Translate

Saturday 30 June 2012

ஆவணங்களை கையளித்தார் சம்பந்தன் – எல்லாவற்றையும் நாம் அறிவோம் என்றார் மேனன்

Posted Imageவடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள படைத்தளங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் சிவ்சங்கர் மேனனிடம் இரா.சம்பந்தன் கையளித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் கருத்துகளைக் கேட்டறிந்த சிவ்சங்கர் மேனன் நிலஅபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எல்லா விபரங்களையும் இந்தியா அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும் அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் நில அபகரிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியன குறித்து சிவ்சங்கர் மேனனிடம் தாம் எடுத்துரைத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

“இந்தமுறை சிவ்சங்கர் மேனனின் பயணம் ஒரு தெளிவான செய்தியை சிறிலங்கா அரசுக்கு சொல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் உணர்கிறேன்.

சிறிலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்த இரு தரப்புப் பேச்சுக்கள் நின்று போயிருப்பது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இனப்பிரச்சினையைக் கொண்டு செல்ல சிறிலங்கா அரசு எத்தனிப்பது ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிற மாகாணசபைகளுக்குத் தேர்தல்களை நடத்தும் சூழல் இருக்கும் போது, வட மாகாணசபைக்கு மட்டும் இன்னும் தேர்தல் நடத்த சிறிலங்கா அரசு முன்வராதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால், சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா செல்வாக்கற்றுப் போய்விடும் என்ற கருத்தை தான் நம்பவில்லை.

இந்தியா இந்த வாக்கெடுப்புத் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர், அதன் விளைவுகளைக் கவனத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்திருக்கும்.

இந்தியா ஒரு செல்வாக்குமிக்க பிராந்திய வல்லரசு என்ற நிலையில், சிறிலங்கா பிரச்சினையில் அதன் நிலைப்பாட்டை, அனைத்துலக சமூகம் அக்கறையுடன் கவனிக்கும்.“ என்றும் கூறியுள்ளார்.
http://www.puthinapp...?20120630106498 

No comments:

Post a Comment