Translate

Sunday, 30 December 2012

யாழ். பல்கலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம்: சரத் பொன்சேகா

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவுமின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமனானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யாரேனும் ஒருவரைக் கைதுசெய்வதாக இருந்தால் அந்த நடவடிக்கை, சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வித பாகுபாடும் இருத்தலாகாது. ஏனெனில், சட்டம் யாவருக்கும் சமனானதொன்றாகும்.

நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, கைது செய்யப்பட்டவர்களை தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கோ நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு நீதிமன்ற உத்தரவின்றியே மாற்றப்பட்டுள்ளனர்.

அப்படியானால், எந்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது?

பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் இந்த விடயத்தில் செயற்பட்டிருப்பார்களானால் அது கண்டிக்கத்தக்கதாகும்.

அதேவேளை, பிரதம் நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் ஆரம்பம் முதலே கூறிவருகின்றோம்.

பழிவாங்கல் நடவடிக்கைக்குப் புறம்பாக இதில் வேறொன்றும் இல்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment