Translate

Tuesday, 3 July 2012

கொலை அரசின் குற்றங்கள்


கொலை அரசின் குற்றங்கள்கொலை அரசின் குற்றங்கள் 

நான் பணிபுரியும் வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மானுடவியல் துறைகளின் ஆசிரியர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பாகப் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சமூகவியல், மானுடவியல்துறை என்று வழங்கப்பட்டு வந்த எங்கள் துறையின் பெயரோடு குற்றவியல் (Criminology) என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தைச் சில பேராசிரியர்கள் முன்வைத்திருந்தார்கள்.
குற்றவியலின் சட்ட, நீதி, நியாயப் பரிமாணங்களைதக் கற்பிக்கச் சட்ட பீடம், சட்டமும் சமூகமும் போன்ற துறைகள் இருந்தாலும் குற்றவியலின் சமூகவியல் பரிமாணங்களை ஆய்வு செய்வதும் கற்பிப்பதும்தான் குற்றவியல் துறையின் மையமாக இருந்தது. எமது துறைகளிலும் பல பேராசிரியர்கள் குற்றவியலைத்தான் தமது விருப்புக்குரிய சிறப்புத்துறையாகப் பேணி வந்தனர். வட அமெரிக்காவில் சமூகவியல் பயில வருகிற மாணவர்களிலும் பெரும்பாலானோர் குற்றவியலைச் சிறப்பாகப் படிப்பதற்கெனவே வருகின்றனர். (இதற்கான சமூகவியல் விளக்கத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்).
துறையில் நடந்த விவாதங்களின் போது நமது பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் குற்றவியல் துறையில் இடம்பெறும் பல்வேறுபட்ட பாடங்களையும் பாடத்திட்டங்களையும் விரிவாகப் படிக்க நேர்ந்தது. இவை எல்லாவற்றினதும் மையமாக இருந்தது சமூகத்தில் தனியாட்கள் புரியும் குற்றங்களும் அவை பற்றிய சமூகவியல்/ சமூகவிஞ்ஞான ஆய்வுகளும் தான். அரசுகள் புரியும் குற்றங்களை அல்லது அரசுகள் கூடக் குற்றவாளிகளாக இருக்க முடியம் ( states as criminals) என்பது தொடர்பான ஆய்வுகளும் கற்பித்தலும் அரிதாகவே இருந்தது. 'அரசுகளும் இனப்படுகொலையும'; என்ற ஒரு பாடத்தை  மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் படிப்பித்து வந்த ஒரு பேராசிரியருக்கு வேலை நிரந்தரமாக வழங்கப்படாதபடியால் அவர் வேலையை விட்டு விட்டுப் போன பிற்பாடு அந்தப் பாடமும் போய்விட்டது.
வன்முறையை ஏகபோகமாகத் தானே வைத்திருப்பது என்பது தான் நமது நவீன அரச எந்திரங்களின் முதுகெலும்பு என்பதால் கட்டுப்பாடும், பொறுப்பும், கணக்கு வழக்கு இல்லாமல் அரசுகள் ஈடுபடுகிற குற்றங்களும் பற்றிய கவனம் பெருமளவுக்கு இல்லை ஊழல், மக்கள் பொருட்களைப் கொள்ளையடிப்பது, பெருநிதி நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து மக்களையும் வளங்களையும் கொள்ளையடிப்பது, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகிற போது அவற்றை முன் நிறுத்தி இத்தகைய கொள்ளையையும் சுரண்டல்களையும் வகை தொகையற்று நிகழ்த்துவது,  இனப்படுகொலை நிகழ்த்துவது, சித்திரவதை செய்வதும் என அரசுக புரியும் கிறிமினல் குற்றங்கள் எண்ணிக்கையற்றவை.
ஆர். ஜே. றம்மல் ( R.J. Rummel,1994) என்னும் ஆய்வாளரின் கருத்துப்படி 1900ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையில் உலகெங்கும் உள்ள அரசுகள் - "ஜனநாயக" அரசுகள் உட்பட – 169 மில்லியன் பொது மக்களைக் கொலை செய்திருக்கின்றன. இந்தக் காலகட்டங்களில் நிகழ்ந்த உலக  யுத்தங்களில் கொல்லப்பட்டவர்களை இந்தப் புள்ளிவிவரம் உள்ளடக்க வில்லை. அந்த எண்ணிக்கைகளையும் சேர்த்துக் கொள்வதனால் மேலும் 35 மில்லியன் மக்களை நாம் கூட்டிப்பார்க்க வேண்டும்.
அரசுகள் புரிந்து வரும் இத்தகைய கிறிமினல் குற்றங்கள் பற்றி எமது 'சர்வதேச சமூகம்' ,உலக நிறுவனங்கள் என்பன ஏன் பெருமளவு கவனம் செலுத்துவதில்லை என்பது முக்கியமான  கேள்விகளுள் ஒன்றாகும். படைத்றையினரின் சர்வதிகார ஆட்சி நிலவும் நாடுகள், மன்னராட்சி நடைபெறும் நாடுகள்,  வேறு பல சர்வாதிகார நாடுகள் எனப் பல கொடுங்கோலாட்சிகள் இன்று உள்ளன. இவற்றிலும் ஒரு சில நாடுகள் பற்றியே கொலைக் குற்றச் சாட்டுகளும் கிறிமினல் குற்றச் சாட்டுக்களும்  பற்றிய  கூக்குரல் எழுப்பப்படுகிறது. தங்களது அரசியல், படைத்துறை, பொருளியல், கேந்திரப் புவியியல் அரசியல் தேவைகளை அடிப்படையாக வைத்தே இந்தக் கூக்குரல்  சில நாடுகளைப் பற்றி மட்டுமே எழுப்பப்படுகின்றது என்பது நாம் ஏற்கெனவே புரிந்து கொண்ட ஒன்றுதான்.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) உருவாக்கப்பட்டிருந்தாலும் அதனை முக்கியமான பல நாடுகள்  ஏற்றுக் கொள்ளவில்லை. அரசுகள் புரியும் கொடூரக் குற்றங்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இப்போத எமக்குப் பல வழிகள் இல்லை. இதற்கான முதன்மையான காரணம் மானுட உரிமைகள் அடிப்படையிலும் பொதுமக்களின் நலம் சார்ந்த அடிப்படையிலும் உருவாகி வரக்கூடிய ஒரு பலம் பொருந்திய அனைத்துலக நீதி முறைமை இல்லை என்பதாகும். சர்வதேச மானுடநேயம் சார்ந்த சட்டங்களும் சர்வதேசச் சட்டங்களும் ஒப்பீட்டளவில் பலமற்றவை; இப்போதுதான் மெல்ல மெல்ல ஆ ழமும்ழமும் அகலமும்  பெற்று வருபவை. எனவே இப்போதைக்கு உடனடியான நீதியை இவற்றிடமிருந்து எதிர் பார்க்க முடியாது.
இரண்டாவது காரணம், இப்போது இயங்குகிற எல்லாச் சர்வதேச அமைப்புக்களும்  அரசுகளால், அரசுகளின் நலன் பேண உருவாக்கப்பட்டவை. அவை அரசுகளைக் குற்றக் கூண்டில்  நிறுத்திவிட மறுப்பவை. அரசுகளையும் நாடுகளையும் கடந்த நிலையில் உருவாக்கப் படுகிற அமைப்புக்களையும் மக்கள் போராட்டங்களையும் ( Transnational people's struggles) அவை மதிப்பது கிடையாது. எனவே சர்வதேச சமூகம் என நாங்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஓர் பெயர் எமது மக்களதும், குறிப்பாக ஒடுக்கப்படுகிற மக்களது நல் வாழ்வுக்காக மானுட உரிமைகள், அடிப்படை உரிமைகள், மானுட நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் அறத்தை முன்வைத்து எதுவுமே செய்யப்போவதில்லை. இது ஒரு கசப்பும் வெறுப்பும் துயரமும் கூடிய உண்மை. இதனை மறந்துவிட்டு நாம் அடுத்த காலடி எடுத்து வைக்கமுடியாது.
கிறிமினல் அரசுகளை நாம் நீதிக்கு முன்பாக நிறுத்துவதில் இன்னமொரு முக்கியமான சிக்கலும் உள்ளது. மற்றவர்களது தலையிடில்லாமல் தமக்கேயான ஆள்புல அதிகாரத்தை அல்லது ' இறைமை' யைத் தமக்குத் தேவையான போதெல்லாம் தம்மைப் பாதுகாக்கிற கேடயமாக இவை பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய நாடுகளின் தலைவர்களும் சட்டத்திற்கும் குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாகத்  தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இத்தகைய சிக்கல்களையும் நாம் மெல்ல மெல்ல உடைக்க வேண்டியுள்ளது.
அரசுகள் புரியும் மோசமான குற்றங்களை நாம் பொதுவாக எட்டு  வகைப்பாடுகளாகப் பார்க்கலாம். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், காவல்துறையினர் புரிகிற 'கிறிமினல்' செயற்பாடுகள், பெருநிதிக் கூட்டுத்தாபனங்களுடன் இணைந்து புரியும் குற்றங்கள், சித்திரவதை, ஊழலும் மோசடியும், 'பாதாள உலக' ஆயுதக் குழுக்களின் குற்றங்களுக்கு ஆதரவாக இருத்தலும் இணைந்து செயல்படுதலும், மக்கள் நலனை அடிபடையாக வைத்துத் திட்டமிடப்படாத "அபிவிருத்தித் திட்டங்கள்" ஏற்படுத்தும் அனர்த்தங்களும் அநியாயங்களுமே அவை. இந்தக் குற்றங்களிலிருந்து உலகில் எந்த நாடுமே தப்பமுடியாது. எனினும், பல நாடுகள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதில் மிகவும் தீவிரமாக உள்ளன. இலங்கை அரசைப் பொறுத்தவரை இத்தகைய குற்றங்களைப் புரிவதில் அது முன்னுதாரணம் தரக்கூடியதொன்றாக அமைகிறது.
அரசுகள் புரியும் பயங்கரக் குற்றங்களில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சித்திரவதை என்பன பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டாலும் இன்னுமொரு பயங்கரக் குற்றமான பெருநிதிக் கூட்டுத் தாபனங்களுடன் இணைந்து அவை புரியும் சுரண்டலைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. உண்மையில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் இத்தகைய பெருநிதிக் கூட்டுத்தாபனங்களின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. 'அபிவிருத்தி' , 'வளர்ச்சி' , முதலீடு, என்ற பெயரில் இத்தகைய பெருநிதிக் கூட்டுத்தாபனங்களின் வரையறையற்ற லாபத்துக்காக மக்களையும் அவர்களது நிலத்தையும் வளங்களையும் அபகரிப்பதையுமே அரசுகள் செய்து வருகின்றன. நமது சூழலுக்குப் பொருத்தமான மிகவும் ஆபத்தான அண்மைய எடுத்துக்காட்டுக்கள் 2009 மே மாதத்திற்குப் பின்பாக வடக்குக் கிழக்கில் இடம் பெற்று வருகின்றன. இந்தியப் பெரு நிதி நிறுவனங்களும். சிங்கப்பூர், மலேசியா நிறுவனக்களும் சீன அரசின் முகவர் நிறுவனங்களும் வேறும் பல பெரு நிதி நிறுவனக்களும் "அபிவிருத்தி", தொழில்துறை, என்ற பெயரில் மக்கள் நலனையும் அவர்களது அடையாளங்களையும் மெல்ல மெல்லச் சிதைக்கின்றன. இந்த வரிசையில் இம்மாதம்  பதிநான்காம் திகதி இணைந்து கொண்டிருப்பது இந்திய-அமெரிக்க-அவுஸ்திரேலியப் பெருநிதி நிறுவனமான Gateway Industries  என்பதாகும். இதன் வருகையை இலங்கையின் அமெரிக்கத் தூதரகம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது தற்செயலானது அல்ல!!!
இந்த நிறுவனத்தின் முயற்சியில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் திருக்கோணமலையிலும் சம்பூரிலும்உருவாக  இருக்கும் பெருந்தொழில் துறை மையமும் அதனோடு சேர்ந்து வர இருக்கிற பல வகை நிறுவனங்களும் அப்பகுதி மக்களது வாழ்வுரிமையைச் சிதைத்து அவர்களை முகமற்றவர்களாக்கும் அரச முயற்சிக்கு அழகிய ஒப்பனை தரும் செயலாகும். நீண்டகால அடிப்படையில் இத்தகைய பெருநிதிக் கூட்டுத்தாபனங்களுக்கு  நிலம் தாரைவர்த்தும் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, இந்த  நிலங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முழுப்பகுதியுமே உயர்பாதுகாப்பு வ லயங்களாக மாற்றப்பட்டு விடுகிற சூழல் உருவாக்கப்படுகிறது. அந்தந்தப் பிரதேச மக்களின் ஒப்புதலும் ஆலோசனையும் இல்லாமல் எந்த அபிவிருத்தித் திட்டமுமே நிறைவேற்றப்பட முடியாது; நிறைவேற்றப்படக்கூடாது அபிவிருத்தியின் அடிபடைப் பாடமாகும்.  எனினும் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை படைமயமாக்கப்பட்ட அபிவிருத்தியும், காலனித்துவ ஆட்சியுமே மஹிந்த அரசின் நடைமுறையாகும்.
லத்தீன் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் இந்தியாவிலும் பல இலட்சக்கணக்கான மக்களதும் ஆதிவாசிகளதும் நிலங்களும் வளங்களும் இப்படி அபகரிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்குப் பதில் அநீதியையும் அழிவையும் படுகொலைகளையுமே இவை கொண்டுவந்து சேர்த்துள்ளன. அரசுக்கும் அதன் ஊழல் பங்காளிகளுக்கும் இத்தகைய பெருநிதிக் கூட்டுத்தாபனங்களுக்கும்  இரத்தம் தோய்ந்த டொலர் நோட்டுக்கள் கட்டுக்கட்டாகக்  கிடைக்கின்றன.  இத்தகைய நெடிய வரலாற்றில் அண்மையில் சிறைப்பட்டுள்ளவர்கள்   வடக்குக் கிழக்கில் வாழ்கிற தமிழர்களும் முஸ்லிம் மக்களும்தான்.
மே 2009 இல் எங்களுடைய குருதியையும் தசையையும் பங்கு போட்ட அனைவரும் இப்போது எங்களது வளங்களையும், நிலத்தையும் எஞ்சியிருக்கும் வாழ்வையும் தீவிரமாககக் கூறு போடுகிறார்கள்.  நிலம் என்பது எங்களுடைய தனிப்பட்ட சொத்து அல்ல; அது நமது வாழ்க்கையின  அடையாளம்; நமது அடையாளத்தின் இயற்கை, நமது இயற்கையின் அடையாளம். நமக்கான சிறப்பான உருவகம். இதனை  இப்போதைக்கு வளர்த்தைகளாலும்  வலியோடும்தான்   வலியுறுத்த முடிகிறது என்பதுதான் நமது காலத்தின் அவலம். 

No comments:

Post a Comment