குழந்தைகளை பாராட்டுங்கள், வளர்ச்சி அதிகரிக்கும்!
மனம் விட்டு பாராட்டுங்கள்
குழந்தைகள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் செய்யும் செயலை பெற்றோர்கள் மனம் விட்டு பாராட்ட வேண்டும். மேலும் அவர்களின் சாதனைக்கு அளிக்கும் பாராட்டை விட உழைப்பிற்கு அதிக பாராட்டை அளிக்க வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றியும், மன்னிப்பும்
குழந்தைகள் ஏதாவது ஒன்றை நமக்கு கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். அதேபோல் குழந்தைகளை பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் ஏதாவது செய்துவிட்டால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர்.
செல்லமே என கொஞ்சுங்கள்
குழந்தைகள் பூவை விட மென்மையானவர்கள். அவர்கள் வளரும் பருவத்தில் புதுப்புது அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை கொஞ்சிக் கொஞ்சி அழைப்பதும், அவர்களை செல்லப் பெயரிட்டு அழைப்பதும் அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ லவ் யூ சொல்லுங்கள்
குழந்தைகளை பார்த்து அடிக்கடி ஐ லவ் யூ என்று கூற வேண்டுமாம். இதனால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறதாம். குழந்தைகளோடு குழந்தைகளாய் மாறி அவர்களோடு விளையாட வேண்டும். சிறந்த ஆசானாய் மாறி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊக்கப்படுத்துங்கள்
குழந்தை தனியாகவோ அல்லது மற்ற குழந்தைகளுடனோ விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தவேண்டும். மேலும் குழந்தைகளை அன்பாக பராமரிப்பதோடு, கண்காணிக்கவேண்டும். இது குழந்தைகளின் மனதிற்கு நலம் தரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரம் ஒதுக்குவது அவசியம்
குழந்தைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அவர்களின் தேவை என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். எப்பொழுதும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டுமாம்.
ஒதுக்க வேண்டாம்
குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. எனவே யாரையும், எவரோடும் ஒப்பிடக்கூடாது. ஒருபோதும் குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது. அவர்களை ஒதுக்கவும் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
புரிந்து கொள்ளுங்கள்
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குழந்தைகளிடம் நன்றிக்கடன் எதிர்பார்க்கக்கூடாது. பெற்றோர்களின் விருப்பத்தினால்தான் குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் ஒன்றும் தாங்கள் பிறக்கவேண்டும் என்று கேட்கவில்லை. எனவே பெற்றோர்கள் அதனை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும்.
இந்த கட்டளைகளை பின்பற்றினால் உங்கள் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பலசாலியாக திகழ்வார்கள். எதிர்காலத்தில் நல்ல நடத்தையுடன் தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் உயர்வார்கள் என்றும் குழந்தை நல நிபுணர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment