Translate

Monday 9 April 2012

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த அற்புதமான வாய்ப்பை நழுவவிடக்கூடாது

25 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் இரு இன மக்களிடையே ஒற்றுமைஇ நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கு அற்புதமாக வாய்ப்பு கிட்டியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.


ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் இந்த நல்லிணக்கத்திற்கான பாலத்தை கட்டும் பணியில் மந்த கதியில் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு வாய்ப்பு நீண்ட காலம் நிலைத்திருக்காது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக். கொள்ள சிறிய காலமே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த நிறுவனமான தென் ஆசியா கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (08) இடம்பெற்றபோது உரையாற்றிய சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு தான் உறுதியளித்த அதிகாரப்பகிர்வு திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ் புறந்தள்ளியதாலேயே கடந்த தேர்தலில் தான் அவருக்கு ஆதரவு அளிக்காமல் விலகி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு ராஜபக்ஷ் தன்னிடம் 8 தடவைகள் தொலைபேசியில் அழைத்து கோரிக்கை விடுத்ததாக சந்திரிக்கா குமார துங்க கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த தேர்தலில் தான் சரத் பொன்சேகாவை ஆதரித்ததாகக் கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லை என அவர் நிராகரித்தார்.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் குறித்து ராஜபக்ஷ் கொண்டுள்ள கொள்கை தொடர்பிலும் அவரது வெளிநாட்டு கொள்கை தொடர்பிலும் தான் மிகுந்த கவலை அடைவதாக சந்திரிக்கா குமார துங்க தெரிவித்துள்ளார்.

தான் ஆட்சியில் இருந்த போது வெளிநாடுகளுடன் சிறந்த உறவைப் பேணி வந்ததாகவும் அதனால் புலிகளை ஒடுக்க, அழிக்க மேற்குலக நாடுகள் சில ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சீனா, மியான்மர் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் புதிய உறவுகளை வைத்து கொண்டு ராஜபக்ஷ் மோதல் போக்குடைய கொள்கையை கடைபிடித்து வருவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவுடனான தொடர்பு மிகவும் முக்கியமானதும் அத்தியாவசியமானதுமாகும் என கூறியுள்ள சந்திரிக்கா, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான காரணம் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கையுடன் கூட்டுசேர்ந்து இருந்தது. ஆனால் இன்று மாறிவிட்டது. காரணம் தெரியவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment