தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை எப்படி யாவது அடக்கி ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள அரசு உறுதியாக இருக்கிறது. சிறீலங்கா என்பது தனிச்சிங்களத் தீவென்றும் இங்கு தமிழர்கள் என்ற இனம் வந்தேறு குடிகளென்றும் காலத்திற்குக் காலம் கூறிவருகின்ற சிங்கள அரசியல்வாதிகள் தற்போது அதனை நிலை நிறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடிய சக்திகள் எதுவுமே இல்லை. முப்படைகளுடன் கூடிய பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் இனவெறி அரசு சிதைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் சக்தி இல்லாதொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது முற்று முழுதான வெறுமையை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முப்பது வருடப் போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றதைத் தொடர்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழர்களின் மீது ஏறிச் சவாரி செய்வதற்கு சிங்கள அரசு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு சில தமிழினத் துரோகிகளும் துணை போகின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
தமிழ் மக்கள் எந்த வகையிலும் சம உரிமை கேட்கக் கூடாது என்பதற்காகவே வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் எங்கும் சிங்கள அரசு தற்போது காணிச் சுவீகரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தட்டிக்கேட்போர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெறுகின்ற நில அபகரிப்புக்களை நிறுத்துமாறு கோரி கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு போராட்டங்களை சிங்கள ஆளும் வர்க்கம் திட்டமிட்டு நசுக்கியிருக்கிறது.
சிங்களவர்களின் சில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 18ம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில் அது திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. இதற்கு அடுத்த நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தெல்லிப்பளையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கழிவு ஒயில் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் இங்கு வன்முறை வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளதென்று சிறீலங்கா காவற்துறையும் நீதித்துறையும் கூறியமை வேடிக்கையாக இருந்தது. ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்த யாழ் நகரக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்கலாமென்று தங்களுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறிய யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சமன் சிகேரா, போராட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவு ஒன்றை ஏற்பாட்டாளர்களிடம் காட்டித் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோன்றே வலி வடக்குப் போராட்டக்காரர்களையும் பிரதேச செயலகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்த காவல்துறையினர் அவர்களில் சிலரைத் தாக்கவும் முற்பட்டனர். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜாவை மக்கள் முன்னிலையில் வைத்தே காவல்துறையினர் தரக் குறைவாகப் பேசி அவமதித்தனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ஒரே காரணத்திற்காகவே மாவை இங்கு அவமதிக்கப்பட்டிருந்தார். இந்தப் போராட்டங்கள் தடுக்கப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தோல்வியென்று சிறீலங்கா அரசும் சிறீலங்கா காவற்துறையும் சிறீலங்கா நீதித்துறையும் கருதுகின்றன.
ஆனால் இந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டமையானது சிறீலங்கா அரசிற்கு சர்வதேச அரங்கில் படுதோல்வியையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது. யானை தன் கையாலே தலைக்கு மண் அள்ளிப்போடுமென்பார்கள். நுணலும் தன் வாயாலேயே கெடும் என்பார்கள். அதேபோல சிறீலங்கா அரசாங்கமும் தன் செயலாலே தானே மாட்டுப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் திறமையாக செயற்
படுத்தப்படுவதாகவும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாகவும் சிறீலங்கா அரசு சர்வதேச ரீதியாக கூறிவருகின்றது ஆனால் ஜனநாயக ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் அமைதிவழிப் போராட்டத்திற்கும் உரிய பாதுகாப்பை வழங்க முடியாத சிறீலங்கா காவற்துறை யாழ்ப்பாணத்திலிருப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
மக்களின் மேற்படி போராட்டத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததென்று சிறீலங்கா காவற்துறை அறிந்திருந்தால் உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்தி மக்களின் போராட்டங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். இதுதான் காவற்துறையினரின் கடமையும் பொறுப்பமாகும். அதை விடுத்து நீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று தடை உத்தரவு பெற வேண்டிய அவசியம் இல்லையே. கழிவு ஒயில் ஊற்றி மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்க வேண்டிய அவசியம் இல்லையே. மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் செயற்பாட்டிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை இங்கு வெளிப்படையாகவே தெரிகின்றது.
மேலுமொரு விடயத்ததை நாங்கள் இங்கே நோக்க வேண்டும். தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் மட்டும்தான் வன்முறைகள் வெடிக்குமா? சிங்களவர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் வன்முறைகள் வெடிக்காதா? என்ற கேள்வி தமிழ் மக்களிடம் இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்படவுள்ளது என்பதை அறிந்தவுடனேயே அரசுக்கு ஆதரவாக யாழ் நகரில் பல ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. அரச அடிவருடிகளான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியினரால் இந்த ஆர்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது அதில் கலந்து கொண்ட மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? அவ்வாறு அச்சுறுதத்தல் இருக்கவில்லையென்று உறுதிப்படுத்தியது யார்? இங்கு வன்முறைகள் ஏற்படும், ஆர்ப்பாட்டம் குழப்பப்படும் என்று சிறீலங்கா காவல்துறையினருக்கு எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லையா? இந்தக் காரணங்களைச் சுட்டிக்காட்டி அந்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதற்கு காவல்துறை நீதிமன்றில் தடை உத்தரவைப் பெற்றிருக்கலாமே.
ஆனால் அவ்வாறு செய்யாததன் மூலம் அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளன. அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவை வழங்கிய காவல்துறையினர் அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மட்டும் தடுத்து நிறுத்தியதன் மூலம் சிறிலங்கா காவல்துறை ஒரு அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அரச ஆதரவாளர்களும் அரச கைக்கூலிகளுமே தமிழர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரச ஆதரவாளர்களே கவனயீர்ப்புப் போராட்டக்காரர் மீது வன்முறையை பிரயோகித்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. அரச எதிர்பார்ப்பாளர்கள் தான் வன்முறைகளில் ஈடுபடுகிறார்களென்றால் நிச்சயமாக அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழிவு ஒயில் வீசப்பட்டிருக்கும். போராட்டங்கள் தடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெறாததன் மூலமே யாழில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புச் செயற்பாடுகளை அரசாங்கமே தடுத்து நிறுத்துகின்றது என்பது முடிந்த முடிவாகியுள்ளது.
வடக்குக் கிழக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் சிறீலங்கா அரசினதும் இராணுவத்தினதும் காட்டாட்சியே நடைபெறுகின்றது என்பது வெளிப்படை உண்மையாகியுள்ளது. தனது நாட்டு மக்கள் மீதே அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களைப் படுகொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா முதலிடத்தைத் தட்டிச் சென்றிருக்கின்றது. எனவே, தொடர்ந்தும் நாம் இவற்றை அனுமதிக்க முடியாது. மகிந்த ராஜபக்சவின் அராஜக ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய தருணம் வந்து விட்டது. சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உண்டு. எமது அன்பான புலம்பெயர் உறவுகளே தாயகத்திலுள்ள மக்களுக்காக நீங்கள் அல்லும் பகலும் பெரும் கஷ்டங்களோடு உழைக்கிறீர்கள். அதற்கு மேலாகவும் நீங்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது. தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள கொடுமைகளை நிறுத்துவதற்கு ஒரே வழி தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவது மட்டுமேயாகும் என்பதை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஈழத்தில் நடைபெறும் காட்டாட்சியை ஆங்கில வடிவில் அறிக்கையிட்டு சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழர்கள் ஒரு தேசிய இனம். தமிழர்களுக்கு தாயகம் உண்டு. விடுதலைக்காக அளப்பெரிய விலை கொடுத்த இனம் தமிழினம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பயங்கரவாத யுத்தம் நடத்தவில்லை. ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான யுத்தம் ஒன்றையே நடத்தினார்கள் என்பதை சர்வதேசம் உணர வேண்டும். இதனை நாம் சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அணிதிரளும் போதுதான் எமது விடுதலை சாத்தியமாகும் என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாரக மந்திரத்தை மெய்ப்பிக்க வேண்டும்.
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment