Translate

Wednesday, 29 February 2012

வீரவன்சவும் சம்பிக்கவும் துரோகிகள்; இவர்களை அமைச்சுப் பதவியிலிருந்தும் தூக்கியெறிய வேண்டும்


இனவாதத்தை தூண்டிவிட்டு இனப் பிரச்சினை தீர்வு விடயத்தை குழப்பியடிக்கும் விமல் வீரவன்ச, சம்பிக்க போன்றவர்களே உண்மையான தேசத் துரோகிகளாவர். அவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதும், குறித்த அமைச்சர்கள் மாத்திரம் அதனை எதிர்ப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் அமைந்துள்ள நவசமாஜ கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இலங்கைக்கு எதிராக ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமைப்பேரவையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தமது நிலைப் பாட்டை தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் ஜி.எல்.பீஸ் தலைமையிலான குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது.

ஜெனிவா மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரரணை நிறைவேற்றத் தேவையில்லை. நாங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் பந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம். சில நடவடிக்கைகளை எடுத்தும் உள்ளோம் என அரசாங்கம் கூறுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மக்கள் எதிர்க்கவில்லை. மாறாக சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் இன்று சில பேரினவாதிகளுமே எதிர்க்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை இது தொடர்கின்றது. அன்று எல்.எச்.பெட்டா நந்த மற்றும் எப்.ஆர்.ஜயசூர்ய போன்றவர்கள் செய்த இனவாத செயற்பாடுகளையே இன்று இவர்களும் செய்கிறார்கள்.

அன்று முதல் இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கம் இந்த இனப்பிரச்சினையினைத் தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதன் விளைவாகவே இன்று இப்படியான பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நடை பெற்ற சுதந்திரதின உரையின்போது ஜனாதிபதி இந்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை விடயம் தொடர்பாக பேசியிருந்தார்.
அத்தோடு இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்தத் தயார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க மற்றும் விமல் போன்றவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளனர். இதன் நோக்கம்தான் என்ன என்று புரியவில்லை.

அரசாங்கம் முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை குழப்பியடித்து மக்களை திசைதிருப்ப முற்படும் இவ்வாறானவர்களே உண்மையான தேசத்துரோகிகள். எனவே, இவ்வாறானவர்களை அரசாங்கம் உடனடியாக அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக் குழுவின் பந்துரைகளின்படி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். சரியோ பிழையோ சனல் 4 வீடியோ தொடர்பாக விசாரணையொன்று நடத்தப் படவேண்டும் போன்ற முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சிணை தொடர்பான திட்டங்கள் எதனையும் முன்வைக்கவிடாமல் குழப்பியடிக்கும் இனவாதிகளை கருத்தில்கொள்ளாது, நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
---விக்கிரமபாகு கருணாரத்ன ---

No comments:

Post a Comment