இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் இதற்காக கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்குச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மேனன், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் அரசியல் நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தன்னாலான ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராகவே உள்ளது.
அத்துடன் இலங்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும். என்றும் இதன்பொருட்டு இலங்கையினால் கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவினைக் கொண்டுவந்து இலங்கையில் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளும் சமத்துவம், நீதியுடனும் சுயகௌரவத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
அத்துடன் இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் போனற நடவடிக்கைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவும் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment