் அமைதி காக்கக் கோருகிறார். நாம் பெருந்தன்மை காட்டுவது, அவர்களுக்கு நம்மைப் பலவீனமானவர்களாகத்தான் காட்டும். இதுவரையிலும் காங்கிரஸுக்கு தி.மு.க. பணிந்தது போதும். இனியும் தயக்கம் காட்ட வேண்டியது இல்லை. மத்திய அரசில் இருப்பதற்காகத் தயங்காமல், துணிந்து முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமை காக்கும் போராட்டத்துக்கு தி.மு.க. தலைமை வகிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார் திருமாவளவன்.

பொதுப் பிரச்னையில், கட்சி பாகுபாடு இன்றி கைகோக்க கேரள அரசியல்வாதிகளிடம் இருந்து என்றுதான் நம் தலைவர்கள் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ?

- இரா. தமிழ்க்கனல்

'எங்கள் போராட்டம் ஓட்டுக்காக அல்ல...’

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் இரண்டையும் இணைத்து 'டிசம்பர் 6’-ம் தேதியை எழுச்சி தினமாக கொண்டாடியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதில் ஒரு கட்டமாக நடந்த தலித் - இஸ்லாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் படு காரசாரம்.

கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய அமைப்புத் தலைவர்கள், ''பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் ஏதோ ஒரே நாளில் நடந்தேறிய விபத்து அல்ல. தெளிவாகத் திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்டத் தகர்ப்பு. தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித் முன்னேற்றத்தை வலியுறுத்திய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ம் நாளை சரியாகத் தேர்ந்தெடுத்து மசூதியை இடித்துத் தள்ளியது இந்துத்துவ பயங்கரவாதம்'' என்று கனல் கக்கினர்.

விழாவில் பேசிய திருமாவளவன், ''முல்லைப் பெரியாறு விஷயமாக பிரதமரைச் சந்திக்கச் சென்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை அழைக்கவில்லை. ஆனாலும், தமிழர்கள் நலனுக்காக நானே வலிந்து சென்று அவர்களோடு பிரதமரைச் சந்தித்தேன். இதே விஷயமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்தியபோதும் நானே வலியப்போய் இணைந்துகொண்டு குரல் எழுப்பினேன். 'வாருங்கள்’ என்றுகூட யாரும் கேட்கவில்லை. அதைப்பற்றிக் கவலையும் எனக்கு இல்லை. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்... தலித்துகளின் பிரச்னைகளுக்காக இஸ்லாமியர்கள் போராட வராமல் இருந்தாலும்கூட, இஸ்லாமியர் நலனுக்காக விடுதலைச் சிறுத்தைகள் போராடும். ஓட்டுக்காக அல்ல; ஜனநாயகத்தைக் காப்பதற்காக.'' என்றார் ஓங்கிய குரலில்.

- த.கதிரவன்

நன்றி- விகடன்

No comments:

Post a Comment