Translate

Monday 12 March 2012

வடக்கில் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறார் எண்ணிக்கை 2,087; 10,404 சிறுவர் இருவரில் ஒருவரை இழந்துள்ளனர்


வடக்கில் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறார் எண்ணிக்கை 2,087; 10,404 சிறுவர் இருவரில் ஒருவரை இழந்துள்ளனர்
news
வட மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 சிறார்கள் தமது தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர். 10 ஆயிரத்து 404 சிறார்கள் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரை இழந்த நிலையில் உள்ளனர்.

 
இந்தச் சிறார்களில் சிறுவர் இல்லங்களில் இருப்பவர்களை விட அதற்கு வெளியே உறவினர்களுடன் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இவ்வாறு 10 ஆயிரத்து 878 சிறார்கள் தங்கியுள்ளனர். அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களில் ஆயிரத்து 613 சிறார்கள் தங்கியுள்ளனர்.
 
வடமாகாண நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கையே இவை என அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
 
உள்நாட்டுச் சண்டை காரணமாகவே அதிகமான சிறார்கள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். தவிர வறுமை விபத்து மரணங்கள், இயற்கை மரணங்களும் இதற்குக் காரணமாக உள்ளன.
 
இவை பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் யாழ்ப்பாணச் சிறுவர் இல்லங்களில் 127 பேரும், வவுனியா சிறுவர் இல்லங்களில் 120 பேரும், மன்னார் சிறுவர் இல்லங்களில் 99 பேரும், கிளிநொச்சி சிறுவர் இல்லங்களில் 41 பேரும், முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களில் 31 பேரும் தங்கியுள்ளனர்.
 
பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் 413 பேரும், வவுனியாவில் 360 பேரும், முல்லைத்தீவில் 357 பேரும், கிளிநொச்சியில் 334 பேரும், மன்னாரில் 205 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
 
பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையில் யாழ்ப்பாண சிறுவர் இல்லங்களில் 563 பேரும், கிளிநொச்சி சிறுவர் இல்லங்களில் 232 பேரும், வவுனியா சிறுவர் இல்லங்களில் 223 பேரும், மன்னார் சிறுவர் இல்லங்களில் 120 பேரும், முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களில் 57 பேரும் தங்கியுள்ளனர்.
 
பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் 439 பேரும், மன்னாரில் இரண்டாயிரத்து 387 பேரும், முல்லைத்தீவில் இரண்டாயிரத்து 61 பேரும், கிளிநொச்சியில் இரண்டாயிரத்து 61 பேரும், வவுனியாவில் 261 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
 
சிறுவர் இல்லங்களுக்கு வெளியே உள்ள இந்தச் சிறார்களில் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையிலேயே அதிக சிறுவர்கள் உள்ளனர். இவ்வாறு 9 ஆயிரத்து 209 சிறார்கள் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment