Translate

Saturday, 30 June 2012

முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்


தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறமுடியுமென்று இந்து பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

வட மாகாணத்தில் தமிழ் மக்களின் நம்பகரமான பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விளங்குகிறது.
தமிழ்  கூட்டமைப்பின் பெரியபங்காளியான இலங்கைத் தமிழரசுக்கட்சி அண்மையில் மட்டக்களப்பில் மாநாடொன்றை நடத்தி தனது நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அக்கட்சியானது வெறுமனே வடபகுதி தமிழர்களின் கட்சியல்ல என்ற ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சிகளை  மேற்கொண்டால் தமிழ்ப்பகுதிகளில் அநேகமாக சகல இடங்களிலும் அக்கட்சி வெற்றிபெறமுடியுமென்று இந்து குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகை 15 இலட்சத்து 47 ஆயிரத்து 377 என நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இலட்சத்து 25 ஆயிரத்து 186 பேரும் அம்பாறைமாவட்டத்தில் 6 இலட்சத்து 45 ஆயிரத்து 825 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 76ஆயிரத்து 366 பேரும் உள்ளனர். இவர்களில் சுமார் 9 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களாகும் இந்த வாக்காளர்களில் 41 சதவீதமானோர் தமிழ் வாக்காளர்களாகும்.முஸ்லிம் வாக்காளர்கள் 38 சதவீதமாகும். மீதமான தொகையினர் சிங்கள வாக்காளர்களாகும்.ஆனால் 35 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபையில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் மக்களைப் போன்று அல்லாமல் வாக்குச் சாவடிகளில் முஸ்லிம்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்துவுக்கு கூறியுள்ளார். ஒவ்வொரு பிராந்திய மட்டத்திலும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்கட்சிகள் உள்ளன.
தேர்தலின்போது அவை யாவும் ஒன்று சேர்ந்து நிற்கும் என்ற கருத்து காணப்படுகிறது. இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் நிர்வாகத்தைக் கைப்பற்றும் என்று சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புக்கான பிரதம அமைப்பாளர் அருண தம்பிமுத்து கருதுகிறார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்துடன்  நாங்கள் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தேர்தல் இடாப்பிலுள்ள மட்டக்களப்பு பகுதித் தமிழ் மக்களில் 76 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டது. உண்மையில் படுகொலை செய்யப்பட்ட எனது தந்தையார் சாம்தம்பி முத்துவின் பெயரும் தேர்தல்இடாப்பில் உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ளதிலும்  பார்க்க தமிழர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment