Translate

Sunday, 18 March 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்.. ஆதரிக்கிறது இந்தியா?

டெல்லி: இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், "எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா... இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது," என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.


தா பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

திமுக எம்பிக்களும் இதையே பாராளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

"இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்பதை, அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா? என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது," என அழுத்தமாகக் கூறியுள்ளாராம் ப சிதம்பரம்.

இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு என்கிறது டெல்லி வட்டாரம்.

இன்னொரு பக்கம், இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்து செயல்படுவது டெல்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சத் தீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்கிறார்கள்.

இதிலும் ப சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை ப சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவுக்கு நேர்ந்துள்ள பெரும் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

"மம்தாவைப்போல இந்த முறை கருணாநிதி கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டால், மத்திய அரசு தார்மீக ரீதியாகவே பலமிழக்கும். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அரசு தமிழர் விரோதமாகப் போவதால், தமிழகத்துக்குள் முற்றாக ஆதரவை இழந்து நிற்க வேண்டி வரும்" என்ற நிதர்சனத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகவே உணர்த்தியுள்ளார் சிதம்பரம் என்கின்றனர்.

தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து, இந்த முறை சிதம்பரத்தின் கருத்தை முழுமையாக ஆதரித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இதுவும் மத்திய அரசின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

மார்ச் 23-ல் வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வரும் மார்ச் 22 அல்லது 23ம் தேதி ஐநா மனித உரிமைச் சபையில் ஓட்டுக்கு விடப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவிள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் எம் தந்தையர் நாடு என்று ஈழத் தமிழர்கள் கொண்டாடிய தேசமான இந்தியா, இத்தனை துயரங்களுக்குப் பிறகாவது அரவணைக்காதா என்ற ஏக்கம் உலகத் தமிழரிடையே நிலவுகிறது. தாயகத் தமிழர்கள் 8 கோடி பேரின் ஆதங்கமும்கூட அதுவே.

அதைப் புரிந்து நடந்தால் இந்தியா இழந்த மரியாதையையும் அபிமானத்தையும் ஓரளவுக்குப் பெறும்!

No comments:

Post a Comment