மஹிந்த ராஜபக்ஷ் தண்டிக்கப்படும்வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடருமாம்
சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் முன் இலங்கை ஜனாதிபதி நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றிய டி.ராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று யுத்தத்துக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை எல்லாம் மத்திய அரசு உதாசீனப்படுத்தியது. மத்திய அரசு அக்கறையோடு செயல்பட்டிருந்தால் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட கொடுமையும் நடந்திருக்காது. 3லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் முள்வேளி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
புலிகள் ஆதரவாளர்கள் என பல ஆயிரம் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் விசாரிக்க அமைக்கப்பட்ட சர்வதேச அளவிலான மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் எல்லாம் முடக்கப்பட்டன.
ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது. இலங்கை ஜனாதிபதியை குற்றவாளியாக்கிட வேண்டும்.
இலங்கையின் இந்த அராஜகச் செயல்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மெளனம் சாதித்து வருகின்றது. அந்த மெளனம் கலைக்கப்பட வேண்டும்.இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment