யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டு ணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.
இவ்வாறு இந்திய முன்னாள் ஜனாதி பதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தன்னுடைய இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறார் எனவும் 13 பிளஸ் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினார் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், தனது அமைதிப்பயணம் குறித்து தமிழக நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :
தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரு சில சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெறவேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெறவேண்டும்.கடந்த 21 ஆம் திகதி இரவு இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது இரண்டு முக்கியமான விடயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து விட்டு, இலங்கையின் 13 ஆவது அரசமைப்புத் திருத்த சட்டத்தை மேம்படுத்தி, 13 பிளஸ் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விரைவில் இலங்கையில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன்.
இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களையும், அதாவது, வடக்குக் கிழக்கு, தெற்கு, மத்திய, மேல் மாகாணங்களையும் மற்ற மாகாணங்களையும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாகாணங்களாக மாற்றியமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன் என்றார்.
No comments:
Post a Comment