Translate

Friday, 2 March 2012

மாயமானாக உருவெடுத்துள்ள சிங்களத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை நிரந்தரமாக்கி வெற்றிகொள்ள ஜெனீவா நோக்கி படைதிரட்டி வாருங்கள் தமிழர்களே!!!


முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலைக்கான நீதி கேட்டு உலகத்தமிழினம் மூன்றாண்டுகள் கடந்து பல்வேறு வழிவகைகளில் வெவ்வேறு தளங்களில் களமாடிவருகையில் இன்று ஏற்பட்டுள்ள சர்வதேச புறச்சூழலானது தமிழர்தரப்பால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய விடையமாக இருக்கின்றபோதும் இதுவே நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கான இறுதித் தீர்வினை வழங்கிவிடப் போவதில்லை என்ற யதார்த்தத்தினையும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.


தற்போது ஆரம்பமாகவுள்ள 19வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் கூட்டத்தொடர் மிகுந்த பரபரப்பை பற்றவைத்துள்ளது. 2009ம் ஆண்டு மே-19 இல் முள்ளிவாய்க்கால் கடற்கரை மணல்பகுதிக்கு தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளால் விரட்டி கொண்டுவரப்பட்டு அரங்கேற்றப்பட்ட மானுடப் படுகொலை பற்றிய விவாதம் இடம்பெற இருப்பதே இந்த பரபரப்பிற்கு காரணமாகும்.

எமது உறவுகள் துடிக்கத் துடிக்க கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதற்கும் ஒருபிடி சோற்றிற்கும் ஒரு வாய் தண்ணீருக்கும் வழியில்லாது செய்த கயமைத்தனத்திற்கும் நீதி கிடைத்துவிடவோ இவையெல்லாவற்றிற்கும் காரணமான மகிந்த ராசபக்சே கும்பல் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கிவிடவோ இந்த மனிதஉரிமைகள் அவையின் அமர்வில் முடிவுகிட்டிவிடப் போவதில்லை என்பது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அதைவிட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டியது தமிழர்களது வரலாற்றுக் கடமையாகும்.

இதற்கு முன்னர் பலதடவை இதே ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அவையில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்ற மீறல்கள் குறித்து தீர்மாணங்கள் கொண்டுவரப்பட்டு தோல்வியடைந்திருந்தமையினை யாரும் மறந்திருக்க முடியாது.

இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கொழும்பிடம் தோல்வி அடைந்துள்ளதாக கடந்த ஆண்டு தனது ஆய்வறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்பட்டுவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2010 ஜுலை முதல் 2011 ஜுன் வரைக்குமான ஒருவருட காலப்பகுதியில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மீளாய்வு செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்குத் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்காமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி பான் கீ மூனுக்கு மனித உரிமைகள் சபை அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
குறிப்பாக போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துச் செயற்பட வேண்டும் என்று இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியிருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை கொழும்பிடம் தேற்றுப் போய்விட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இம்மாத முதல் வாரத்தில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையானது மார்ச் 2012இல் மேற்கொள்ளவுள்ள தனது கூட்டத்தொடரின் போது சிறிலங்காவில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்புக் கூறப்படவில்லை என்பதை முக்கிய விவாதமாக்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட கடிதம் ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகமானது ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிற்கும் அவதானிப்பாளர்களிற்கும் அனுப்பிவைத்திருந்தது.

யுத்தம் நிறைவுற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்த மக்களிற்குச் செய்ய வேண்டிய கடப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை என்றும் இதனால் ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் சபை என்பன “சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்தகாலமீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க வகையில் நம்பகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் பல பத்தாயிரக்கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் காயமடைந்தமை தொடர்பாக உரிய வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தனித்துவமான அமைப்பாக மனித உரிமைகள் சபை உள்ளது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா.விற்கான பதில் பணிப்பாளராக உள்ள பிலிப்பே டாம் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை மீறல் சம்பவங்களில் மிக மோசமான அத்தியாயமாக உள்ள சிறிலங்காவின் யுத்தகால மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் சபையானது உரியவகையில் பதிலளிக்கத் தவறியமையானது இது உருவாக்கப்பட்ட நோக்கத்தை அதன் மீதான நம்பகத்தன்மையைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது” எனவும் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்காவிடையத்தில் கடைப்பிடித்துவரும் அசமந்தப்போக்கானது அதன் அறுபது ஆண்டுகளிற்கு மேலான வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஐயப்பாட்டை தானே ஏற்படுத்திக் கொண்டுள்ளதையே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த அறிக்கைகள் சுட்டிநிற்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையுடன் வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்திலேயே மகிந்த ராசபக்சே கும்பல் நடாத்திய தமிழினப்படுகொலை தொடர்பாக அனைத்துலக விசாரணையினை மேற்கொள்ள முடியும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கபட்டுள்ள புறச்சூழலில் இந்த 19வது அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

சிங்கள தேசத்தை தொடர்ந்து ஆண்டுவரும் தலைமைகள் சிறுபான்மையினரான தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை அலட்சியம் செய்துவந்துள்ளதை மகிந்த ராசபக்சே சர்வதேசத்தை ஏமாற்றுவத்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமையானது இலங்கைத்தீவில் ஆறு தசாப்தங்களிற்கு மேலாக நீடித்துவரும் இனமுரண்பாட்டின் அடித்தளத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக அமைந்துள்ளது.

இதுவரை காலமும் தமிழர் தரப்பில் அகிம்சை வழியிலும் அது புரிந்துகொள்ள மறுக்கப்பட்ட நிலையில் வழியேதுமின்றி ஆயுத முனையிலும் உலக வல்லாதிக்க சக்திகளின் பிராந்திய நலன் என்ற புதைசாக்கடைக்கு பெரும் இடையூறாக அமைந்துவிட்டதனால் சர்வ வல்லமைகொண்ட சக்தியாக சிங்களத்தை உருவாக்கி முள்ளிவாய்க்காலில் அதனையும் அனைத்துலகம் முடித்துவைத்த பின்னர் இன்று அரசியல் வழியில் நின்று கூறிவருவதைத்தான் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் நீதியாளர்களும் உரைத்துவருகின்றனர்.

சிங்களத்துடன் மோதி எம்மைநாமே அழித்து பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது விருப்பமோ தமிழர் தரப்பு விருப்பமோ கிடையாது. அது எமது இனத்தின் ஆத்மா மீது திணிக்கப்பட்ட விடையமாகும். இதனைத்தான் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவும் வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவை தொடர்ந்தும் ஆண்டுவந்த சிங்களத் தலைமைகள் தமிழ்மக்களது அடிப்படை பிரச்சினையினை புரிந்துகொள்ள மறுத்து அலட்சியம் செய்துவந்தமையே இனப்பிரச்சினை தலைமுறைகள் கடந்து தொடர்ந்துவருவதற்கு பிரதான காரணமாகும்.

இதனை ஓரளவிற்கு அனைத்துலக சமூகம் புரிந்துகொண்டதாக தென்பட்டாலும் இந்த 19வது மனித உரிமைகள் சபையின் அமர்வில் சிறிலங்காவின் போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குரலெழுப்பப்பட உள்ளமை தம்சார்ந்த நலனின் அடிப்படையில்தான்.

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்டுவரும் சிறிலங்கா தேசம் இன்று சீனாவின் ஆளுகைக்குள் மெல்ல மெல்ல சென்றுவருவதை சகித்துக் கொள்ளாத மேற்குலக சக்திகள் தற்போதுதான் நித்திரை விட்டெழுந்தவர்கள் போல் பாசாங்கு செய்து மானுட நீதி பேசுகின்றனர்.

அத்தோடு சதாம் குசைன் ஒசாமா பின்லேடன் வழியில் மம்மர் கடாபியையும் வீழ்த்தி ஆதிக்க பசியில் அலைந்து திரியும் அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் ஈரானை அடுத்ததாக குறிவைத்து காய்நகர்த்திவரும் இன்றைய சூழ்நிலையில் சிறிலங்காமீது காண்பிக்கப்படும் இராசதந்திர பொருளியல் ரீதியிலான அழுத்தங்களானது அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றது.

எப்படியாவது சிறிலங்காவை அடிபணியவைத்துவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் குள்ளநரித்திட்டமாகும். ஆனாலும் அதனையும் மீறி சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் குழுக்கள் இது விடையத்தில் காட்டிவரும் தீவிர அக்கறையானது பாலைவனத்து நீராக ஓரளவு தமிழர் தரப்பிற்கு நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையினை ஆதரிக்கப் போகின்றேன் என்று அறிவித்ததையடுத்து பிரித்தானியா நோர்வே கனடா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றன வரிசையாக தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இரு ஆபிரிக்க நாடுகளுடன் மெக்ஸிக்கோ உள்ளிட்ட இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் பெல்ஜியம் ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக சிங்களத்திற்கு எதிரான பிரேரணையினை கொண்டுவரலாம் என அனைத்துலக இராசதந்திர மட்டத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டுவருகின்றது.

எது எவ்வாறாயினும் இந்த மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தொடரானது சிங்களத்திற்கு பெரும் தலைவலியாக அமையப்போகின்றமை உண்மையாகும். ஆனால் அதுவே எமக்கான நீதியைப் பெற்றுத்தரவோ தமிழினத்திற்கும் மானுட குலத்திற்கும் எதிராக ராசபக்சே கும்பல் நிகழ்த்திய நூற்றாண்டு கண்டிராத இனப்படுகொலைக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவோ போவதில்லை என்பதனை எம்மவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இது மாத்திரமல்ல இன்னும் பல படிகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவரை சர்வதேச புறச்சூழல் இதே நிலையில் நீடிப்பதும் அவசியமாகும். ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்கள் மூச்சடங்கிய வேளை இந்தியா சீனா அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் தமது செய்மதிகளை ஒருங்கே நிலைநிறுத்தி அனைத்தையும் உடனுக்குடன் கண்டுணர்ந்து இன்றுவரை கள்ளமௌனம் காட்டிவிட்டு இன்று சிங்களத்தை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டதனாலேயே அவை தூசுதட்டி எடுக்கப்படுகின்றன என்பதே உண்மை நிலையாக உள்ளது.

தற்போது அனைத்துலக நாடுகளிற்கு தேவை ஏற்பட்டுள்ளது. அதோடு சர்வதேச மனிதநேய அமைப்புகள் விளிப்படைந்து நீதியின் வழித்தடத்தில் உறுதியோடு பயனிக்க எத்தனித்து நிற்கின்றன. இதுவே நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம்.
இந்த பொன்னான சந்தர்ப்பத்தை கைநழுவிவிட்டால் தமிழீழத் தேசத்தின் விடிவிற்காக தம்உயிர் துறந்த நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது தியாகங்களும் தோளோடு தோள்நின்ற கரணத்தால் எதிரியால் கொன்று குவிக்கப்பட்ட இரண்டரை இலட்சம் சொந்தங்களது ஈகமும் பயனற்றுப்போய்விடும்.

ஜெனீவாவில் உள்ளரங்கில் விவாதங்கள் சூடுபறக்க விவாதிக்கப்படட்டும். அவை தன்பாட்டில் அவர்களால் தீர்மானிக்கப்பட்டபடி நடந்தேறும். ஆனால் நாம் என்ன செய்யவேண்டும். இதோ எமது சகோதரர்கள் உயிரைக் கொல்லும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீதிகேட்டு நடந்து வருகின்றார்கள். அவர்களை வரவேற்று ஐ.நா.முன்றலில் வரும் மார்ச்-5ம் திகதி அணிதிரள்வோம்.

Walk For Justice
கால்கள் விறைத்து ஒருகட்டத்தில் செயலற்றுவிடுமோ என அஞ்சும் அளவிற்கு உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்த போதும் தாயக விடுதலைக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளான மாவீரச் செல்வங்களின் ஒப்பற்ற தியாகங்களை நெஞ்சத்தில் சுமந்து உறுதியோடு நடைபோட்டு வருகின்ற எமது உறவுகளை வரவேற்க திரண்டு வாருங்கள் ஜெனீவா முருகதாசன் திடலிற்கு.

பல்லாயிரக்கணக்கில் நீங்கள் திரண்டு வந்து பன்னாட்டு ராசதந்திரிகளையும் ஊடகங்களையும் உங்கள் உறுதியான குரலில் எமதுபக்கம் இழுக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். தமது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி மாயமானாக உருவெடுத்துள்ள சிங்களத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை நிரந்தரமானதாக்கி வெற்றிகொண்டு தாயக விடுதலையினை விரைவுபடுத்த விரைந்து வாருங்கள் உறவுகளே ஜெனீவா நோக்கி!!

வீழ்வது ஒன்றும் இழிவில்லை. மீண்டும் எழ முயற்சிக்காமல் இருப்பதே இழிவாகும். தென்ஆபிரிக்க மண்ணில் வீழ்த்தப்பட்ட போது எழுச்சிகொண்டு எழுந்ததாலே மகாத்மா காந்தியடிகள் இன்றும் பேசப்படுகின்றார்.
காந்தி அவர்கள் பயணச்சீட்டு எடுத்திருந்த போதும் நிறவெறி மேலோங்கிய அதிகாரியால் தள்ளிவிடப்பட்ட போது யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவர் எழும்போது தகுந்த ஆதாரத்துடன் இருந்தபோது அவரை யாரும் உதாசீனப்படுத்த முடியவில்லை.

சக பிரயாணியாக வீழ்ந்த காந்தி தியாகியாக மீண்டும் எழுந்தார்… வழக்கறிஞராக வீழ்த்தப்பட்ட அவர் புரட்சியாளனாக எழுந்தது எல்லாமே மீண்டும் எழ வேண்டும் என எண்ணியதாலேதான் சாத்தியப்பட்டது. இது வரலாறு.

ஆம் எமது விடுதலைப் போராட்டமும் வீழ்த்தப்பட்டது சர்வதேச அரசியலால். மறுக்கமுடியாத நியாயம் எம் பக்கம் இருந்தாலும் மறுபடியும் எழுந்திருக்கக் கூடாது என்றே வீழ்த்தப்பட்டோம் முள்ளிவாய்க்காலில்.

பயங்கரவாதியாகவும் தீவிரவாதியாகவும் வீழ்த்தப்பட்ட நாம் எமது வாழும் உரிமையை முன்நிறுத்தி துடித்தெழுவோம். சதிகார சர்வதேச அரசியலை வீழ்த்தி சுயநிர்ணய உரிமைக்காக மீண்டும் மீண்டும் நிமிர்ந்தெழுவோம்.
thalaivar
பயங்கரவாதி என்ற பட்டமும் தீவிரவாதி என்ற முத்திரையும் தகர்த்தெறியப்படுகின்றன.இதுவரை அஞ்சி நடுங்கிய தமிழீழத் தேசியக் கொடியும் தலைவன் படமும் இன்று அனைத்துலகால் அங்கீகரித்தாகிவிட்டது. நீதிகேட்டு வரும் மூன்று உறவுகள் கைகளிலே ஏந்தி வருவது பாயும் புலியைக் கொண்டு அமைந்த தமிழீழத் தேசியக் கொடிதானே. அந்த கொடியோடுதானே கடந்துவரும் நாடுகளின் இராசதந்திரிகளையும் உயர்மட்டத் தலைவர்களையும் சந்தித்து இனத்தின் உரிமையை விளக்கி வருகின்றனர். யாரும் தடைபோடவில்லையே. தடுக்கவும் இல்லையே.
விடுதலை இயக்கத்தின் மீதான தடை உடையும் நாள் நெருங்கிவருகின்றது. கொடியும் தலைவன் படமும் இயல்பாகிவிட்டது. தமிழர்களது விடுதலை இலட்சினைகள் பதித்த அஞ்சல் தலைகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டது.
தேசமே இல்லாத நிலையில் எமக்கு கிடைத்துவரும் இந்த அங்கீகாரம் எங்கள் தியாக மறவர்களது தியாகத்தின் அடித்தளதள்தில் பெறப்பட்டு வருவதாகும்.

எதற்கும் அஞ்சாதீர்கள். அடுத்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வருகையினை சட்டபூர்வமானதாக்குவதுதான் மிச்சம். அதனையும்
சாதித்து தலைவன் வரவை விரைவாக்க உறுதிபூண்டு திரண்டுவாருங்கள் ஜெனீவா நோக்கி.

விழுந்ததும் மறைந்திட நட்சத்திரமல்ல
மீண்டும் மீண்டும் உதயமாகும் கதிரவனல்லவா எம் தலைவன்.
மேற்கு அடிவானில் உடல் புதைத்து கிழக்கு வானில் தலைநிமிரும்
காலைக் கதிரவனிற்கு நிகரானவன் எம் தலைவன் பிரபாகரன்.
மறையுமுன்னே நிலாவிற்கு ஒளி வழங்கி
இரவை ஒளியுள்ளதாக்குவது கதிரவன் இயல்பு.
அதற்காக நிலவுகள் எல்லாம்
கதிரவனாகிவிட முடியாது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(26-02-2012)

No comments:

Post a Comment