Translate

Friday 3 February 2012

நாம் இனி என்ன செய்யப் போகிறோம் ?

2009 முதல் இன்றுவரை நடைபெற்றுவரும் விடயங்கள் எம்மைப் பொறுத்தவரையில் நல்ல சமிக்ஞைகளாகத் தெரியவில்லை. 2009 இல் அழிக்கப்பட்ட எமது தாயக விடுதலைப் போராட்டமும் அதனுடனிணைந்த எமது கனவுகளும், நம்பிக்கைகளும். போரின் பின்னர் ஐ. நா உற்பட பல உலக நாடுகள் நடந்துகொண்ட விதங்கள். இடைக்கிடயே எமக்கு நம்இக்கை தருவதாகத் தோன்றி மின்னி மறைந்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான தனிநபர் கோரிக்கைகள், சனல் 4 ஒளிப்படங்கள், பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைகள், அவ்வப்போது காற்றில் ஆடி எரியும் மெழுகுவர்த்திப்போல தமிழகத்தின் மூலைகளில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் எம்மீதான அனுதாபக் கோஷங்கள், தற்கொடைகள் .


இனக்கொலை முடிந்து இன்றுடன் இரண்டு வருடங்களும் எட்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. போரின் இறுதிக்கட்டத்திலிருந்த நிலை மாறி, நாம் எமக்குள் பிளவுபட்டு குழுக்களாக ஒருவரையொருவர் வீழ்த்துவதிலும், காட்டிகொடுப்பதிலும் கண்ணும் கருத்துமாயிருக்கிறோம். 2009 இன் ஆரம்பத்தில் சர்வதேச வீதிகளிலெல்லாம் இறங்கிக் கோஷமிட்ட இனம் இன்றைக்கு சோபையிழந்து உறங்கிக்கொண்டிருக்கிறது. எவருக்கும் எதுபற்றியும் அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில தனி நபர்களைத் தவிர எவருமே செயற்படுவதாகத் தெரியவில்லை. நாடுகடந்த அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை என்று சில அமைக்கள் மட்டும் இயங்குகின்றன ஆனால் இவற்றுடனான மக்களின் ஈடுபாடு எந்தளவிற்கிருக்கிறது என்றால் யாருக்குமே விடை தெரியாது. அப்படி இந்த அமைப்புகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கூட சிங்களத்தின் வேகமான இனவழிப்புத் தொடர் நடவடிக்கைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன.

மதில்மேல்ப் பூனையாக இதுவரையிலும் இருந்துவந்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதம் இன்றைக்கு முற்றாக சிங்களத்தின் பக்கம் சாய்ந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாதான் எல்லாம் என்று நாம் புளங்கிக்கொண்டிருக்க இந்தியாவின் பங்களிப்பினை ஒத்த பங்களிப்பை எமது இனவழிப்பில் செய்த அமெரிக்கா எம்மை சிலகாலம் மடையர்களாக்கி வைத்திருந்ததில் வெற்றிதான் கண்டிருக்கிறது. போர்க்குற்றவாளிகளுக்கெதிரான விசாரணைகளை முடக்கியதிலிருந்து, ஐ.நா வில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவாக எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் தடுத்தபடி இயங்கிவந்த அமெரிக்கா இன்று ஒருபடி மேலே சென்று போர்க்குற்றவாளிகளுடன் சமரசம் செய்யும் படி பாதிக்கப்பட்ட மக்களையே கேட்கிறது. தனால் போர்க்குற்றவாளிகளை எதுவுமே செய்ய முடியாது, அப்படிச் செய்யும் நோக்கம் கூடக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. சிங்களம் உலகத்தின் கண்ணை மூட அரங்கேற்றிய கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாக கூறி தமிழரின் நம்பிக்கையின் சவப்பெட்டியின் மீது இன்று இறுதி ஆணியையும் அடிக்கிறது.

இனவழிப்பின் பிரதான சூத்திரதாரியான இந்திய அன்றுபோல் இன்றுவரை சிங்களத்தைக் காப்பதிலும், அதன் தொடர்ச்சியான இனவழிப்பிற்ஜகு உற்ற துணையாக இருப்பதிலும் வெற்றி கண்டுவருகிறது. தெற்குடன் சமரசம் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுகிறது. அபிவிருத்திமூலம் இணக்கப்பாடு சாத்தியம் எனும் புதிய வேதம் ஓதுகிறது. நடந்ததை மறந்துவிடுங்கள், சமரசம் செய்து வாழப்பழகுங்கள் என்று கூறியபடி வடக்கிலும் கிழக்கிலும் சுரண்டுவதற்கு தனது வியாபாரிகளை கடைவிரிக்கும்படி கேட்கிறது. மொழி ஒற்றுமை என்கிற பெயரில் சிங்களம் அரங்கேற்றும் சிங்கள மயமாக்கலை தொடக்கிவைக்க தனது தமிழ்ப் பொம்மையைக் கூட அனுப்பிவைத்து அழகு பார்க்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது நண்பனான சிங்களத்தை எந்த ஆபத்தும் அணுகாமல் கண்ணின் இமைபோலக் காத்துவருகிறது.

எமது தாயகமோ நிலத்தாலும், வளத்தாலும் சுரண்டப்படுகிறது. போரின்போது இடம்பெயர்ந்ததைப்போல இன்றும் கிழக்கிலும், வடக்கின் சில பகுதிகளிலும் தமிழர்கள் இடம்பெயர்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரங்கள் இன்றும் பறிக்கப்படுகின்றன. போரின் முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று சிங்கள மயமாக்கல் வேகமாக தங்கு தடையின்றி நடந்து வருகிறது. தமிழர்கள் காடையர்களால் தாக்கப்படுவதும், அவர்களின் வளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், அவர்கள் மீன்பிடித்த கடல்களும் குளங்களும் சிங்களவர்களின் வள்ளங்களால் நிரப்பப்படுவதும் நடக்கிறது. நாதியற்ற தமிழினம் திகைத்துப்போய் நிற்க கண்ணிமைக்கும் நேரத்தில் சர்வதேச ஆசியுடன் இனக்கொலை தொடர்ந்தும் நடக்கிறது.

குரல் வளை நசிக்கப்பட்ட தாயகத்திலிருந்து இடைக்கிடையே, "புலம்பெயர் தமிழரால்த்தான் எல்லாப் பிரச்சினையுமே, அவர்கள் சும்மாயிருந்தாலே போதும், தாயகத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள்" என்று குரல் வேஷங்கள் கேட்கின்றன. அந்த நிம்மதியென்பது தமிழர்களுக்கல்லாமல் சிங்களவர்களுக்கே தேவைப்படுகின்றதென்பதை அவ்வேஷங்களே இடைக்கிடையே சொல்லிக் காட்டுகின்றன. மயான அமைத்திக்கும், சுதந்திரத்திற்கும் வேறுபாடு இருப்பதை உணர மறுக்கும் இந்த சமரச நாயகங்கள் இனவழிப்பிற்கும் இன ஒற்றுமைக்கும் சம்பந்தம் தேடி அலைகின்றன.

இதுவரை போராடி வந்த புலிகள் இப்போது முற்றாக அமைதியாகி விட்டார்கள். அவர்களின் ஆயுதங்கள் மட்டுமன்றி அவர்களின் எச்சச் சொச்சங்கள் கூட மவுனமாகிவிட்டன. எப்போது மீண்டு மவுனம் கலைவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். மக்கள் என்றும்போல இன்றும் மவுனமாகவே இருக்கின்றனர். சிங்களமோ சத்தமாகவே தனது இனக்கொலையை அரங்கேற்றிவருகிறது. எம்மால் செய்வதற்கு எதுவுமேயில்லை என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ??

No comments:

Post a Comment