Translate

Wednesday, 4 July 2012

சிங்கள தேசத்தின் அழிப்பின் இலக்கு விடுதலைப் புலிகள் அல்ல, தமிழர்களே!

சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது.


தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் போராட முனைந்தால் கிறீஸ் பூதங்களை அனுப்பிய சிங்களம், இப்போது கழிவு எண்ணைகளை ஊற்றியும், புலனாய்வாளர்களை அனுப்பியும் தமிழர்களின் குரல்வளைகளையும் ஒடுக்க முனைகின்றது. மீறிப் பேசினால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்களை சந்திக்கவேண்டும் என்று சிங்களத் தலைமைகள் மரண எச்சரிக்கை விடுக்கின்றன.

போரை முடித்துவிட்டதாக வெற்றி மமதையை வெளியிட்ட சிங்கள தேசம் இன்னமும் போருக்கான தனது தயார்படுத்தல்களில் இருந்து ஓய்ந்துபோய்விடவில்லை. சிறீலங்காவின் பாதுகாப்புச் செலவினம் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மக்களை மீளக்குடியேற்றுவதற்காக எனக்கூறி ஒரு பக்கம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இராணுவம் கண்ணிவெடிகளை தமது உயிர்பாதுகாப்பு எல்லைப் பிரதேசங்களில் விதைத்துக்கொண்டிருக்கின்றது.

நாட்டில் தற்போது போர்ச் சூழல் நீங்கி சமாதானச் சூழல் உள்ள போதிலும், தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்காக போர் படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினரும் உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என சிங்கள இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறுகின்றார்.

தமிழர் தாயகம் ஒரு பக்கம் இராணுவ மயமாகிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஆக்கிரமித்த நிலங்களில் தொடர்ந்து சிங்களவர்களையும், புத்தர்களையும் கொண்டுவந்து குடியேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தில் ஒருவர் தடக்கி விழுந்தால் புத்தர் மீதோ அல்லது சிங்களவர் மீதோ விழவேண்டிய நிலையே எழுந்துள்ளது. எனவே, விடுதலைப் புலிகளை அழிப்பதுமட்டுமல்ல சிங்களத்தின் இலக்கு, தமிழர்களையே ஒட்டுமொத்தமாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயக்கத்தில் இருந்து விரட்டியடித்து ஒடுக்குவதே அதன் முழுமையான இலக்கு என்பதைத்தான் முள்ளிவாய்க்கால் பேரழிப்பின் பின்னர் தொடரும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் உணர்த்திவருகின்றது.

தமிழர்களின் வாழ்விடங்களை அபகரித்து அவர்களை நாட்டைவிட்டோ, நாட்டிற்குள்ளேயே அகதிகளாகவோ வாழவே நிர்ப்பந்திக்கின்றது. சொந்த நிலத்தை இழந்த மக்களாக, ஊரோடிகளாக தமிழர்களை வாழவிடுவதே சிங்களத்தின் திட்டமாக இருக்கின்றது. அதனை நோக்கியே தமிழர்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றது. இதற்காக முன்னரை விட இன்னும் வேகமாகவும், வெளிப்படையாகவும் சிங்கள தேசம் தன் காய்களை நகர்த்திவருகின்றது. இறுதிப்போரில் நடந்த குற்றங்கள் குறித்து விசாரித்த ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை காணாமல் போய்விட்டது.

டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்வுகளும், முடிவுகளும் மறக்கப்பட்டுவிட்டன. கொலையாளிகள் விசாரித்த குற்றங்களின் பட்டியலான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றி மட்டுமே இப்போது உலக நீதியாளர்கள் தமிழர்களுக்கான நீதியாகத் தூக்கிப்பிடிக்கின்றார்கள்.நல்லிணக்க ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்திவிட்டால் தமிழர்களுக்கு நியாயம் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். நாடு கேட்டு, ஊர் கேட்டு, ஒவ்வொரு வீடாவுதல் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு வந்த பாண்டவர்களின் அவலம்போல் - தமிழீழ தாயகம் கேட்டுப்போராடிய தமிழர்கள், சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடினார்கள்.

இப்போது பறிபோகும் காணியையும் நிலத்தையும் கேட்டுப் போராடுகின்ற மிகக்குறுகிய நிலைமைக்குள் தமிழ் மக்களும், அவர்களது அரசியல் தலைமைகளும் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்தப் போராட்டங்களையும் தனது ஆயுத, ஆட்பலத்தால் அச்சுறுத்தி அடக்கிவிடவே சிங்களம் முனைந்து நிற்கின்றது. இந்த முனைப்பையே கடந்த வாரங்களில் தமிழர் தாயகத்தில் காணமுடிந்தது.

எனவே, சிங்கள தேசம் தமிழ் மக்களை ஜனநாயக வழியிலும் தங்கள் உரிமைக்காகப் போராட அனுமதிக்கப்போவதில்லை என்பது உறுதியானது. தமிழர்கள் தங்கள் பலத்தை இழப்பதைத் தடுத்து நிறுத்த முனையாத உலகம், நிலத்தை இழப்பதைத் தடுத்து நிறுத்திவிடும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற நிலை வரும்வரை சிங்களத்தின் இந்த நில ஆக்கிரமிப்பும், தமிழர்கள் மீதான இனஒடுக்குமுறைகளும் தொடரவே செய்யும்.

எனவே, சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்கள்தான் முன்னெடுக்கவேண்டும். களத்தில் எழும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் பக்கபலமாக புலத்திலும் போராட்டங்கள் தொடர வேண்டும். சர்வதேச ரீதியாக நில ஆக்கிரமிப்புக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்வதுடன், போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும். களம் - புலம் என இரண்டு களங்களிலும் தொடரும் போராட்டமே சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பின் வேகத்தை தற்காலிகமாகவேனும் தடுத்து நிறுத்தும்.

நன்றி : ஈழமுரசு
ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment