இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவு, பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. "இந்த குழுவில் இடம் பெறமாட்டோம்' என, திடீரென அ.தி.மு.க., பின்வாங்கியுள்ளது, டில்லி அரசியல் வட்டாரங்களில், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு முக்கிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இலங்கைக்கு, அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
15 பேர் குழு: இலங்கையில் போருக்கு பிறகு, நிலவும் சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக் கட்சி குழுவை அனுப்புவது என்ற முடிவை, மத்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. அதன்படி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில், 15 பேர் கொண்ட குழு செல்லவுள்ளது. முதலாவதாக, இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
யார், யார்? குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அதிகாரப்பூர்வமாக பெயர்கள் வெளியாகாவிட்டாலும், கடந்த வாரமே சில பெயர்கள் கசிந்தன. பொதுவாக இலங்கை குறித்த பிரச்னைகளை, தீவிரமாக கையிலெடுத்து, அவைகளில் ஆணித்தரமாக குரல் எழுப்பும், தமிழக எம்.பி.,க்களில் லோக்சபாவில் கணேசமூர்த்தி மற்றும் ராஜ்யசபாவில் ராஜா போன்றவர்கள் தான். ஆனால், இவர்கள் குழுவில் இடம் பெறவில்லை. பார்லிமென்ட் அமைச்சகத்தில், இதுபற்றி இவர்கள் கேட்டபோது, எம்.பி.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால், கடந்த முறை இலங்கை சென்ற குழுவில் திருமாவளவனுக்கு, எந்த அடிப்படையில் இடம் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. காங்கிரஸ் சார்பில், இடம்பெற்றுள்ள, ஐந்து பேரில் நான்கு பேர் தமிழக எம்.பி.,க்கள்.
பா.ஜ.,: பா.ஜ., சார்பில், இலங்கை விவகாரங்கள் குறித்து ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருப்பவரும், இவ்விஷயத்தை அக்கட்சி சார்பில் கையாண்டு வருபவரும் வெங்கையா நாயுடுதான். இலங்கை விவகாரங்களுக்கு பா.ஜ.,வில் பொறுப்புவகிப்பவர் யஷ்வந்த்சின்கா. இவர்களுக்கு இடம் அளிக்காமல் பல்பீர்புஞ்ச் என்ற எம்.பி., செல்லவுள்ளார். இலங்கை பிரச்னையில் அதிகமாக, வடமாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளோ அல்லது எம்.பி.,க்களே பெரிதும் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், அவர்களுக்கு எல்லாம் கூட வாய்ப்பு தரப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தமிழக எம்.பி.,க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்களும் கூட, இலங்கை அரசாங்கத்தின் விருப்பதிற்கு ஏற்றவகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்றத்திற்காக, இந்தியாவால் அளிக்கப்பட்ட, 500 கோடி ரூபாய் பற்றியும், அதன் செலவு குறித்து ஆராய்வதே, இந்த குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.
திட்டம் என்ன? முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதோ, சிங்கள குடியேற்றங்கள் பற்றியோ, தமிழர்கள் பகுதிகளில் நடக்கும் திடீர் தாக்குதல்கள் பற்றியோ, அரசியல் தீர்வு பற்றியோ, அங்குள்ள தமிழ் கட்சிகளை சந்தித்து ஆலோசிப்பதோ பற்றியெல்லாம் இந்த குழுவின் பயணத் திட்டத்தில் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கத்திற்கு சங்கடம் அளிக்கும், எந்த விஷயமும் இல்லாத வகையிலேயே பயண திட்டம் தயாராகியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான், தனது கட்சி சார்பாக ரபிபெர்னார்ட் எம்.பி., யின் பெயரை அளித்திருந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென விலக்கிக் கொண்டுவிட்டார். இதனால், குழுவில் இடம் பெற் றுள்ள பிற கட்சிகளுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இவ்விஷயம் குறித்து, நேற்று டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, "இலங்கைக்கு குழு செல்லும் விஷயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. எனவே, கடைசி நேரத்தில் குழு பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை' என்றன.
- நமது டில்லி நிருபர் -http://www.dinamalar.com/News_detail.asp?Id=447174
No comments:
Post a Comment