Translate

Wednesday 25 July 2012

வடக்கில் இருந்து படைகளை அகற்ற முடியாது மகிந்த தம்பி


வடக்கு, கிழக்கில் குற்றச் சம்பவங்களில் படையினர் ஈடுபடுவதாக எழுப்பப்படும் குற்றச் சாட்டுகளை நேற்று திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவ்வாறான சூழ்நிலையில் அங்கு படைமுகாம்களை அகற்றுவதற்கோ, படைக்குறைப்பு செய்யவோ தேவையேற்பட வில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவது மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் பங்குபற்றியும் நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குத் தலைமை வகித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது எமது அமைச்சின் பொறுப்பு. அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் என்றும், படையினரே அதற்குப் பொறுப்பு என்றும் என்னைச் சந்தித்த தூதுவர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கில் படைக்குறைப்புச் செய்யவும், படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டுமென்பதையும் நியாயப்படுத்தியே அப்படிச் சொன்னார் தூதுவர்.
நான் இதனை நன்கு ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யபயப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள பதிவுகளின் ஊடாக விவரங்கள் திரட்டப்பட்டன.
புள்ளி விவரங்களை நான் பார்த்தேன். அப்போது எந்தவொரு வகையிலும் படையினர் இந்தச் சம்பவங்களில் ஈடுபடவில்லையெனத் தெரியவந்தது.
மூன்று சம்பவங்களில் படையினருக்குத் தொடர்பு இருந்தது. அந்தச் சம்பவங்கள் வவுனியாவில் சிங்களப் பகுதிகளில் நடந்துள்ளன. படையிலிருந்து தப்பியோடிய சிப்பாய்களே இதில் தொடர்புபட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள பெண்கள் மீதான வன்முறைகளுடன் அவர்களின் அயல்வாசிகள், நெருங்கிய உறவினர்கள், தெரிந்த நபர்கள் என்ற சிறு குழுக்கள் பின்னணியில் இருந்தமை தெரியவந்தது. பாதுகாப்புக்காக இருந்தவர்கள்தான் இவற்றைச் செய்துள்ளனர்.
வடக்கு, கிழக்கின் நிலைமை இதுதான். போரின் பின்னர் விதவைகளாக இருப்போர் மீது படையினர் வன்புணர்வுகளில் ஈடுபடுவதாகப் பரப்புரைகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
கிருலப்பனை, தங்காலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது பெற்றோர்கள் பொறுப்பற்ற ரீதியில் இருந்துள்ளமை தெளிவாகப் புலனாகின்றது. பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினரை எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சுமத்தக் கூடாது.
குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்காக முப்படையினரைப் பயன்படுத்தும் அதிகாரங்கள் எம்மிடம் இல்லை. அதற்காக சட்டங்கள் திருத்தப்படவேண்டும். நீதித்துறையினரின், ஊடகங்களின் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் தேவையான ஒன்று.
ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது தவறல்ல. அப்படிச் செய்திகள் வெளியிடப்படுவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதாக நான் கூறமாட்டேன்.
என்றாலும், குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது அவை சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.

No comments:

Post a Comment