கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளையும் இழக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் மூலம் எமது நாடு பாரிய தோல்வியை சந்தித்திருக்கின்றது. இதன் மூலம் எமது நாட்டின் தேசிய இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
எது எவ்வாறிருப்பினும் ஜனநாயக கோட்பாடுகளை மீறியதான ஜனநாயக விரோத செயற்பாடுகளை தேசியக் கொடியின் மூலம் மூடி மறைத்துவிட முடியாது. ஏனெனில் சர்வதேச மட்டத்தில் எமது நாடு மனித உமைகள் விவகாரம் உள்ளிட்ட 7 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றது.
தமரா குணநாயகம் என்ற தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படுகின்றவர். 1987 காலப் பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு புலிகளுக்கு சார்பாகவும் அதேநேரம் இலங்கைக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இன்று அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கூறுகின்றார். உள்நாட்டுப் பிரச்சினைகளில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்று அன்று கூறிய ஜனநாயகம் இன்று தேவையில்லை என்றார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த காலங்களில் ஜெனீவாவுக்கு சென்ற இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதற்காக நரகத்திற்கு செல்லவும் தயாராகவும் இருப்பதாக அன்று கூறினார். இன்றும் அதே நிலைமை தான் தோன்றியிருக்கின்றது.
இந்நிலையில் தான் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்த பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீரிஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் கண்ட பலன் எதுவுமில்லை.
இறுதியில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 24 வாக்குகளுடன் நிறைவேறியது. அதேநேரம் பிரேரணைக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் வாக்களித்திருந்தன. இவ்வாறு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் கூட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தான் கூறியிருக்கின்றன.
எனவே ஜெனீவாவின் இந்த வலியுறுத்தலை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகவிருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஜெனீவா பேரவையில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவின் தலைவரான அமைச்சர் சமரசிங்க மேற்படி சிபாசுகளை ஒருவருடத்தில் நிறைவேற்றுவதாக கூறியிருக்கின்றார்.
இந்நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளின் ஆதரவினையும் இழக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். என்றார்.
No comments:
Post a Comment