
புறக்கோட்டை மன்னிங் சந்தைக்கு எதிரே இந்த புதிய கட்டடம் அமைந்துள்ளது. இலங்கைப் பொலிஸ் புனர்வாழ்வுப் பிரிவுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கொம்பலவிதான பொறுப்பாக இருந்தபோது இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.
பொலிஸாரின் புனர்வாழ்வுக்காக பல மில்லியன் ரூபா செலவிட்டுக் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், தற்போது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் கடத்தப்படுவோருக்கும் கைதிகளுக்கும் சித்திரவதை செய்யப்படும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளம் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் பொறுப்பில் உள்ளது. குறிப்பிட்ட சில பொலிஸார் மட்டும் தான் இந்தக் கட்டடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டத்தைச் சூழ சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெரேரா என்ற பொலிஸ் ஆய்வாளரின் கீழ் இந்த சித்திரவதைக் கூடம் செயற்படுகிறது. பொலிஸ் துணைச்சேவையில் ஒரு துணை ஆய்வாளராக இணைந்த இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளரால் இரண்டு ஆண்டுகளில் நிரந்தர சேவைக்கு மாற்றப்பட்டு, ஆய்வாளராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் சிறப்பு பிரிவில் முக்கியமான ஒருவராக உள்ள இவர், கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.
கடந்த டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித்குமார், குகன் ஆகியோர் காவல்துறை புனர்வாழ்வு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் உள்ள அறை ஒன்றில் இந்த ஆய்வாளரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோதும், அரசாங்கம் இதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறி வருகிறது. இவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவல்கள் தவறு. இவர்கள் இருவரும் பொலிஸ் புனர்வாழ்வு கட்டடத்தின் 6ஆவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டடத்தின் வாகனத் தரிப்பிடத்துக்கு அருகேயுள்ள இரகசிய அறை ஒன்றில் வைத்து தான் பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அடையாளம் காட்டுமாறு லலித் மற்றும் குகன் ஆகியோரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்கள் வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ‘லங்கா நியூஸ்வெப்‘ இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment