Translate

Monday 12 March 2012

யாழில் விளக்கம் அளித்த எம்பிக்களுக்கு ஜெனிவாக் கூட்டத் தொடர் விழலுக்கு இறைத்த நீரா?


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள பின்னணியில், எல்லா அணிகளுமே இரண்டுபட்டு நிற்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு அமெரிக்கா ஒரு அணியைச் சேர்த்து வைத்துள்ளது.

இதை எதிர்ப்பதற்கு இலங்கை அரசு மற்றொரு அணியைத் தயார்படுத்தி வருகிறது. இரண்டுபட்டு நிற்கும் அணிகள் இந்த நிலைப்பாட்டை எடுக்கப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்கா மீது கொண்டுள்ள விசுவாசம், இலங்கையை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வைத்து நிலையான சமாதானத்தை அடைய வைத்தல் என்பன ஒரு அணியின் நோக்கம்.
மற்றொரு அணியின் நோக்கம்,  இலங்கையை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் அமெரிக்காவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக உள்ளது. இந்தப் பிளவு நிலை ஐ.நா மனித உமைரிகள் பேரவையில் தொடங்கி பல்வேறு வட்டங்களில் விரிந்து போயுள்ளது. இந்தத் தீர்மானம், அதைச் சார்ந்து நடை பெறும் விவாதங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டுபட்டு நிற்கிறது.
தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்ற போதும் ஜெனீவா செல்லும் விவகாரம் அவர்களைப் பிளவுபடுத்தி விட்டது. இந்தநிலையில் தமது முடிவை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் பிரசாரங்களை செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இதுபற்றி விளக்கமளிக் கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் சுமந்திரன், மாவை.சேனாதிராசா, சிறிதரன் ஆகியோரே பங்கேற்றனர். இவர்கள் தமிழரசுக் கட்சியைச் சார்ந்து இயங்குபவர்கள்.
சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன் போன்ற கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை. இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகள் ஜெனீவா கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற தொனியில் அமைந்திருந்ததைக் காண முடிகிறது. 3 நிமிட உரைக்காக  ஏதோ ஒரு மனித உரிமை அமைப்பிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும், அது தமிழர்கள் எதிர்பார்க்கும் விடிவைத் தந்து விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் பற்றி ஒன்றும் அறியாதவர்களைச் சமாதானப்படுத்த வேண்டுமானால் உதவலாம். வெறுமனே 3 நிமிடம் உரை மட்டும் தான் ஜெனீவாவில் நடப்பதில்லை. அதற்கும் அப்பால் ஜெனீவா கூட்டத்தொடரிலும், அதனை ஒட்டியும் பல்வேறு காரியங்கள் நடந்தேறுகின்றன.
கூட்டத்தொடருக்குப் புறம்பாக பல துணை மாநாடுகள், சந்திப்புகள் நடக்கின்றன. இலங்கை விவகாரம் குறித்து ஆராயும் இத்தகைய பல கூட்டங்கள் இம்முறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும், அவற்றின் ஆதரவைப் பெறவும் முடியும். இப்போது கூட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு முழுமையான ஆதரவு உள்ளது என்று யாரும் உறுதியாகக் கூறடியாது.இலங்கை அரசு இதனைத் தோற்கடிக்க கடுமையாக முனைகிறது.அதில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறது.
அப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அது இலங்கை அரசு மேற்கொண்ட பிரசாரங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படும். இப்படியானதொரு கட்டத்தில் இலங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அவதானிக்கிறோம் என்றும், ஜெனீவாவுக்குப் போய் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றும் நியாயம் கூறிக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு. பேரவையின் 3 நிமிட உரைக்காகவும், இராஜதந்திகளுக்கு மதிய விருந்து கொடுப்பதற்காகவும் ஜெனீவா செல்ல வேண்டிய தில்லை என்று கூட்டமைப்பு கருதுமானால் இராஜதந்திரத்தை இன்னமும் அவர்கள் எவ்வளவோ கற்க வேண்டியுள்ளது என்றுதான் விளங்கிக் கொள்ள முடியும். ஜெனீவா செல்லும் முயற்சியை கைவிட்டதற்கு கூட்டமைப்புக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம்.
இரா.சம்பந்தனின் பாணியில், அவற்றைப் பற்றி எல்லா விடயங்களையும் வெளியே சொல்ல முடியாது என்று கூட கூறி விடலாம். அதற்காக ஜெனீவா கூட்டத்தொடருக்குச் செல்வதில் பயனில்லை என்பது போல வெளியிடப்படும் கருத்து ஏற்புடையதாக இருக்க முடியாது. இது தமது தவறான முடிவை நியாயப் படுத்தும் முயற்சி.
இதனை கூட்டமைப்பில் உள்ள ஏனைய தலைவர்களாலேயே ஏற்க முடியாது போன போது ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்ப முடியாது. அதைவிட கூட்டமைப்பை குழப்புவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை அரசாங்கம் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியெல்லாம் மோசமாக வசைபாடிக் கொண்டிருந்த அரசதரப்பும், அரச ஊடகங்களும், திடீரென இரா.சம்பந்தனை தேசப்பற்றாளரென கொண்டாடியதில் இருந்து இதை அரசாங்கம் எவ்வளவுக்கு சாதகமாக்கிக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் பின்னாலுள்ள ஆபத்தை கூட்டமைப் பின் தலைமை சரிவரப் புரிந்து கொண்டுள்ளதா என்பது தெரியவில்லை.
இதைவிட கூட்டமைப்பின் பெயரில் வெளியார் அறிக்கை வெளியிட்டுக் குழப்பம் விளைவிக்கும் காரியங்களும் நடந்தேறின. இதுபோன்ற நிலை கூட்டமைப்பின் ஆரோ க்கியமான எதிர்காலத்துக்கு ஏதுவானதாக இருக்க முடியாது. கூட்டமைப்பின் மீதான சந்தேகங்களையும், அவ நம்பிக்கைகளையும் தான் மக்கள் மத்தியில் அதிகப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப் படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இப்போதைய நகர்வு அத்தகைய நிலை ஒன்றை நோக்கியே செல்கின்றது. இது ஆபத்தான பாதை என்பதை கூட்டமைப்பின் தலைமைகள் உணராது போனது வேடிக்கை என்பதை விட வேதனையானது எனலாம்.
ஹரிகரன் (வீரகேசரி)

No comments:

Post a Comment