Translate

Monday 25 June 2012

ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்



ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்

எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி!
சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்… நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக்கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட… கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! )
உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வேலையாகிவிட்டது.

சிங்களவர் உட்பட எவரைப் பற்றிய கவலையும் இல்லாமல், தன் குடும்பம் காப்பாற்றப்பட்டால் போதும் என்ற நினைப்புடன் ராஜபக்ச நாட்களைக் கழித்ததால்… கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
போர் முடிந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஈழ அரசியல் எப்படி இருக்கிறது?
குடும்ப யுத்தம்!
ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்ற கோஷ்டி யுத்தம் கொழும்பு அலரி மாளிகைக்கு உள்ளே தொடங்கிவிட்டது. அண்ணனுக்கு அடுத்த இடத்துக்கு வர வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்த கோத்தபாய ராஜபக்ச, இன்றைய அதிகார ருசியே போதும் என அமைதியாகிவிட… அடுத்த தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ச தனது இலக்கைத் தீர்மானித்துவிட்டார்.
ஆனால், இது மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்திக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பாவின் பட்டத்தை மகன்தான் ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மகன் நாமல் ராஜபக்ச, எம்.பி. ஆனது இப்படித்தான். சமூக சேவைக் காரியங்களை முன்னின்று செயல்படுத்திவரும் நாமல், இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் அமைச்சராகவும் பொறுப்பேற்கப் போகிறார். தம்பி பசிலா; மகன் நாமலா என்ற யுத்தத்தில், இருக்கப்போவது யார் என்று இரண்டொரு ஆண்டுகளில் தெரிந்துவிடும்.
சிங்களவர் குடியேற்றம்!
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பெரும்பான்மையாக இருந்தால்தானே ‘தமிழ் ஈழம்’ என்றெல்லாம் பேச முடியும்? இந்தப் பகுதியில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்கிவிட்டால் போதாதா? தமிழர்களைக் கொன்றதில் பாதி சதவிகிதம் குறைந்தது. இப்போது இந்தப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் மும்முரமாக உள்ளார்கள். 20 சிங்களக் குடும்பங்கள் இருந்த பகுதிகளில் இப்போது 500 குடும்பங்கள் உள்ளன.
இராணுவ வீரர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிங்கள வீரர்களுக்கு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. இதைவைத்துக் குடும்பம் குடும்பமாகக் குடியேறுகிறார்கள். தெற்கு இலங்கையில் இருந்து மீன் பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்கள்… ஒரு சில மாதங்களில் வட கிழக்குப் பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள்.
தமிழர்கள் தங்களது நிலங்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இடம்பெயர்ந்துகொண்டே இருந்ததால் பலரிடம் நிலப் பத்திரங்களும் இல்லை. மொத்தத்தில் எல்லாமே தொலைந்துபோய் நிற்கிறான் தமிழன்!
சர்வம் புத்தமயம்!
ஈழம் – எப்போதும் சைவத் திருத்தலம். சைவத்துக்கு அவர்கள் அருளிய இலக்கியங்களே அவ்வளவு இருக்கும். யுத்தத்துக்குப் பிறகு புத்த பூமியாக ஆக்க முயற்சித்தார்கள். புதிய புத்த கோயில்கள், விகாரைகள் எழுப்புவதுகூட அவர்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால், சைவத் தலங்களுக்குப் பக்கத்தில்தான் அமைப்போம் என்று அடம்பிடித்துச் செய்கிறார்கள்.
பலஆண்டு பழமையான திருக்கேதீச்சரம் திருக்கோயில், சிவபூமி என்று அழைக்கப்படும். இந்தக் கோயிலுக்கு அருகில் 1,500 கிலோ எடை கொண்ட புத்தர் சிலை அமைக்கப்படுகிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 185 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அவர்களைக் குடியேற விடாமல் தடுத்தார்கள்.
கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மட்டும் அல்ல… வன்னிப் பிரதேசம் எங்குமே பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பும் புத்த சிலைகளின் பிரதிஷ்டைகளும் தாராளமாக நடக்கின்றன!
முஸ்லிம்களுக்கும் வேட்டு!
தமிழர்களை முடித்த பிறகு, முஸ்லிம்களின் கழுத்து சிங்களவர்களிடம் சிக்கியுள்ளது. புத்த மதத்துக்கு இஸ்லாமும் எதிரானதே என்று சொல்லி, இப்போது அவர்கள் மீது பார்வை பதிந்துள்ளது. தம்புள்ளை பள்ளிவாசல் சமீபத்தில் தாக்கப்பட்டது இதற்கான தொடக்கம்.
20 ஆண்டுகளுக்கு முன் பிரேமதாசா பிரதமராக இருந்த காலத்தில், இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் இருக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் இயங்கினார். இப்போது மறுபடியும் இஸ்ரேல் தூதர் இலங்கையில் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்லிம்களை அச்சப்பட வைத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது. ஆனால், அதனை ராஜபக்ச மதித்ததாகத் தெரியவில்லை.
ஆண்கள் இல்லை, விதவைகள் உண்டு!
வீரம் விளைந்த ஈழத்தில் இப்போது விதவைகள் மட்டுமே உண்டு. சுற்றிலும் விளைநிலங்கள் இருக்க… நடுவில் வீடு அமைத்து வாழும் வழக்கம் அந்தப் பகுதி மக்களுக்கு உண்டு. நிலங்கள் தரைமட்டம் ஆனது போலவே மக்கள் வாழ்க்கையும் ஆனது. இளைஞர்கள் புலிகளாகக் கொல்லப்பட… முதியவர்கள் குண்டுகளால் தீர்க்கப்பட… எஞ்சியது பெண்கள் மட்டுமே.
கொஞ்சம் வசதியானவர்கள் இராணுவத்துக்குப் பணம் கொடுத்துத் தப்பிவிட்டார்கள். மிச்சம் இருப்பவர்களுக்கு, அச்சுறுத்தும் சூழ்நிலையும் ஆரோக்கியமற்ற உணவும் மட்டுமே துணையிருப்பதால், உடம்பில் எந்தத் தெம்பும் இல்லாமல் மூச்சுக் குழாய் மட்டுமே இயங்குகிறது.
போதிய ஊட்டச் சத்து இல்லாததால், பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப்போன பிள்ளைகள் உட்கார முடியாமல் மயங்கி விழும் கொடுமையைக் கேட்கவே கசக்கிறது.
அகதிகள் அல்ல, அடிமைகள்!
அகதி என்ற வார்த்தைக்குச் சில உரிமைகளும் பல தேவைகளும் கிடைக்கும். ஆனால், ஈழத் தமிழனுக்கு எதுவும் இல்லை. கொத்தடிமைகளைவிடக் கேவலமான இழி அடிமைகளாக நடத்தப்படுகிறான்.
அகதி முகாமில் இருந்து ஊருக்குள் ‘வாழ’ அனுப்பிவைக்கப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகடுகள், ஒன்றிரண்டு தார்ப்பாய்கள், மரக் கழிகள் வழங்குவோம் என்பது அரசாங்கத்தின் வாக்குறுதி. இதை வாங்குவதற்குள் பலரும் அவஸ்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவார்கள்.
தங்கள் நிலம் எது எனத் தெரியாததால், ஏதாவது கூலி வேலைக்குச் சென்று தினமும் கூலி வாங்கினால்தான் சாப்பாடு என்ற நிலை. கடைகள் போட முடியாது. இராணுவம் மிரட்டுகிறது. சிங்களக் கடைக்கு வேலைக்குப் போகலாம். அல்லது தெருவில் பாய் விரித்து எதையாவது விற்கலாம் என்பதே நிலைமை.
பத்தடி தூரத்துக்கு இராணுவக் கண்களும் ‘கன்’களும் இருப்பதால் தமிழனால் எதுவுமே செய்ய முடியாது, படுத்துக் கிடப்பதைத் தவிர.
வளர்ச்சி யாருக்காக?
தமிழ்ப் பகுதிகளை வளர்க்கத் திட்டம் போடுகிறேன் » என்பது ராஜபக்ச சிரிக்காமல் சொல்லிவருவது. ஆனால், இந்த வளர்ச்சிகள் தமிழனுக்குப் பயன்படவில்லை என்பதுதான் உண்மை. எல்லா இடங்களிலும் வீதிகள் போடுகிறார்கள். இதுதான் வளர்ச்சி.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன்,  »அதிகாரத்தினை விரைவாகப் பிரயோகிக்கவே வீதிகள் அமைக்கப்படுகின்றன. இராணுவத் தளபாடங்களை இங்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் இதில் உண்டு. தெற்கில் உள்ள பெருமுதலாளிகள் இங்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்ல இவை பயன்படுகின்றன.
கடல் உணவுகளின் விலை என்னவென்று தெரியாமல், மீனவர்கள் தென்னிலங்கை முதலாளிகளிடம் விற்றுவிட வேண்டி உள்ளது. எனவே, இந்த அபிவிருத்தியால் நாம் இழந்ததே அதிகம் » என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
‘அபிவிருத்திக்காக அரசாங் கத்தினால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஏதோ ஒரு வகையில் தென்னிலங்கைக்கே திரும்பிச் செல்கிறது » என்பதும் இவரது குற்றச்சாட்டு.
உலகின் பிடியில் சிறு உருண்டை!
உலகத் தண்ணீர்த் தொட்டிக்குள் சிறு உருண்டையாகக் கிடக்கும் ஈழத்தில் நடப்பது உடனுக்குடன் உலக நாடுகளின் கவனத்துக்குச் சென்றுவிடுவதுதான் ஆறுதலான ஒரே விஷயம்.
ஈழக் கொடூரத்தை முழுமையாக விசாரிக்க ஐ.நா. மூவர் குழு அமைக்க முடிவெடுத்தது ராஜபக்சவுக்கு முதல் நெருக்கடி.
‘நாங்களே விசாரணை செய்கிறோம்’ என்று அவரே ஒரு குழு அமைத்து… நல்ல பிள்ளையாக அறிக்கையும் கொடுத்துக்கொண்டார். ‘அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுத்தாய்?’ என்று ஜெனீவா கேள்வி கேட்டதும்தான், இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைத்திருக்க வேண்டாமோ என்ற சிந்தனையை ராஜபக்சவுக்கு விதைத்தது.
ஐ.நா. மன்றம் அக்டோபர் மாதம் வரை கெடு கொடுத்துள்ளது. தமிழர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நலத் திட்டங்கள் செய்யப்பட்டன என்பது முதல்… குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை தரப்பட்டது என்பது வரை… பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ராஜபக்சவுக்கு உண்டு.
அதற்கான அவகாசம் ஐந்து மாதங்கள்தான்.
இறந்தவர் ஆத்மா சாந்தி அடையும் நடவடிக்கையை அக்டோபரிலாவது ஐ.நா. எடுக்குமா?
- ஆனந்த விகடன்
URL simplifié: http://www.eelanadu.info/?p=1997

No comments:

Post a Comment