Translate

Saturday, 25 February 2012

இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம்: சிபிஎம் தீர்மானம்



வடகிழக்கை இணைத்து தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும்!- : சிபிஎம் தீர்மானம்

நாகப்பட்டினம்: இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து நிலம், காவல் துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தஸ்துடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களும், மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசினர். வெள்ளிக்கிழமையன்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர்களின் துயரம் தற்போதுவரை தொடர்கிறது. ஆயுத மோதல் முடிந்தவுடன், இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக, அந்த நாட்டு அரசு கொடுத்த வாக்குறுதி அமலாகவில்லை.

நிவாரணம் இல்லை

சொந்த நாட்டிலேயே வாழ்விடங்களைவிட்டு வெளியேறி முகாம்களில் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகின்றன. அவர்களுடைய புனர் வாழ்வு, மீள் குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. ஆயுத மோதல் காலத்திலும், அதற்குப் பின்பும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இன்றைக்கும் சிறையில் இருக்கக் கூடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

சிங்களர்கள் குடியேற்றம்
தமிழர்கள் வாழக் கூடிய பகுதிகளில் இன்றும் ராணுவ நிர்வாகம் தொடர்கிறது. உடனடியாக ராணுவத்தை விலக்கிக் கொண்டு, சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வர வேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களர்களை குடியமர்த்த இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை.

பேச்சுவார்த்தை நடைபெறுகிற போதே, இலங்கை அரசு இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு விடுவது என முடிவு செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு பிரச்னைக்குத் தீர்வு காண உதவாது.

சுயாட்சி அதிகாரம்

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து நிலம், காவல் துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தஸ்துடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும், இலங்கையில் தமிழ் மொழி, தமிழர்களுக்குச் சம வாய்ப்பு, சம உரிமைகளுடனான பாதுகாப்பு ஆகியவற்றை காக்கும் விதத்திலும், சட்டத் திருத்தம் செய்ய அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment