Translate

Monday, 9 April 2012

காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே தெரிவுக்குழு! தீர்வை வழங்கினால் தனி ஈழம் கேட்கார்!

வடக்கில் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டி, அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு மகிந்த அரசு தீர்வை வழங்கினால் தமிழ்மக்கள் தனிஈழத்தைக் கோரமாட்டார்கள் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், தீர்வு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கைவிடவே மகிந்த அரசு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம், நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகை ஆகியவை குறித்து கருத்து வெளியிடும் போதே ஜே.வி.பியின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்த்வை வருமாறு:

நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதியே நியமித்தார். அந்தக் குழுவும் ஜனாதிபதியிடமே அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை அரசே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அப்படியாயின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அரசு தற்போது குறை கூறுவது ஏன்?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன. ஆனால், தேசிய பிரச்சினைக்குத் தெளிவானதொரு தீர்வுத்திட்டம் அதில் இல்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் அதை அப்படியே கைவிடுவதற்குத்தான் அரசு தெரிவுக்குழு விடயத்தில் துடிதுடித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

இனப்பிச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இதற்கு முன்னரும் எத்தனை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றால் கண்ட பயன்தான் என்ன?

காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே தெரிவுக்குழு.

இனப்பிரச்சினைக்கு மகிந்த அரசின் தீர்வுத் திட்டம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மகிந்த அரசு வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி, அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கினால் தமிழ் மக்கள் தனிஈழத்தைக் கோரப் போவதில்லை.

அரசு காலத்தைக் கடத்தாமல் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தே அரசு கடன் பெற இணங்கியுள்ளது. அரசு இது விடயம் தொடர்பில் கூறும் கதையெல்லாம் அப்பட்டமான பொய்யாகும் என்றார்.

No comments:

Post a Comment