ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவீடன் நாட்டில் 1994ம் ஆண்டுக்கு முன்னார் சுவீடன் பிரதமருக்கு எதிராக வெளியான செய்தி தொடர்புடையச் செய்தித்தாள் ஒன்றுக்கே அதிக தண்டனையாக சுவீடன் நாட்டில் தீர்ப்பளிக்கபட்டிருந்த நிலையில் அதனைத் தாண்டி அதிக தண்டனை இலங்கை உளவுத்துறையின் சதியென கருதப்படும் வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுவீடன் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கே.ரி.இராசசிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கே.ரி.இராசசிங்கம் குற்றவாளி என்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் சேதுரூபனுக்கு 20ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அதற்கான வட்டியையும் அவருக்கு ஏற்பட்ட மேலதிக பண இழப்புக்களையும் செலுத்த வேண்டும் என்றும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிய கற்கைகளுக்கான உலக நிறுவனம் என்ற நிறுவனமே ஏசியன் ரிபியுண் என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறது.
இந்த இணையத்தளத்தின் தலைவராக கே.ரி.இராசசிங்கம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக எகெமினி எபிவோக், மகிந்தபால, தயாகமகே, கொடித்துவக்கு, பிலிப் பெர்னாண்டோ, சுமன லியனாராச்சி, லீல் பத்திரன ஆகிய பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோர்வேயில் உள்ள நடராசா சேதுரூபன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2003, 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் கே.ரி.இராசசிங்கம் தன்னிடம் தொடர்பு கொண்டு நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு எதிராகவும் செயற்படுவோம் என கோரினார்.
நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவோ நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே தான் செயற்பட மாட்டேன் எனத் தான் மறுத்து விட்டதாகவும் சேதுரூபன் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கே.ரி.இராசசிங்கம் தன்னை பயங்கரவாதி என்று எழுத ஆரம்பித்தார் எனத் தெரிவித்துள்ளார் சேதுரூபன்.
கே.ரி.இராசசிங்கம் ஏசியன் ரிபியுண் இணையத்தளத்தில் சேதுரூபனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால் சேதுரூபன் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி இத்தீர்ப்பை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பை ஏசியன் ரிபியுண் இணையத்தளத்தில் முன்பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏசியன் ரிபியுண் இணையத்தளதிற்குச் சாட்சி சொல்வதற்காக இலங்கையில் இருந்து இராணுவ கொமாண்டோ அதிகாரி ஒருவர் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment