முள்ளிவாய்க்காலை சீனாவுக்கு விற்கும் அரசு எமது மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது
பணம் புரட்டுவதையே நோக்காகக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிகளை சீனாவுக்கு தாரைவார்க்கின்ற அரசாங்கம் எமது மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
வன்னி மக்கள் தமது தேவைக்குக் கூட மண் அகழ முடியாத நிலையில் 14 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து ஒரு டிப்பர் மணலை பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ள நிலையில் அநுராதபுரத்தில் அனுமதி பெற்றிருப்பதாகக் கூறி பெரும்பான்மையினர் வன்னியில் மணல் அகழும் நிலை காணப்படுகின்றது.
இதற்கான அனுமதி குறித்து அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கடல் மாசடைதல் தடைச் சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், வன்னியிலுள்ள ஆறுகளில் பாரிய மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எமது பகுதிகளில் அழிவுகள் இடம் பெறுகின்றன. வன்னி நிலப்பரப்பு ஆறுகளில் மண் அகழ்வதற்கு முகவர் முறைமை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மேற்படி முகவர்கள் ஊடாக மண் அகழ்வு இடம் பெறுகின்றது.
இந்த கவர்கள் அநுராதபுரத்தில் அனுமதி பெற்றிருப்பதாக கூறுகின்றனர். வன்னி நிலத்தில் மண் அகழ்வதற்கு அநுராதபுரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக இருப்பின் இது குறித்து இயற்கை வள அமைச்சு ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மேற்படி அனுமதிகள் எந்த வழிவகையில் வழங்கப் பட்டுள்ளன என்பது புரியாதுள்ளது.
இதேவேளை, இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் அதிகமாக எமது கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதன் காரணத்தால் எமது பகுதி கடல் வளம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. பவளப்பாறை அழியும் நிலை உருவாகின்றது. எமது மீனவர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருந்துவரும் மேற்படி ரோலர் படகுகள் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment