Translate

Wednesday, 29 February 2012

தமிழ் மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை


ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் மக்களின் வகிபங்கு மிகவும் காத்திரமானது. அதிலும் நாடுகடந்த அரசை சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேகமாக மேற்கொண்டு வரும் பிரசார நடவடிக்கைகளின் பலனாகவே, ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கின்றது. இதற்கு வெளிநாட்டு ஊடகங்களின் வகிபாகமும் காரணமாகும்.

எனினும் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதற்கு ‘தாமே காரணம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைகள் சில கூறிக்கொள்கின்றன. ஆனால் அது மெய்யல்ல. வெறும் பொய். எங்களிடம் இருக்கக் கூடிய அரசியல் தலைமைகள் முதலில் உண்மைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையைக் கூறத் தவறும்போது அதனால் எங்கள் இனத்துக்கு கிடைக்கக் கூடிய கிடைப் பனவுகள் இல்லாது போய்விடும்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோரும் என்பது நிறுத்திட்டமான உண்மை. இவ்வாறு உரிமை கோருவதன் ஊடாக தமிழ் மக்களின் ஏகத்தலைமை தாங்களே என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இது தமிழ் மக்களின் பக்கமாக இருக்க, அரச பக்கத்திற்கும் தாங்கள் நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதற்காக ‘உங்களுக்காகவே நாங்கள் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை.’சர்வதேச சமூகம் எடுத்த தீர்மானத்துக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்வார்கள். ஆக ஜெனிவாவுக்குப் போகாததன் மூலம் அரசையும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதி ராக தீர்மானம் வருதனூடாக இதற்கான முழு ஏற்பாடும் தாங்களே என்று தமிழ் மக்களுக்கும் கூறி தங்கள் இருப்பை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தக்க வைத்துக்கொள்ள முற்படும்.

எனினும் இப்போது தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் தலைமை இல்லை என்பதே மிகப்பெரும் குறைபாடு என சுட்டிக்காட்டுகின்றனர். ஆக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய நேர்மையான-விலை போகாத அரசியல் தலைமை உடனடியாகத் தேவைப்படுகின்றது. இத்தகையதோர் அரசியல் தலைமையை உரு வாக்க தமிழ் சிவில் சமூகம் முன்வர வேண்டும். நேர்மையான, அறிவு பூர்வமான தமிழனப்பற்றுடைய எத்தனையோ சான்றோர்கள் இங்கு உள்ளனர். அவர்களை அரசியலில் நிறுத்தினால் மட்டுமே தமிழினத்துக்கு உயர்வு உண்டாகும்.
----வலம்புரி----

No comments:

Post a Comment