வடக்கில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடங்கல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் (27.07.12) எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்த அழைப்பின் பேரில் உருவான இந்தப் பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக, லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்குச் செல்லமுயன்ற போது பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பதாகைகளில்
கீழ்வரும் வாசகங்களைப் பொறித்திருந்தனர்.
• புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!
• மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே!! முஸ்லிம்களை வாழவிடு,
• எமது பூர்வீக மண்ணை மீட்டுத்தாருங்கள்,
• மன்னார் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு புலிக் கூட்டு தமது கரங்களை நீட்டிவிட்டது.
• எமது முஸ்லிம் தலைமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்,
• வடக்கில் எமது வாழ்வுரிமையை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள்,
மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்கெதிரான சாத்வீகப் போராட்டங்கள் மிகமிக அவசியமாகின்றன. பாதிக்கப்படும் மக்கள் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது இத்தகைய போராட்டங்களை இன அடிப்படையில் பிரித்து நோக்குவது தவறானதாகும்.
ஆனால் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான் குடியிலும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நுணுக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகிறது. ஏனேனில் ஒரு பத்திரிகையாளனாக எனது பார்வையில் முஸ்லீம்கள் வடக்கு கிழக்கில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அரசியல் வாதிகள் தமது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்துவதாகத் தெரிகிறது. முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் உண்மையான விருப்பம் இருக்குமென்றால் இந்தப்போராட்டங்கள் வேறு ஒருதளத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
தமது பேரினவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக அரைநூற்றாண்டுக்கு மேல் இனங்களுக்கிடையில் பகையுணர்வை எண்ணை ஊற்றி எரியவிட்டு அதில் குளிர்காயும் பிற்போக்குச் சிங்கள பெரும் தேசிய அரசியல்வாதிகளுடன் ஒட்டிக்கொண்டு, அரசியலில் சுகபோகங்களை அனுபவிக்கும் அமைச்சர் ரிஸாத்பதியுதீனும் அவர் போன்றே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு சலுகை காணும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகளை இட்டு எந்த அக்கறையுமற்றிருக்கிறார்கள்.
மன்னாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவற்றிருக்கிறது. இங்கே இந்தப்பிரச்சனையை புறமிருந்து பார்ப்பவர்களுக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
• மன்னாரில் முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?
• எந்த வகையில் தடையாக இருக்கிறார்கள்?
• முஸ்லீம் மக்களை அவர்கள் பூர்வீகமாக வெளியேற்றப்படுவதற்கு முன் கடைசியாக வாழந்த சொந்த இடத்திலா அல்லது அரசாங்கக் காணிகளிலா அல்லது தமிழ் மக்களின் காணிகளிலா அமைச்சர் குடியேற்ற முனைகிறார்?
• மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் வாய்ப்புக்களும் பொதுவான வாழ்வாதாரங்களும் வளங்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உரிய முறையில் பங்கிடப்படுகிறதா?
போன்ற கேள்விகள் எழுகின்றன.
முஸ்லீம்களின் வாழ்வுரிமையும் அவர்களின் பூர்வீகமான வாழ்விடங்களும் யாராலும் பறிக்கப்படக் கூடாதவை. இது குறித்து விவாதத்திற்கே இடமில்லை.
ஆனால் இலங்கையில் யாருக்கு தும்மல் வந்தாலும் அதற்கு புலிகள் தான் காரணம் எனக்கூறும் அரசியலை புலிகள் இல்லாது போய் மூன்று வருடங்களின் பின் எடுத்து வந்து முஸ்ஸிம் அரசியல்வாதிகளும் கடை விரிப்பதுதான் கவலை தருவது. அதிலும் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?.
நீதிபதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டித் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவுகளால் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்கு கேள்வி எழுகிற போது தன்னைப் பாதுகாப்பதற்காக முஸ்லீம் மக்களின் பொதுவான பிரச்சனைகளுடன் அதனை முடிச்சு போடுவதுடன் அதற்குள் புலிகளையும் இழுக்கும் கழிசடை அரசியலை அமைச்சர் ரிட்சட் பதியுதீன் செய்வது ஒன்றும் உலக அதிசயமல்ல.
மக்களை போராட்டத் தூண்ட முதல் புலிகளின் மறுபிறப்பு யார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்குள்ளது.
ரிட்சட் பதியுதீனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை முற்றிலும் சட்டம் மற்றும் நீதி சார்ந்த பிரச்சனையாகவே உள்ளது. உண்மையிலும் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிபதியை எச்சரித்தமை குறித்து இப்போ மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நேரில் ஆஜராகி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தப்பிரச்சனையைச் சட்டரீதியாகக் கையாள்வதை விடுத்து புலிப்பூச்சாண்டி காட்டுவது மலின அரசியலாக புலப்படவில்லையா?
அமைச்சரின் நடவடிக்கை தவறானது எனத் தெரிவித்தால் தெரிவிப்பவர்கள் புலிகளாகிவிடுவார்கள என்றால்….
நானே ஒரு புலிப்பட்டியலைக் கீழே தயாரித்துத் தருகிறேன்.
நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் சங்கமும், நீதிபதிகளின் சங்கமும் மற்றும் நாட்டின் சட்டத்துறை, நீதித் துறை சார்ந்த அனைவரும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர்… இவர்கள் புலிகள்…
காலியில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் மன்னாரில் உள்ள சட்டத்தரணிகள் அமைப்பும் இணைந்தே மேன்முறையீட்டு நீதிமன்றில் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன…. இவர்கள் புலிகள்.
நீதிமன்றத்தை நீதித்துறையை நீதிபதியை அச்சுறுத்தியமை குறித்து நீதி அமைச்சர் என்ற வகையில் கவலையடைவதாக அமைச்சர் றவூவ் ஹக்கீம் கூறினாரே அவருக்கு முன்பு புலிகளுடன் ஒப்பந்தம் செய்த காலத்தில் புலிகள் நீண்ட காலத்தின் பின் தொழிற்படக்கூடிய வசிய மருந்து எதேனும் கொடுத்திருப்பார்களோ?...
நீதித்துறையை அவமதித்தமை குறித்து அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறித்து கவலை கொள்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறாரே அவருக்கு முள்ளிவாய்க்காலில் கோரமாகக் கொல்லப்பட்ட புலிகளின் ஆவியால் சிலவேளையால் புத்தி பேதலித்து விட்டதோ…
மன்னார் நீதிபதி புலிகளின் மறுபிறப்பாக உருவெடுத்து பொய் சொல்கிறார் என்றால், மன்னார் நீதிமன்றத்தைத் தாக்கி அதனை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோக் காட்சிகளை செய்தியாக ஒளிப்படங்களாக, வெளியிட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களை புலிகளின் முன்னாள்த் தளபதிகளென்பதா?
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமூகமளித்து உங்களிடமுள்ள ஆதாரங்களைச் சமர்ப்பித்து மன்னார் நீதிபதியினதும் அவர் சார்ந்தவர்களினதும் குற்றச்சாட்டுகள் பிழையானவை என்றும் அவர்கள் புலிகளே என்றும் நிரூபியுங்கள் மறுகணமே மன்னார் நீதிபதியை பூசாவுக்கு அனுப்பி அதன்பின் சமயம் வரும் போது அவரும் நிமலரூபனிடம் அனுப்பப்படுவார்...
அரை நூற்றாண்டுக்கு மேலாக கொழுந்து விட்டு எரிந்த சிங்கள, தமிழ் முஸ்லீம் இனவாதங்கள் குறித்தும் பிற்போக்கான குறுகிய தேசியவாதங்கள் மற்றும் இவற்றிடையே நிலவிய முரண்பாடுகள் குறித்தும் எல்லாத்தரப்பிலும் உள்ள முற்போக்குசக்திகள் இப்போது மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் சுயவிமர்சனங்கள் குறித்தும் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆரோக்கியமான முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் புலிப்பூச்சாண்டி காட்டி குட்டையை இன்னமும் குழப்பும் மூன்றாம் தர அரசியலை செய்ய வேண்டாம் .
உங்களது சொந்த அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படுகின்ற போது? சுகபோகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற போது? தேர்தல்கள் வரும் போது வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காக இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தும் நாச அரசியலைச் செய்ய வேண்டாம்.
உண்மையிலும் உங்களுக்கு முஸ்லீம்களின் நலன்கள் முக்கியமென்றால் வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளைச் செய்யக்கூடிய ஒரு சுயாதீனமான அரச மற்றும் கட்சி சார்பற்ற குழுவை உருவாக்கவும் அதற்கு தங்குதடையற்ற விசாரிப்பு மற்றும் அறிதல் சுதந்திரத்தை வழங்கவுமான ஒரு ஆக்க பூர்வமான முனைப்பை எடுங்கள்
வடக்கு கிழக்கைப் பிடித்திருக்கும் எல்லாப்பேய்களையும் பிசாசுகளையும் இவர்கள் இனம்கண்டு பகிரங்கப்படுத்தட்டும். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையிலும் உங்களிடமும் பல செவ்விகளை சூரியன் எஃப் எம் இன் விழுதுகள் நிகழ்ச்சிக்காக எடுத்திருக்கிறேன் என்ற வகையிலும் நேரிலும் உங்களுடன் பேசியிருக்கிறேன் என்ற வகையிலும் இந்தச் சவாலை நான் உங்களிடம் விடுக்கிறேன்.
முஸ்லீகளின் இருப்புக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் சிங்களப் பேரினவாதிகள் சவால் விடுக்கும்போது பெட்டிப்பாம்பாக அடங்கிக்கிடக்கிறீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்கத் துணிவில்லாமல் அடங்கிப்போகிறீர்களே அதற்கான விளக்கத்தை உங்கள் உண்மை முகம் தெரியாமல் அந்தரிக்கும் என் சகோதர முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கத் துணியுங்கள் நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் .
தம்புள்ளவில் அரை நுற்றாண்டாக முஸ்லீம்கள் ஐந்து நேரத் தொழுகையைச் செய்து வந்த பள்ளி வாசலை தம்புள்ளவில் உள்ள அரசாங்கசார்பு அரசியல்வாதிகளும் அரசாங்கசார்பு பௌத்த பிக்குகளும் தாக்கி அழிக்க முற்பட்டபோது நீங்கள் ஊர்வலம் போனமாதிரித் தெரியவில்லையே? (நான் அரசுடன் இணைந்து நின்று மக்களைத்தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்கிறேன்) இன்றுவரையும் அப்பள்ளிவாசலைத் திறப்பது குறித்து உரிய தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து நாடு தழுவிய மக்கள் போராட்டங்களை முஸ்லிம் அமைச்சர்களோ உள்ளுராட்சி மாகாண சபைகளின் உறுப்பினர்களோ தொடர்ச்சியாக முன்னெடுத்ததாக தெரியவில்லையே.
அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள ஹெல உறுமய மற்றும் கடும் போக்கு பௌத்த பேரினவாதக் கட்சிகள் முஸ்லீம்களுக்கு எதிராக வெளிப்படையாக விடுகின்ற அறிக்கைகளைக் கண்டிக்கவோ முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்க்கவோ திராணியற்று நிற்கிறீர்களே.
தீகவாபி பிரதேசம் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் மற்றும் வயல்நிலங்கள் பலவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் சுற்றாடல் சூழல் அமைச்சராகவிருந்த சம்பிக்க றணவக்க வெளிப்படையாக ஈடுபட்டபோது ஏன் ஊர்வலம் போகவில்லை நீங்கள்!.
அராபிய தேசங்களில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என உங்களைக் கூறிய ஹெல உறுமைய பங்கெடுக்கும் அரசாங்கத்தில் நீங்கள் வீற்றிருக்கும் கொலுவென்ன?
நீங்கள் உண்மையிலும் முஸ்லீம் மக்களின் நலனுக்காகப் போராடுகிறீர்கள் என்றால் இங்கே ஆரம்பிக்கவேண்டும் உங்கள் போராட்டத்தை.
முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர், எம்.ஆர்.எம். பைசால் அண்மையில் அதன் சார்பில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
அதன் சாரம் இதுதான்:
தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தம்புள்ளையில் நடந்தது போலவே தாம்பகாம பிரதேசத்திலும் நடந்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிசார் தமது கடமையை செய்யாது பேரினவாதத்திற்கு துணைபோனதுடன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது அவர்களது மதச் சுதந்திரத்தை பறிப்பதும் பேரனவாத நிகழ்ச்சி நிரலில் கட்டாயமானது ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை மதச் சுதந்திரத்தை மதிக்கின்ற அனைவரும் ஓரணியில் திரண்டு மிலேச்சத்தனமான பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும.; நாம் பிரிந்து நிற்பதால் பேரினவாதிகளே பலம் பெறுவார்கள்.
முஸ்லிம்களது புனித நாளாக கருதப்படும் இந் நோன்பு காலத்தில் மதத் தலத்திற்கு பிரவேசித்து வேறொரு மத அனுஸ்டானங்கள் நடத்தி இருப்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இப்பாவச் செயலை புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.
உலகத்தில் இதுபோன்ற நிந்தமான செயற்பாடுகளை வேறு எங்காவது நடந்து இருப்பதை நாம் அறியவில்லை. எனவே மத சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய மோசமான செயற்பாட்டிற்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம்
சரி என்னுடைய வேண்டுகோளை விடுங்கள். திரு பைசல் அவர்களின் அறைகூவலுக்காவது செவி கொடுங்களேன்.
நீங்கள் முஸ்லீம் மக்களின் உண்மையான பிரசனைகளுக்குக்காகப் போராடும் போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் அவர்களின் சட்ட பூர்வமான பூர்வீக நிலங்களையும் யாராவது ஒரு தமிழர் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மறுப்பார்களாக இருந்தால் அவரை அவர்களை, ஒரு பத்திரிகையாளனாக நான் அம்பலப்படுத்தத்தயாராக இருக்கிறேன்.
மற்றப்படிக்கு புலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்.
No comments:
Post a Comment