முல்லைத்தீவு கொக்கிளாயில் சிறீலங்காப்படையினர் இந்து கடவுள்களின் சிலையினை உடைத்தெறிந்துவிட்டு அங்கு புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கொக்கிளாயில் அங்கு வாழ்ந்த மக்களால் பன்னெடுங்காலமாக வழிபடப்பட்டு வந்த இந்துக் கடவுள்களின் சிலையை அகற்றி புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

கொக்கிளாய் மருத்துவமனைச் சுற்றாடலில் இருந்த அரச மரத்தடியில் அறிமுகப் பிள்ளையார் வைரவர் ஆகிய இரு இந்துக் கடவுள்களின் சிலையை அகற்றிவிட்டு அவ் இடத்தில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர் சிறிலங்காப் படையினர்.

அத்துடன் அங்கு பெரிய அளவில் விகாரை ஒன்றும் கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென குறித்த இடத்தை சுற்றியுள்ள சுமார் ஏழு ஏக்கர் காணியும் அபகரிக்கப்படவுள்ளது.குறித்த இக் காணிகள் அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் அங்கு ஒரு புத்த பிக்குவும் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்.

சிறிலங்காப் படையினரின் இவ் அடாவடிச் செயலால் அப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இங்கு வாழும் மக்களால் கடந்த 08.02.2012 அன்று இப் பகுதிக்கு வருகை தந்த சிறீலங்கா ஜனாதிபதியின் புதல்வரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக விகாரை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மட்டும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறித்த இப் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த இடம். இங்கு பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருமே வசிக்கவில்லை எனவும் யுத்தத்தின் பின் மீள்குடியமர்வு செய்யப்பட்டபோது சில சிங்களக் குடும்பங்கள் இப் பகுதியை அடுத்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள போதும் அவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் என அப் பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.