Translate

Wednesday, 27 June 2012


மனிக்பாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களின் நிலை ?

திருமுறிகண்டியில் இருந்து இரவோடு இரவாக வவுனியா மனிக்பாம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களும் அங்கு போதிய வசதிகளும் இருப்பிடங்களும் இன்றி அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.

இந்து மகாவித்தியாலயத்தில் இருந்து 3 பஸ்களிலும் 3 லொறிகளிலுமாக நேற்றிரவு 7.30 மணியளவில் ஏற்றப்பட்ட மக்கள், இரவு 11 மணியளவில் மனிக்பாம் முகாமில் இறக்கப்பட்டனர்.


சொந்த இடங்களில் மீளக்குடியமரும் கனவுடன் புறப்பட்டிருந்த அந்த 19 குடும்பங்களும் ஏற்கனவே முகாமில் தாம் அமைத்திருந்த தற்காலிகத் தங்குமிடத்தை கழற்றியும் புடுங்கியும் திருமுறிகண்டிக்கு எடுத்துச் சென்றிருந்தனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 10,000 ரூபா வரையான கூலி கொடுத்தே அந்தப் பொருள்களை அங்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதனால் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மனிக்பாம் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர்கள் தங்குவதற்கு தற்காலிக இருப்பிடங்கள் கூட இருக்கவில்லை. முகாமில் இருந்த தற்காலிகப் பொது மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

"11 மணிக்குக் கொண்டு வந்து இறக்கினார்கள். நேற்றுமுன்தினம் காலையில் இருந்தே எமக்கு உணவு எதுவும் தரப்படவில்லை. இங்கு கொண்டு வந்து இறக்கியபின்னர் இன்று காலையிலும்கூட உணவு எதுவும் தரப்படவில்லை'' என்றார் அவர்களில் ஒருவர்.

"இரவு நேரம் கொண்டு வந்து இறக்கிவிட்டு, பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் ஒரே இடத்தில் படுத்தெழும்பச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெண்கள், சிறுவர்கள் எல்லோரும் அவ்வாறு எப்படித் தூங்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார் மற்றொருவர்.

"வயது வேறுபாடு இன்றி அனைவரும் ஒரேயடியாகத் தங்க வைக்கப்பட்டதால் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது'' என்று தெரிவித்தார் ஆசிரியை ஒருவர்.
அவர்களைத் திரும்பிக் கொண்டு வந்து விட்டதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக அதிகாரிகள் சென்றுவிட்டனர். தேவையான வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். "முகாம் தொண்டர்கள்தான் வீடு வீடாகச் சென்று கிடைத்த உணவுகளைக் கொண்டு வந்து நேற்றும் இன்றும் சாப்பாடு போட்டார்கள்'' என்றார் குடும்பப் பெண் ஒருவர்.

இதே வேளை, முகாமில் இருந்து அந்த மக்களால் எடுத்துச் செல்லப்பட்ட தற்காலிகக் கொட்டில்களுக்கான மூலப் பொருள்கள் எவற்றையும் திரும்பத் தரமுடியாது என்று 19 குடும்பங்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

"எங்களுடைய தகரங்கள் தடிகள் எல்லாமும் தங்களுக்குத் தேவை என்றும் அவற்றைத் திரும்ப எமக்குத் தரமாட்டோம் என்றும் முகாம் பணிப்பாளரான இராணுவ அதிகாரி கூறுகின்றார். பின்னர் எப்படி நாம் இங்கு வாழ்வது?'' என்றார் முதியவர் ஒருவர்.

"நாங்கள் இந்த முகாமுக்குள் மீண்டும் அகதி வாழ்க்கைதான் வாழ வேண்டியிருக்கிறது'' என்றார் ஆசிரியை. என்ன குற்றம் செய்தோம் என்று தாங்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கேட்டார்.

No comments:

Post a Comment