நாளை செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா - கனடா - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் தாயகத் தலைவர்களுக்கும் , மக்களுக்கும் தோழமையுணர்வை வெளிப்படுத்த அனைவரும் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யூன்26 முதல் உலகத் தமிழர் தேசங்களில், நில அபகரிப்பினை மையப்படுத்தி, தமிழர்களின் அடையாளத்தினை காக்க, சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றினை அமைக்குமாறு ஐ.நாவினைக் கோரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களையும், இராஜதந்திரச் செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போராட்டங்களின் தொடக்கமாக, நாளை செவ்வாய்கிழமை தமிழர் தாயகத்திற்கு சமாந்திரமாக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்கா :
நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு ( UN Head Quarters in New York on first avenue ) முன்னால், மாலை 4 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்ஸ் :
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் ஒன்றான UNSECO முன்னால், மாலை 4 மணி முதல் 6 மணிவரை, UNSECO, 7 Place de Fontenoy ,75007 Paris, ( Metro : Segur / ligne : 10) குறித்த இந்த முகவரியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
கனடா :
தமிழர் தாயகத்தில் இருந்து சிறிலங்காவே வெளியேறு என்ற முழக்கத்துடன், நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டம், ரொறன்வோவில் உள்ள சிறிலங்காவின் உயர்காரியாத்திற்கு முன்னால் இடம்பெறுகின்றது.
Consulate General of Sri Lanka, Toronto, 36 Eglinton Avenue West, Toronto, ON , M4R 1A1 (Yonge/Eglinton) எனும் முகவரில், மாலை 3 மணி முதல் 6 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
குறித்த நாடுகளில் இடம்பெறுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் குறித்த மேலதிக விபரங்களை அமெரிக்கா : (267) 229 9211 / பிரான்ஸ் : 06 51 05 53 00 கனடா : 647 209 4100 – 647 822 8062 இந்த தொடர்பிலக்கங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்ந்த பிற நாடுகளில், நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் குறித்த விபரங்கள் அடுத்து வரும் நாட்களில் அறியத்தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுவிஸ் ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகிப்புக்கு எதிரான போராட்டங்களையும் , சிங்கள அரசின் நில அபகரிப்பு தொடர்பிலான ஆவணங்களையும், இராஜதந்திரிகளுக்கும் ,மனித உரிமை அமைப்புக்களுக்கும் இந்நாளில் கையளிக்கவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment