Translate

Monday 12 March 2012

கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது;அரியநேத்திரன்


கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது;அரியநேத்திரன்
news
தமிழ் தேசியக் கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது அவ்வாறு நினைப்பது பகல் கனவாகவே இருக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


மட். கல்குடா களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா அமர்வுக்கு செல்லவில்லையென பலரும் பலவிதமாக கதைக்கிறார்கள் தமிழ் தேசிய பற்றாளர்கள்,தமிழ் தேசிய உணர்வாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த எமது மக்கள் தமிழ் தேசியத்தை நேசிக்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பவர்கள் என பலதரப்பட்டோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்கின்றனர்.

இவர்களின் இந்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் நாம் வரவேற்கின்றோம். மேலும் இவர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிய பதிலை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது இதில் எதுவித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

ஆனால் தமிழ் தேசியத்திற்கு விரோதமான பச்சோந்திகளும்,எதிரிகளும்,சந்தர்ப்பவாதிகளும் மகிந்த அரசாங்க போடும் எழும்புத் துண்டுக்காக தமிழ் இனத்தை குட்டிச்சுவராக்குகின்றவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பற்றி குறை கூறுவதற்கோ விமர்சனம் செய்வதற்கோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அறிவுரை கூறுவதற்கோ எதுவித அருகதையும் இல்லை.

ஜெனிவா செல்லாத காரணத்தைக் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதற்கு சில தீய சக்திகள் அரசாங்கத்தின் ஊது குழலாக இருக்கின்ற ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்கின்றன.

இதை எமது மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களும் எமது தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஊடகங்களும் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரைக் கூட விலைக்கு வாங்கலாம் அல்லது பிரிக்கலாம் என்று மகிந்த அரசாங்கம் நினைப்பது பகல்கனவாகவே அமையும்.

எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எங்களை நேசிக்கின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கும் எந்தவித துரோகங்களும் நாங்கள் செய்ய மாட்டோம் யாராவது செய்வதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அனைவரும் கொள்கையில் உறுதியுடன் இருக்கின்றோம் எங்களுக்குள் ஏற்படும் வாத பிரதிவாதங்களை எங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொண்டு
செயற்படுகின்றோம். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பலத்தையும் அதனூடாக ஒரு அரசியல் தீர்வையுமே வேண்டி நிற்கின்றனர்.

எனவே இந்த விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு எம்மை பிரிக்கின்ற சதிலைக்கு பின்னால் இருக்கின்றவர்களையும் இந்த சதிவலைக்கு துணைபோகின்ற ஊடகங்களையும் இனம்கண்டு தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறான சதிமுயற்சிகள் எப்போது அரங்கேறினாலும் அவை அனைத்தையும் முறியடித்து எமது விடுதலைப் பாதையில் இருந்து விலகாமல் செல்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் உறுதியுடன் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment