"எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்ற பிரணாப் முகர்ஜி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாவது தமிழர்களுக்குத் துயரம்,'' என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியவை வருமாறு:
முல்லைப்பெரியாறு அணைக்காகத் தொடர்ந்து வைகோ போராடி வருகின்றமையைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தற்போது சிறுவாணி, அமராவதி நதிகளின் தண்ணீரைத் தேக்கி வைக்கிறது. இதைக்கண்டித்து கோவையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். பிரணாப்பை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கிலங்களுக்கு மகிழ்ச்சியான விடயம்.
நான்காவது தமிழ் ஈழப்போர் ஒடுக்கப்பட்டதும், தமிழர்கள் உரிமையை இழந்ததும் இவரால் தான். வெள்ளாட்டின் தலையைக் காட்டி, ஓநாய்க் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்.
எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்றவர், நாட்டின் ஜனாதிபதி ஆவது தமிழர்களுக்கு துயரமே. டெசோவை முன்பு புதைத்ததே கருணாநிதி தான். இவர் நடத்திய நாடகத்தில் மிகவும் மோசமானது இந்த நாடகம் தான். இவர் முதல்வராக இருந்தபோது சோனியாவிற்கு அடிமையாகவும், மன்மோகன் அரசுக்கு விசுவாசியாகவும் இருந்து கொலை பாதகச் செயலுக்குத் துணைபோன குற்றவாளி.
இன்று "டெசோ' என்று ஒப்பாரி வைப்பது கேலிக்கூத்து. தி.மு.க., தொண்டனே இதை ரசிக்க மாட்டான். அப்துல் கலாமை கலகம் என்று கொச்சைப்படுத்தியது கருணாநிதியின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது. தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்றால், 20 ஆண்டு சிறைத் தண்டனை என்று ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இத்தாலிக்காரனைக் கைதுசெய்ய மலையாளப் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் தயாரில்லை; மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை என்றார்.
No comments:
Post a Comment