Translate

Monday 9 April 2012

போரால் பாதிக்கப்பட்ட மக்களை பக்கென கைவிட்ட சிங்கள அரசு


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்பிரதேசத்தில் 13,159 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. அவர்களுடைய வாழ்க்கைத்தரமும் உயரவில்லை என உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் இணைத் தலைவர் கலாநிதி சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா நெல்லி ஸ்டார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முகாம்களில் வாழும் மக்கள் மீள்குடியேற்றப்படாமையினால் அவர்கள் அன்றாட தொழிலை மேற்கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றார்கள். இந்த மண்ணில் வாழும் எந்தவொரு மனிதனும் அடிமை இல்லை. நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுத்தத்தினால் சீரழிந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடமாகும் சந்தர்ப்பத்திலும் அவர்களின் சுமுகமான நிலைக்கு ஏற்பாடுகள் எடுக்கப்படவில்லை. வளர்ச்சி அல்லது அபிவிருத்தி என்ற பெயரால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அரசாங்கத்தினுடைய தேவை அவர்களுடைய சொரூபத்தை வெளிப்படுத்தி சர்வதேசத்திற்கு முகம் காட்டுவதற்கான அபிவிருத்தியாகவே இருக்கின்றது. அதாவது, நெடுஞ்சாலை அமைப்பு, வீதி புனரமைப்பு என்பன அரசாங்கத்தின் சொரூபத்தைக் காப்பாற்றும் செயற்பாடுகளே தவிர மக்களுடைய வாழ்க்கைத் தரத்திற்கான ஆதரவும் வழங்கப்படவில்லை.
இங்கு மக்களின் வாழ்வுக்கான உத்தரவாதமும் இல்லை. அவர்களுடைய பாதுகாப்பு, கல்வி, கலாசார வசதிகளின் மேம்பாடுகளோ மக்களை மீள்குடியேற்றம் செய்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையாவது வாழ்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் எந்த செயற்பாடுகளுமோ இடம்பெறவில்லை.
பெண்களாக நாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை வடக்கு, கிழக்கு என ஒரு பிரதேசத்திற்கு உட்பட்டதாக வரையறுக்க முடியாது. இலங்கையில் உள்ள சகலருக்குமான பிரச்சினையாகவே பார்க்கின்றோம். அதில் ஒரு பகுதியாக வடக்கினையும் நோக்குகின்றோம். ஆனால், பிரச்சினைகள் வேறுபடலாம். ஆனால், அனைத்துப் பெண்களும் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.
கலாசார, பொருளாதார, கல்வி மற்றும் பாலியல் ரீதியாகவும் அவர்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் பெண்கள் இயக்கம் என்ற நிலையில் நாம் பெண்களுக்கான பிரச்சினைகளைக் கண்காணித்து எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதென்றும் கருத்தியல் ரீதியாக எவ்வாறு செயற்படுவதென்றும் முக்கிய குறிக்கோளுடன் நாம் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.
யுத்தத்தின் பின்னரும் கூட மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும், தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் ஏமாற்றப்படும் நடவடிக்கைகளும் சிறுவர்கள் கடத்தப்படுவதால் அந்த சிறுவர்களை சிறுவர் விபசாரத்திற்கு உள்ளாக்கும் நிலையையும் நாம் நாளுக்கு நாள் காண்கின்றோம். இவ்வாறான பாதுகாப்புக் குறைந்த இந்தப் பிரதேசத்தில் வாழும் பெண்களினுடைய இவ்வாறான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு அவர்களுடைய தேவைகள் வழங்கப்பட வேண்டும். நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு அச்சுறுத்தும் அமைப்பாகவே எமது அமைப்பு இயங்கும் என்றார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சட்டத்தரணியும் அமைப்பின் தலைவியுமான கமலா பெனரகம, கலாநிதி சரோஜா போல்ராஜ், கலாநிதி போசியா சண் வைத்தியகலாநிதி சாந்தினி கருணாதிலக, கலாநிதி குமார திசாநாயக ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment