Translate

Monday, 5 March 2012

இறந்த தமிழனுக்கே நீதி கிடைப்பதை தடுக்கிறது இந்தியா..



நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பேசும் மொழியிலே...
வன்னியில் நடந்த போரில் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்றமைக்கு இந்தியா துணை போனது உலகறிந்த உண்மை. 
இப்போது அமைதியான முறையில் காய் நகர்த்தி சிங்களத்தை அல்ல சிங்கள இனவாதத்தை காப்பாற்ற இந்தியா களமிறங்கியுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.

நடைபெறும் சிக்கல் சிறீலங்கா என்ற நாடு, அதனோடு சம்மந்தப்பட்ட இந்திய, சீன பிராந்திய நலன் சார்ந்த விடயமல்ல. இனவாத வெறியோடு மானிடத்திற்கு விரோதமாக ஓர் இனத்தின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். மானிட விரோதிகள் மீதான குற்றத்தை பதிவு செய்யும் ஒரு சந்தர்ப்பமே ஜெனீவாவில் நடக்கிறது. இந்த இடத்தில் சீனா அல்ல இந்திய தேசத்தின் ஆத்மம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியா சிந்திக்கத் தவறியிருக்கிறது.
இந்திய இராஜதந்திரிகளுக்கும் சிறீலங்கா இராஜதந்திரிகளுக்கும் எதிராக தமிழன் என்ன செய்தான். இறந்து போன மக்களின் குரலாக இருப்பது சம்மந்தர் எழுதிய கடிதம் மட்டுமே. இத்தனை இராஜதந்திரிகள் களமிறங்கி இவ்வளவு பாடுபடுகிறார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதி என்று கூறும் கூட்டமைப்பு அங்கு பிரசன்னமாகவில்லை.
பேச அனுமதி இல்லை என்பதால் போகவில்லை என்கிறார் மாவை. இப்போது தமது முடிவுக்கு எதிராக கதைப்பதே தேசியத்தை சீர் குலைக்கும் என்கிறார். இந்தியர்கள் பேசமல்தானே இரவிரவாக காரியம் கொண்டோடுகிறார்கள். பேசாவிட்டாலும் தமிழ் மக்களின் உணர்வுக்காக புறப்படுகிறோம் என்று இரண்டு பேராவது வந்து ஊர்வலம் போயுள்ள புலம் பெயர் மக்களின் முன்னாலாவது நின்றிருக்கலாமே.. பேச அனுமதி இல்லாத இடத்திற்கு கடிதம் எழுதி என்ன பிரயோசனம்..? சுரேஸ் பிரேமச்சந்திரனும், அரிய நேந்திரனும் வழமைபோல அடக்கி வாசித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு தாங்கள் தொடர்ந்தும் தலைமை தாங்க இருப்பதாக கூறியுள்ளார்கள்.
இப்போது மகிந்தவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவநாதன் கிஷோர் எம்.பி எங்கே..? அவருடைய குரல் எப்படி அடங்கிப் போனது.. கூட்டமைப்பும் மகிந்தவுடனும், இந்தியாவுடனும் தப்பான வழியில் உறவு வைத்தால் இறுதியில் முகவரியற்று போகவே நேரும். எல்லாம் தருவதாக சொன்னார்கள், அதை நம்பி ஜெனீவா போகாமல் விட்டோம் அந்தோ கடைசியில் ஏமாற்றிவிட்டார்கள் என்று அடுத்த தேர்தலுக்கு யாழில் கூட்டமைப்பு செய்யும் பிரச்சாரம் காதுகளில் இப்போதே ஒலிக்கிறது.
இறந்தவர்கள் இறந்தவர்களே.. அவர்கள் நீதி கேட்க வரப்போவதில்லை. ஆனால் உயிருடனிருக்கும் தமிழன் இந்த பம்மாத்துக்களை பார்த்துக் கொண்டு சவமாக இருக்கிறானே என்பதுதான் செத்துப்போன ஆத்மாக்களின் வருத்தமாகும். உயிருடன் இருக்கும் தமிழனுக்கு மட்டுமல்ல இறந்த பின்னும் தமிழனுக்கு நாம் எதிரியே என்றுதான் இந்தியாவும், சிறீலங்காவும் அறிவித்துள்ளன.
இது குறித்த இன்றைய செய்தி வருமாறு :
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழாம், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா மாநாட்டில் இலங்கையை ஆதரிக்கப் போவதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே, இந்தியா தனது மௌனத்தைக் கலைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைத் தாம் பகைத்துக்கொண்டால், சீனாவின் பிரசன்னம் இலங்கையில் மேலோங்கிக் காணப்படும் என்றும், கொழும்புக்கும் டில்லிக்கும் இடையிலான பொருளாதார ரீதியிலான உறவில் விரிசல் என்றும் இந்திய அரசு கருதியதாலேயே இவ்வாறானதொரு முடிவை அந்நாடு எடுத்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்குலக நாடுகளுக்கும், இலங்கைக்கும் இராஜதந்திர போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் வொஷிங்டனுடன் பேச்சுகளை முன்னெடுத்துள்ள இந்தியா, கொழும்புக்கு எதிரான பிரேரணையைத் தடுத்துநிறுத்தும் வகையில் காய்நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறும் இந்தியா அந்நாட்டிடம் கோரியுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கை, மீள்கட்டுமான செயற்பாடுகள், புனர்வாழ்வு உட்பட கொழும்புக்குச் சாதகமான வகையிலான காரணிகளையும் இந்தியா மேற்குலகத்திடம் எடுத்துரைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.
அதேவேளை, இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமெரிக்காவின் பதில் அமைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசு, சர்வதேசம் வழங்கிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இனிமேலும் கால அவகாசத்தை வழங்க தாம் தயாரில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள அமெரிக்கா, பிரேரணை சபைக்கு வந்தேதீரும் என ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்கா தனது கோரிக்கையை நிராகரித்ததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்புநாடுகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என அறியமுடிதுள்ள போதும், அது குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எது எப்படியிருப்பினும், இலங்கை தொடர்பிலான பிரேரணை, வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதனை 25இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவேண்டுமாயின், மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அது குறித்து அறிவிக்கவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment