பிஞ்சு உடலைக் கீறிக் கிழித்த EPDP காமுகர்: நடந்தது என்ன ?
அது ஒரு அழகிய கிராமம். தனித் தனியான அரச அலுவலகங்கள் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றன. அந்தக் கிராமம் நீண்டதும், நீண்டதூரத்தில் இருப்பதாலோ என்னவோ அதற்கு ஏற்றாற்போல் பெயரும் அமைந்துள்ளது. அதுதான் நெடுந்தீவுக் கிராமம். அது கிராமமாக இருந்தாலும் நகரம் போலவே அதன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த கிராமத்தில் மார்ச் 3 ஆம் திகதி இடம்பெற்ற கொடூரச் சம்பவம் அனைவரையும் ஒரு கணம் அதிரவைத்துள்ளது. நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி இலங்கைத்தமிழ் மக்கள் அனைவரிடத்தும் அந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தில் மார்ச் 3 ஆம் திகதி இடம்பெற்ற கொடூரச் சம்பவம் அனைவரையும் ஒரு கணம் அதிரவைத்துள்ளது. நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி இலங்கைத்தமிழ் மக்கள் அனைவரிடத்தும் அந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி யேசுதாசன் லக்சினியின் கொலைச் சம்பவமே அது. லக்சினி பாலியல் வல்லுறவுக்குப் பின் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தில் வசித்து வருகிறார் யேசுதாசன். அவர் ஒரு கூலித்தொழிலாளி. குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்குச் செல்லும் பொருட்களை தனது மாட்டு வண்டிலில் ஏற்றி உரியவரின் இடத்தில் இறக்குவதே அவரது தொழில். இவரது மனைவி பிரிடா கிலாறா. யேசுதாஸன்-பிரிடா கிலாறா தம்பதியினருக்கு ஏழு பிள்ளைகள். அதில் லக்சினி (வயது – 13) நான்காவது பிள்ளை.
கஜேந்திரன், திலசினி, கொட்வின், பஸ்மிலன், மைக்கன், ஜென்சி ஆகியோர் லக்சினியின் சகோதரர்கள். இவர்களில் லக்சினி தான் சுட் டிப்பிள்ளை. பாடசாலை முதல் வீடு வரை என்ன வேலை என்றாலும் திறமையாகச் செய்யக் கூடியவர். படிப்புமுதல் விளையாட்டு மற்றும் நானாவித வேலைகள் என சகலதிலும் லக்சினி தான் பெஸ்ற். பாடசாலை விடுமுறை நாட்களில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் அவர்தான் பொறுப்புள்ள பிள்ளை. ஆறு சகோதரர்கள், தாய், தந்தை என அச்சிறுமியின் வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் மார்ச் 3 ஆம் திகதி அவ ருக்கு இறுதியான நாள் என அவர் மட்டுமல்ல யாருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
நடந்தது என்ன ?
அன்று சனிக்கிழமை. பாடசாலை விடுமுறை. அனைவரும் வீட்டுக்குள் தான் இருந்தனர். அவர்களின் கொட்டில் வீடு கல்வீடாக மாற்றப் படும் வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரன் ஆகியோருக்கு அதிக வேலைப்பளு. மூத்த சகோதரி உயர்தரப் படிப்பை மேற்கொள்வதால் அவர் ரியூசனுக்குச் சென்றுவிட்டார். ஏனைய சகோதரர்கள் வீட்டில் தான் இருந்தனர். அன்று மீன் வாங்கவேண்டும் என தாயார் கூறுகிறார். அண்ணாவுக்கு வேலை. அக்காவும் வீட்டில் இல்லை. அதனால் லக்சினியை அழைக்கிறார் அம்மா. 100 ரூபாயை கையில் கொடுத்து மீன் வாங்கி வருமாறு அன்புக் கட்டளையிடுகிறார்.
தனது நாளாந்தக் கடமைகளை முடித்துக் கொண்ட லக்சினி காலை 9 மணியளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்தைக்கு புறப்பட்டுவிட்டார். ஒன்றரை மணிநேரம் கடந்த நிலையில் லக்சினியின் சக மாணவி ஒருவர் வீட்டிற்கு வந்து அவரைத் தேடுகிறார். பாட்டுப்பழகவேண்டும் அவரை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன் என லக்சினியின் நண்பியின் குரல் ஒலிக்கிறது. அவ சந்தைக்கு மீன் வாங்குவதற்காக சென்று விட்டார். இது தாயின் பதில். தனது நண்பியை சந்திப்பதற்காக மீன் சந்தைக்கு விரைகிறார் அந்த அன்பு நண்பி.
சந்தையில் நீண்டநேரமாக நின்று சுற்றுப்புறம் முழுவதுமாக தனது நண்பியான லக்சினியைத் தேடுகிறது. பாசமுள்ள அந்தச் சின்ன உள்ளம். ஆனால் அங்கு அவரைக் காணவில்லை. சந்தையில் சனமும் இல்லை. மீன் வியாபாரமும் அன்று நடைபெறவில்லை. ஒருவரும் இல்லாத இடத்தில் என்ன செய்கிறாய். தேடிச்சென்ற நண்பியின் உறவினர் ஒருவர் அவளைக் கடிந்து கொள்கிறார். நான் லக்சினியை தேடி வந்தனான் அவரை காணவில்லை எனக் கூறிவிட்டு நண்பி வீடு திரும்பினாள். மதியம் கடந்துவிட்டது. மகளைக் காணவில்லை என பெற்றோர்கள் தேடவில்லை. அவர் நண்பியுடன் பாட்டுப் பழகப் போய் இருப்பார் என எண்ணி பெற்றோர் இருந்துவிட்டனர்.
கச்சதீவுப் பெருவிழா நடைபெறுவதால் அன்று மீன் வியாபாரம் நடைபெறவில்லை. அதனால் மகள் நண்பியுடன் சென்றிருப்பார் என எண்ணினோம் எனக் கதறினார் அந்தப் பிஞ்சை இழந்த தாய்.
இடியாய் வந்த தகவல்
மாலை நான்கு மணி இருக்கும் 9 ஆம் வட்டாரத்தில் ஒரு சிறுமியின் உடல் கிடக்கிறது என்ற தகவல் லக்சினியின் தந்தையின் காதை எட்டுகிறது. அந்தத் தந்தையின் உள்ளம் அதனை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பொழுது கழிந்து கொண்டிருக்கிறது. காலையில் போன மகளை காணவில்லை என தந்தையின் மனம் திடீரென அச்சம் அடைகின்றது. எனது மகளுக்கு எதுவும் நடந்திருக்காது என எண்ணியிருந்த தந்தை சடலம் கிடந்த 9 ஆம் வட்டாரம் அன்னம்மாள் பாடசாலைக்கு அருகில் சென்றார்.
அங்கு சென்ற தந்தைக்கு இடியென விழுந்தது பேரதிர்ச்சி. மகள் கொண்டு சென்ற 100 ரூபா கையில் இறுக்கப்பட்டிருக்கிறது. ஆடைகள் கிழிந்து கிடக்கின்றன. அநாதரவான நிலையில் சற்றுத்தள்ளி அவர் கொண்டு சென்ற சைக்கிள் காணப்படுகின்றது. தலையின் பின்புறம் சிதைந்து காணப்படுகிறது. தனது மகள் இங்கு இந்நிலையில் எவ்வாறு என கதறி அழுகிறார். தனது மகள் தான் என உறுதிப்படுத்தினார் தந்தை யேசுதாசன்.
சடலம் கண்டுபிடிப்பு
நெடுந்தீவு 9 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பப்பெண் ஒருவர் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் விறகு வெட்டச் செல்வது வழக்கம். அன்றும் தனது சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.30 மணியளவில் விறகு வெட்டச் சென்றுள்ளார். அப்போது சிறுமி ஒருவர் சடலமாக கிடப்பதை கண்ட அவர் உடனடியாக நெடுந்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். உடனடியாக விரைந்து வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதனால் சிறுமியின் வீட்டுக்கு இத்தகவல் 4 மணிக்கே கிடைத்துள்ளது.
அதிர்ச்சியில் கச்சதீவு
கச்சதீவுப் பெருவிழாவுக்கு நெடுந்தீவு மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அதனால் சம்பவ தினத்தன்று நெடுந்தீவில் மக்கள் குறைவாகவே காணப்பட்டனர். இந்நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சில நிமிட நேரத்தில் கச்சதீவுக்குச் சென்றவர்களுக்கு தகவல் பறந்தது. இத்தகவலை அடுத்து அங்கு நின்றவர்கள் பேரதிர்ச்சி அடைந்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடையவரை பிடிக்குமாறும் ஆலோசனை வழங்கினர்.
சந்தேக நபர் கைது
சம்பவம் இடம்பெற்ற அன்றிரவு 10 மணியளவில் சந்தேகநபர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்ப டைத்தனர். இச்சந்தேகநபர் ஏற்கனவே பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என்றும் அவற்றில் சில சம்பவங்களுக்காக விளக்கமறியலில் இருந்தவர் என்றும் பொதுமக்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டம்-கர்த்தால்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியானதையடுத்து மறுநாள் மார்ச் 4 ஆம் திகதி மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சந்தேகநபரை தங்களுக்கு காட்டவேண்டும் எனவும் நீதிமன் றில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இந்நிலையில் அச்சந்தேகநபரை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காட்டியதுடன் அவரை நீதிமன்றிலும் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எனக்குச் செல்லப்பிள்ளை லக்சினி. அவளை நான் இழந்து விட்டேன். எனது பிள்ளைக்கு இப்படி செய்து விட்டானே. எனது பிள்ளையின் சடலம் கிடந்த இடத்தில் சாராயப் போத்தல் இருந்தது. கொடுத்துவிட்ட காசு கூட அவரது கையில் காணப்பட்டது. ஆடைகள் கலைந்து காணப்பட்டன. தலையின் பின்பகுதி சிதைந்திருந்தது. கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததாக என்னிடம் சொல்லப்பட்டது. எனது மகளின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை என கதறி அழுதார்.
எனது மகளை சந்தேக நபரான கிருபா அழைத்துச் சென்றதை உறவினர்கள் கண்டுள்ளனர். சந்தையில் மீன் இல்லாததால் மீன் வாங்கித் தருவதாக பிரஸ்தாபநபர் எனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனை எனது உறவினர்கள் கண்டுள்ளனர். அவர்தான் எனது மகளை கொலை செய்துள்ளார் என்றார் லக்சினியின் தந்தை.
நன்றி- வலம்புரி
No comments:
Post a Comment