பொது எதிரணி ஊடகவியலாளர் மாநாடு இன்று எதிர்க்கட்சி ஊடக நிலையத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நாட்டில் மாகாணசபைத் தேர்தல்களைக் கடந்த முறை கிழக்கில் நடத்த ஆரம்பித்த அரசாங்கம், இன்று மீண்டும் கிழக்கிலேயே மாகாணசபை தேர்தல்களை ஆரம்பிக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு வடக்கு மாகாணம் என்று ஒன்று இருப்பது மறந்து விட்டது.
மூன்று மாதம் அவுஸ்திரேலியாவில் விடுமுறை எடுத்து மீண்டும் வந்துள்ள அரசின் அதிகாரபூர்வ பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வல இன்னமும் மிதிவெடி கதை பேசிக் கொண்டு இருக்கிறார். அதனால்தான் வடக்கில் தேர்தல் இல்லை என சொல்கிறார். அவர் நாட்டில் இல்லாத கடந்த மூன்று மாத நிகழ்வுகள்தான் அவருக்கு மறந்து விட்டன என நினைத்தேன். ஆனால் அவருக்கு கடந்த மூன்று வருட நிகழ்வுகளும் மறந்துவிட்டன. இந்த மூன்று வருடத்தில் மூன்று தேர்தல்கள் வடக்கில் நடந்து முடிந்துவிட்டன. ஜனாதிபதி, பாராளுமன்ற, உள்ளூராட்சி தேர்தல்கள் அவை. அப்போதெல்லாம், இல்லாத மிதி வெடியா, இப்போது வந்து விட்டது என கேட்க விரும்புகிறேன்.
இன்று வடக்கில் தேர்தல் நடந்தால், கூட்டமைப்பு வெற்றி பெரும் வாய்ப்பு இருக்கிறது. அதை இந்த அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த அரசாங்கத்திற்கு எல்லாம் வேண்டும். ஜனாதிபதி அதிகாரமும் வேண்டும், பாராளுமன்ற அதிகாரமும் வேண்டும், அனைத்து மாகாணசபைகளும் வேண்டும், அனைத்து உள்ளூராட்சிசபைகளும் வேண்டும். எல்லாம் தமக்கு மாத்திரமே வேண்டும் என்ற பாழாய்ப்போன கட்சி அரசியல் காரணமாக இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
நானும், சிறிதுங்கவும், விக்கிரமபாகுவின் கட்சியினரும் வடக்கிற்கு சென்று அங்குள்ள தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியமர்த்த என கூட்டி வந்த அரசாங்கம் அவர்களை அவர்களது சொந்தக் கிராமத்தில் குடி அமர்த்த மறுக்கிறது. மக்களின் நிலங்களை இன்று இராணுவம் பிடித்துகொண்டு தர மறுக்கிறது. சொந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் குடியேற மாட்டோம் என்று சொன்ன மக்கள் மீண்டும், அகதி முகாம்களுக்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின், மீள் குடியேற்றக் கொள்கை இன்று முறிகண்டியில் அம்பலத்திற்கு வந்து விட்டது.
அதேபோல் இன்று வடக்கில் பல இடங்களில் பெளத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள். பெளத்த தர்மத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. இலங்கைத் தீவுக்கு பெளத்த தர்மத்தை கொண்டு வந்தவர்களை தமிழ் மொழியில் பேசி வரவேற்றவர்கள் தமிழர்கள். இது வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும். வண. கல்யாண ரன்சிறி தேரோ அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தைச் சொன்னார். வடக்கில், பெளத்தர்கள் இல்லாத இடங்களில் எதற்காக விகாரைகள் கட்டுகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மைதானே? தெற்கில் இருக்கும் எத்தனையோ பெளத்த விகாரைகள் பாழடைந்து போய் இருக்கின்றன. அங்குள்ள விகாரதிபதிகளுக்கு இருப்பதற்கு ஒழுங்கான இடம் இல்லை. நீர், மின்சார அடிப்படை வசதிகள் இல்லை என தென்னிலங்கையில் பெளத்தர்கள் சொல்கிறார்கள. அப்படி இருக்கும் போது வடக்கில், பெளத்தர்களே இல்லாத ஊர்களில் எல்லாம் எதற்கு ஐயா, விகாரைகள் கட்டுகிறீர்கள்?
விகாரைகளையும்,இராணுவ முகாம்களையும் கட்டுவிப்பதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களுக்கு பிழையான செய்தி அனுப்புகிறீர்கள். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மீண்டும் வர உள்ள ஐ.நா மனித உரிமை மாநாட்டில் ஒரு நாடு என்ற முறையில் தமிழர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நிற்க முடியாத நிலைமையை நீங்களே ஏற்படுத்துகிறீர்கள். எதை நம்பி தமிழர்கள் உங்களுடன் சேர்ந்து நிற்பது? கற்றுக்கொண்ட பாடங்கள் சிபாரிசுகளை அமுல் செய்கிறீர்களா? இல்லை. வட மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறீர்களா? இல்லை.
கிழக்கில், வட மத்திய மாகாணத்தில், சப்ரகமுவையில் தேர்தல் நடத்துவதை விட வடக்கில் தேர்தல் நடத்துவது அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். வெற்று காகிதத்தை எடுத்துகொண்டு, பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வரச் சொல்வதை நிறுத்தி விட்டு முதலில் இவற்றை செய்யுங்கள். _
No comments:
Post a Comment