Translate

Tuesday, 20 March 2012

பிறசக்திகளின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை போட்டுடைத்த கூட்டமைப்பு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


பிறசக்திகளின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை போட்டுடைத்த கூட்டமைப்பு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிற சக்திகள் விரும்பும் முடிவுகளை தமிழ் மக்களுக்கு விற்பனை செய்வதனையே தமது பணியாகக் கொண்டுள்ளது.
கடந்த பத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு செல்வதில்லை என்று தீர்மானித்தமை மற்றும் அந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்பி வைத்த ஆதரவுக் கடிதத்தின் மூலம், சிறீலங்கா அரசினது நிகழ்ச்சி நிரலுடன் கூட்டமைப்பு எவ்வாறு துணை போகின்றது என்பதனை சுட்டிக் காட்டியிருந்தேன்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது இந்த செயல், தமிழனத்துக்கு எவ்வளவுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இப் பத்தி எழுதப்படுகின்றது.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதி தீவிரநிலையடைந்திருந்த போது, மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது உறவுகள் வன்னியில் சந்தித்துக் கொண்டிருந்த கொடூரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் துடித்துக் கொண்டிருந்தனர்.
தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த படுகொலைகளையும், கொடூரங்களையும் அறிந்து அந்தக் கொடூரங்களைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டுமெனக் கோரி மேற்கு நாட்டுத் தெருக்களில் தொடர் போராட்டங்களை நடாத்தினர். தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதனை தமது நாட்டு உளவுத் துறைகள் மூலம் மேற்குநாட்டு அரசுகளும் அறிந்து கொண்டேயிருந்தன. ஆனால் அந்த நாட்டு மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

அக்காலப்பகுதியில் நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகாரக் குழுவின் இணைப்பாளராக இருந்தேன். நானும் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் சிலரும், பல இராஐதந்திரிகளை பல தடவை சந்தித்து, தமிழ் மக்கள் மீது புரியப்பட்டுக் கொண்டிருந்த அநியாயங்கள் தொடர்பாக விளக்கியிருந்தோம். நாங்கள் கூறிய விடயங்களை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்பதனையும் நாம் தெரிந்து கொண்டோம்.
அத்துடன் யுத்தத்தின்போது, இரத்தக்களறி ஏற்பட்டால், அதற்கான பின் விளைவுகள் இருக்கும் என்பதனை சிறீலங்கா அரசுக்கு தாம் கூறியுள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தனர். அவ்வாறு அவர்கள் கூறியபோது, உயிரழிவுகள் ஏற்பட்ட பின்னர் அதற்கு நடவடிக்கை என்பதனை விட, இனஅழிப்பு இடம்பெறாமல் தடுத்து நிறுத்துவதே எமக்கு முக்கியம் என்பதனையும் அவர்களிடம் நாம் ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனாலும், இரத்தக் களறி ஏற்பட்டால் பின்விளைவுகள் இருக்கும் என்பதனை தாம் சிறீலங்கா அரசுக்கு உறுதியாகக் கூறியுள்ளோம், என்பதனையே மீண்டும் மீண்டும் பதிலாகக் கூறி, எமக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயன்றனர். இதே போன்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இவ்வாறே பதிலளித்திருந்தனர்.

தாயகத்தில் உறவுகள் கொல்லப்படுவதனால் ஆத்திரமடையும் தமிழர்கள், விரக்தியினால் விபரீதமான முடிவுகளுக்கு செல்லக் கூடாதென்பதற்காகவே, படுகொலைகளைக் கண்டித்தும், போரை நிறுத்தக் கோரியும், தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியபோது, மேற்கு நாட்டு அரசுகள் அந்தப் போராட்டங்களை அனுமதித்திருந்தனர். அத்துடன், இரத்தக்களறி ஏற்பட்டால் அதற்கான விளைவுகள் இருக்குமென்று சிறீலங்கா அரசுக்கு கூறியுள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குக் கூறி நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இறுதியுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டது.
அவ்வாறு வலியுறுத்தப்பட்டபோது, அரசு எவ்வளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ, அவ்வளவுக்கு இழுத்தடித்து, இயலாத கட்டத்தில், சர்வதேச சமூகத்தினரால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை தணிப்பதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்கும், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்படுவதற்கு இடமளிக்காது தப்பித்துக் கொள்ளுவதற்காகவும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பதாகும்.
அந்த ஆணைக்குழுவினது உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அதாவது படுகொலைகள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பித்து, திசைதிருப்புவதற்காகவே எல்.எல்.ஆர்.சி உருவாக்கப்பட்டது.
இறுதிப் போரின்போது அரசு செய்ததாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினது பரிந்துரையில் எதுவும் கூறப்பாடாமல் இருப்பதனை மூடிமறைப்பதற்காக, வேறு விடயங்களை பரிந்துரைசெய்து, அவற்றை அமுல்ப்படுத்துவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொள்ள அரசு முயல்கிறது.
உதாரணமாக தீர்வு தொடர்பாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளல்;, இராணுவ பிரசன்னத்தை படிப்படியாக குறைத்தல், ஆயுதக் குழுக்களை இல்லாமல் செய்தல். தடுப்பில் இருப்பவர்களது பெயர் விபரங்களை வெளியிடுதல் மற்றும் அவர்களை விடுவித்தல் அல்லது வழக்குத் தொடர்தல் போன்ற சில விடயங்களே பரிந்துரைகளாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை “முன்னேற்றம்” என பல தரப்புக்களும் புகழாரம் சூட்ட முற்படுகின்றனர். ஆனால் இங்கு போர்க் குற்றங்களுக்கு, பொறுப்புக் கூறுதல் என்ற போர்வையில் அது பற்றி குறிப்பிடப்படாது, போருக்குப் பின்னர் அரசு கட்டாயமாக செய்தே ஆகவேண்டிய விடயங்களையும், ஏற்கனவே சர்வதேச அழுத்தங்களால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயங்களையும் செயற்படுத்த வேண்டிய பரிந்துரைகளாக கூறப்பட்டுள்ளது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தப் பரிந்துரைகள் முன்னேற்றகரமானவை என்று கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி, இவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகளைத் தெரிவு செய்து, இவ் அறிக்கையை தாம் நடைமுறைப்படுத்துவது போன்ற ஓர் பாவனையை வெளிப்படுத்தலாம்.
அவற்றை நடைமுறைப்படுத்தக் கோருவதன் மூலம் அரசுக்கு பெரிய நெருக்கடிகள் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே அரசாங்கத்திடமுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அரசாங்கத்தினால் ஏதோ ஒரு வகையில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்படி காரணங்களுக்காக எல்.எல்.ஆர்.சி; பரிந்துரைகளை நிராகரிப்பதாக 19-12-2011 அன்று அறிவித்திருந்தது. அதற்காக 105 பக்க அறிக்கையையும் வெளியிட்டது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் போரின் இறுதிக் கட்டத்தில், இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் மேற்படி நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு, இரத்தக்களறி ஏற்பட்டால், பின்விளைவுகள் இருக்குமென்பதனை சிறீலங்கா அரசுக்கு தாம் அழுத்தமாகக் கூறியுள்ளதாக, மேற்கு நாட்டு இராஐதந்திரிகள் அப்போது கூறிக் கொண்டிருந்தனர்.
எனினும் போர் முடிந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவோ, நீதி பெற்றுக் கொடுக்கப்படவோ இல்லை.

மாறாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தற்போது nஐனீவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், கடந்த 07-03-2012 அன்று தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்துள்ளனர். அந்தத் தீர்மானத்தில் முக்கியமாக மூன்று விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

• கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன், நீதி, பொறுப்புக் கூறுதல், சகல இலங்கையர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த பொருத்தமானதும், நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், சட்டரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும், நிறைவேற்றவும், சிறீலங்கா அரசைக் கோருதல்.

• கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறீலங்கா அரசாங்கத்தைக் கோருதல்.

• மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும், தொழிநுட்ப உதவிகளையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வழங்குமாறும் சிறீலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன், இது தொடர்பாக, வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையகத்தின் 22வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இந்த தீர்மானத்தினை நாம் கவனமாக அவதானித்தால், அதில் தெளிவாகின்ற விடயம் யாதெனில், சிறீலங்கா அரசு சர்வதேச மட்டத்திலிருந்து வரக்கூடிய நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக தானாகவே உருவாக்கிய எல்.எல்.ஆர்.சி வெளியிட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோருகின்ற ஒரு தீர்மானமாகவே இது அமைந்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் அந்த எல்.எல்.ஆர்.சி யில் கவனிக்கப்படாத, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்பாக நீதி கேட்கின்ற விடயத்தில் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட உள்ளக பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்று மட்டுமே கோரப்பட்டுள்ளது.
தவிர, ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில் தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, ஏற்கனவே உள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டுமென்றே கோரப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
அதாவது ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குட்பட்டு மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலம் 13 வது திருத்தத்தினுள் தமிழ் அரசியலை முடக்கும் நோக்கிலேயே தீர்மானம் அமைகின்றது.

இரத்தக்களறி ஏற்பட்டால் அதற்கான விளைவுகள் இருக்குமென்று தாம் சிறீலங்கா அரசாங்கத்தை எச்சரித்திருப்பதாக யுத்தகாலத்தில் கூறிக்கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள், இன்று சர்வதேச பக்கச்சார்பற்ற போர்க்குற்ற விசாரணை என்ற எந்தப் பேச்சும் இல்லாது, வெறும் கண்துடைப்பிற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை அமுல்ப்படுத்துமாறு கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவந்துள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி தீர்மானத்தை கொண்டுவந்த அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒன்றின் மூலம், தமது பூகோள நலன்களை இலங்கையில் பேணுவதற்கு ஒத்துழைக்கக் கூடிய ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முடியுமென்று நம்புகின்றன.
அவ்வாறான ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுமிடத்து, தற்போது கொண்டுவரும் தீர்மானம், அத்தகைய புதிய ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானம் தமிழ் மக்களுக்கு கடுமையான ஏமாற்றமளிப்பதாக உள்ளது. அவ்வாறு ஏமாற்றம் ஏற்படுவதனை தடுத்து, தமிழ் மக்களுக்கும் நன்மை கொடுக்கக் கூடிய ஓர் தீர்மானத்தினைக் கொண்டுவருவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனம் வைத்திருந்தால் அதனைச் சாதித்திருக்க முடியும்.
அதாவது சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை அத்தியாவசியம் என்ற விடயத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தால், தற்போது அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம், தமிழ் மக்களது நலன்களையும் பேணத்தக்க வகையில் இருந்திருக்கும்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிற சக்திகள் விரும்பும் முடிவுகளை தமிழ் மக்களுக்கு விற்பனை செய்வதனையே தமது பணியாகக் கொண்டுள்ளது. அதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த இருந்த அரிய சந்தர்ப்பத்தினையும் போட்டுடைத்துள்ளனர்.

வல்லரசுகளுக்கு இடையே இடம் பெறும் பூகோள ஆதிக்கப் போட்டியில், தமிழ்த்தரப்புக்கள் அவர்களது தீர்மானத்தில் எவ்விதத் தாக்கத்தினையும் ஏற்படுத்தவே முடியாது. இங்கு இடம்பெறும் காய்நகர்த்தல்களில், காய் நகர்த்துபவர்களாக வல்லரசுகள் மட்டுமே உள்ளதாகவும்;, வெறுமனே சதுரங்கக் காய்களாகவே தமிழர்கள் இருக்க முடியும் எனவும், தீர்மானங்களை மாற்றுவதில் தமிழ் மக்களின் கைகளில் எதுவும் இல்லை எனவும் கூறித், தமிழ் மக்களை தவறாக வழிநடத்த சில ஆய்வாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இது தவறு என நான் கூறுவதற்கு பின்வரும் இரண்டு காரணங்கள் உள்ளன.
1)இலங்கைத் தீவில் தமது ப+கோள நலன்களைத் திடப்படுத்துவதற்கு தமிழரது அரசியலே மேற்குலகிற்கு ஓர் முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்திருக்கின்றது. ஆகவே தமிழர்களது குறைந்த பட்ச அபிலாசைகளைத் திருப்திப்திப்படுத்தியே தமது காய் நகர்த்தல்களைச் செய்ய வேண்டிய அவசியம் சர்வதேசத்திற்கு உள்ளது.
அந்தக் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு என்னவென்பதைத் தமிழர்தான் வரையறுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைப் பிற சக்திகளிடம் விட்டுள்ளமையே நாம் இன்று இருக்கும் இழிநிலைக்குக் காரணமாகும்.

2)தற்போது ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானமும், தமிழரது பெயரிலேயே தமிழருக்கு நன்மை பயக்கும் என்ற அடிப்படையிலேயே கொண்டுவரப்படுக்கின்றது. எமது பெயரில் எமக்கு நன்மை பயக்கும் என்று கொண்டுவரப்படுகின்ற தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது தேவை, எமது எதிர்பார்ப்பு, என்ன என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானமானது தமிழர்களது தேவையும் எதிர்பார்ப்பும் எல்;.எல்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துவதே என்ற தவறான வெளிப்படுத்தலையே செய்துள்ளது.

எல்.எல்.ஆர்.சி யினை நிராகரிப்பதாக கூட்டமைப்பு தாம் ஏற்கனவே முடிவை தாமே நிராகரித்து, மேற்படி தீர்மானத்தை ஆதரித்துள்ளதன் மூலம் வெளிப்படுவது யாதெனில்;, கூட்டமைப்பு ஆரம்பத்தில் எல்எல்ஆர்சி பரிந்துரைகளை நிராகரிப்பதாக அறிவித்ததமையானது தமிழ் மக்களை திருப்திப்டுத்தும் வகையில் தாம் நிராகரித்திருக்கின்றோம் என்பதனை பதிவு செய்வதற்காக மட்டுமேயாகும். அவ்வாறு அறிக்கை வெளியிட்டிருந்தாலும் கூட நடைமுறையில் அப்பரிந்துரைகளுக்கு ஆதரவாகவே செயற்பட்டுவந்துள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானம் ஒன்றினை கொண்டுவரச் செய்வதற்கு வலியுறுத்தாமல் விட்டதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறு இழைத்துள்ளது. அது மட்டுமல்ல, எல்.எல்.ஆர்.சி யின் பரிந்துரைகள் அமுல்ப்படுத்தப்பட்டால் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுமெனக் குறிப்பிட்டு, எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமுல்ப்படுத்தக் கோரி அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐநா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதம் எழுதியமை மன்னிக்க முடியாத மற்றுமொரு வரலாற்றுத் தவறு.

கூட்டமைப்பினரின் இந்த வரலாற்றுத் தவறான முடிவுகளால் மக்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிப்பலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களால், அவர்கள் மக்களை முட்டாள்கள் என்று கருதுவதாகவே கொள்ளவேண்டும்.
கூட்டமைப்பு தமிழ் மக்களது நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பாடாது, பிறசக்திகளது நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டுவருகின்றது என்பதனை 2010 இன் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்றோம். இந்நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் தமிழ் மக்களது நலனை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டு, படுகொலைக்கான நீதியையும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வையும் பெற்றுத் தருவதற்காக நேர்மையுடன் உழைக்கின்றனர் என்ற நம்பிக்கையுடன் தாயகத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையைக் கேட்டு, புலம்பெயர் தேசத்திலுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை (பி.ரி.எவ்), கனேடியன் தமிழ்க் காங்கிரஸ்(சி.ரிசி), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை (யூ.எஸ்.டி.பி.ஏ.சி), தமிழ் இளையோர் அமைப்பு (ஐக்கிய இராச்சியம்) உள்ளிட்ட சில அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்து தமிழ் தலைமைகள் என்று கூறிக் கொள்பவர்கள் மேலுள்ளவாறு செயற்பட்டுக்கொண்டிருக்க, ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கூட்டாக எழுதியள்ள கட்டுரையொன்றில் , தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்;மானம் மிகவும் பலவீனமானதென்றும், இலங்கை தொடர்பான பிரச்சினைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றே தீர்வாக அமையும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment