Translate

Tuesday, 14 August 2012

காவியுடைப் பயங்கரவாதத்திடம் மண்டியிட்ட ஹக்கீம்!

இலங்கையில் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் உருவாகியிருக்கும் "காவியுடைப் பயங்கரவாதம்" பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ராவூப் ஹக்கீம், பின்னர் அதற்காக பகிரங்கமாகவே மன்னிப்பக் கோரியிருக்கின்றார். அல்லது மன்னிப்புக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.


சிறுபான்மையினம் ஒன்றின் தலைவர் அந்த இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற கொடூரங்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்காக பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பது சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இனவாதிகளின் அச்சுத்தல் காரணமாகத்தான் ஹக்கீம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் என்பது இரகசியமானதல்ல!
இந்த நிலையில், காவியுடைப் பயங்கரவாதம் பற்றி ஹக்கீம் ஏன் முதலில் பேசினார் என்பதையிட்டும் பின்னர் எதற்காக மன்னிப்புக் கோரினார் என்பதையிட்டும் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த பின்னர் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் பார்வை பெருமளவுக்கு முஸ்லிம்களின் பக்கம் திரும்பியது. போர்க் காலத்தில் தமக்கு உதவியிருந்தாலும், முஸ்லிம்களையும் தட்டிவைக்க வேண்டும் என்ற உணர்வுடன் சிங்களத் தேசியவாதிகள் செயற்படத் தொடங்கினார்கள். இதன் எதிரொலியாகத்தான் முஸ்லிம்களின் வாசஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகளைப் பறிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அநுராதபுரத்திலுள்ள முஸ்லிம்களின் வணக்க ஸ்தலமே முதலில் தாக்கப்பட்டது. காக்கிச் சட்டடையுடன் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்க, காவியுடை தரித்த பிக்குகளின் வழிநடத்தலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம்களின் வணக்க ஸ்தலம் தரைமட்டமாகப்பட்டபோது அரச தரப்பும், காவல்துறையும் மௌனமாகவே இருந்தன. இது தொடர்பில் முஸ்லிம்கள் செய்த முறைப்பாடுகள் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. நாட்டின் நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம் இருக்கின்ற போதிலும், இங்கு நடந்த அநியாயத்துக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை.

இதனைவிட தம்புளையிலுள்ள 60 வருட பழமைவாய்ந்த பள்ளிவாசல் தாக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன், காவியுடை தரித்த புத்த பிக்குகளின் வழிநடத்தலில் தம்புளையை புனித நகராக்குவது என்ற பெயரில் முஸ்லிம் பள்ளிவாசலை தரைட்டமாக்கி அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சி தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள போதிலும், இதற்கான திட்டத்தை பௌத்த மதவாதிகள் ஒரேயடியாகக் கைவிட்டுவிடவில்லை.

தம்புள்ள மஸ்ஜித் அகற்றப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இன்னும் அரசாங்கத்தால் வாபஸ் பெறப்படவில்லை. மஸ்ஜித் மீதான தாக்குதலை அரசாங்கம் கண்டிக்கவில்லை . மஸ்ஜிதை தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் இன்னும் நிறுத்தப் படவில்லை . அதற்கான எந்த ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் அறிய முடியவில்லை. இதனால் எந்த வேளையிலும் தம்புளை நகர் போர்க்களமாகக்கூடிய நிலை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது! தம்பளையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் மட்டுமன்றி, முஸ்லிம்கள் கூட ஆபத்தான நிலையில்தான் உள்ளனர்.

இதனைவிட கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களின் தமரசா ஒன்றும் பௌத்த மதவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றது. குறிப்பிட்ட மதரசாவை இலக்கு வைத்து பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டடம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தெஹிவளை பகுதியிலிருந்து மதரசா அகற்றப்பட வேண்டும் என பிக்குகள் அழுத்தம் கொடுக்கின்றார்கள். இது போன்ற பல நம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றது. ஆனால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் அரச தரப்பினரும் மௌனமாக இருப்பது இச்சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பவதாகவே அமைந்திருந்தது.

இவ்வாறான நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ராவூப் ஹக்கீம் தேர்தல் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரச்சாரமொன்றில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைளை உருவாக்கியுள்ளன. "விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று காவியுடை பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வர வேண்டும்" என ஹக்கீம் தெரிவித்த கருத்து கொழும்பு அரசியலில் ஒரு சுனாமியை உருவாக்கியது.

தற்போது தலைதூக்கியுள்ள காயுடைப் பயங்கரவாதம் காரணமாக  வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லீம்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிம்மதியாக பள்ளிவாசல்களில் தொழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் புதிதாக உருவாகியுள்ள பயங்கரவாதத்தினால் தொழுகை விடையத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். அத்துடன்  இந்த புதிய பயங்கரவாதத்தை அடக்குவதற்கான எந்தவித காத்திரமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டிய ஹக்கீம், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் பேசக்கூடிய ஜனநாயக உரிமையை இழந்து விட்டு இருக்க முடியாது எனவும், மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் அரசை விமர்சிப்பது என்பதை விட இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் மக்களின் அதிர்ப்தியை தெரிவிக்கும் ஒரு தேர்தலாகவே இந்தத்தேர்தலை நோக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன் காவியுடை பயங்கர வாதத்தப் பார்த்துக்கொண்டு வாய்மூடி மௌனியாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹக்கீமின் இந்த உரை, ஊடகங்களில் அதிகளவு முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டது.

ஹக்கீமின் காவியுடை பயங்கரவாதம் பற்றிய இந்த குற்றச்சாட்டு, அவரின் இரட்டை வேடத்தையும் அவரது கட்சியின் கபடத்தனத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது என ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார். "கொழும்பில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் ஹக்கீம் பேசும்போது, பௌத்த பிக்குகளுக்கும் முஸ்லிம் பாரம்பரியத்திற்கும் இடையில் உள்ள பாரம்பரியமான நட்பை பற்றி பேசுவார். ஆனால் கிழக்கில்  தமிழில் பேசும்போது அதே பௌத்த பிக்குகளை விமர்சிப்பார்" எனவும் ஹக்கீம் மீது உதய கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர், தனது சொந்த சமயத்தைகூட முறையாக கடைப்பிடிக்காத அமைச்சர்தான் ரவூப் ஹக்கீம் எனக் கூறியுள்ளதுடன் "யுத்தம் நடந்தபோது அவர் நோர்வே நாட்டவரையும் விடுதலைப் பலிகளையும் ஆதரித்தார். இன மோதல் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்பது அவரின் நிலைப்பாடாக இருந்தது. காவியுடை பயங்கரவாதம் உள்ளதென கூறும் அவர், அது எங்கே உள்ளது என்பதையும் கூற வேண்டும். அதன் பயங்கரவாத செயல்கள் எவை என்பதையும் விளக்க வேண்டும். எனவே அவர் அர்த்தமில்லாத அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்காமல் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்"  என கடும் வார்த்தைகளைப் பயன்படுத்திக் குறிப்பிட்டார்.

ஹக்கீம் மீதான் ஜாதிக ஹெல உறுமயவின் குற்றச்சாட்டுக்கள் இவ்வாறு இருக்கும் அதேவேளை மறுபுறம் அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகளான பிரதிமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் போன்ற முஸ்லிம் தலைவர்களும் ஹக்கீம் மீது தமது கடும் தாக்குதலைத் தொடுத்தனர்!

இவர்களுடன் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் அமைச்சர் ஹக்கீமுடைய கூற்றுக்களை விமர்சித்துள்ளார். கடந்த வியாழன் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில், "இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கும் இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இன ரீதியான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.அரசாங்கம் தமது பிரசார நடவடிக்கைகளை அந்த அடிப்படையிலேயே முன்னெடுத்துச் செல்கிறது. சில அமைச்சர்களும் இன ரீதியான தேர்தல் பிரசாரங்களில் ஈடு படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ள இப்தார்ஷு நோன்பு திறக்கும் நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை! இது இரு தரப்பு முரண்பாடுகள் மேலோங்கியிருப்பதற்கான மற்றொரு ஆதாரமாக இருந்தது.

இனவாதிகள், அரச உயர் மட்டம் என பௌத்த தரப்பிலிருந்து ஹக்கீமுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்தம நிலையில்தான் சரணடைவது என்ற தீர்மானத்தை ஹக்கீம் எடுத்தார்.
வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காவியுடை பயங்கரவாதம் குறித்து பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு விரிவான அறிக்கையொன்றை விடுத்துள்ளார். ஹக்கீமின் இந்த சரணாகதி முஸ்லிம்களுக்குப் பெரும் அதிர்வைக்கொடுத்தது.

"அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது. இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம், எமது மக்களின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களாக மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அநுபவித்துள்ளோம்.

போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாத கொள்கையை பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன். பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே சிறிலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரே பாதையாகும்" என ஹக்கிமின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவியுடை பயங்கரவாதம் என்ற ரவூப் ஹக்கீமின் கூற்றுக்கள் நிச்சயமாக அரசாங்கத்துடனான முஸ்லிம் காங்கிரஸின் உறவுக்கு சிக்கலையே ஏற்படுத்தும் எனலாம். எதிர்வரும் காலங்களில் ரவூப் ஹக்கீம் அவ்வாறான சிக்கல் இல்லையென எத்தனை தடவை கூறினாலும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த விவகாரம் அரசாங்கத்தின் மேல் மட்டம்வரை சென்றுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. சிங்கள கடும்போக்குவாதிகளும் இந்த விவகாரத்தை எதிர்வரும் காலங்களில் மேலும் தூக்கிப்பிடிக்கும் வாய்ப்புகளையே உருவாக்கிவிட்டுள்ளது எனலாம்.

அமைச்சர் பதவியையும் வகித்துக்கொண்டு சிறுபான்மையினம் ஒன்றின் தலைவராகவும் இருப்பதிலுள்ள சிக்கல்களுக்கு ஹக்கீம் நல்ல உதாரணம். இரண்டையும் செய்ய முயன்று இரண்டிலும் தோல்வியடையும் நிலையை நோக்கிதான் ஹக்கீம் சென்றுகொண்டிருக்கின்றார்.!


-தமிழ்லீடருக்காக
கொழும்பிலிருந்து பார்த்தீபன்.
http://tamilleader.c...4-05-19-34.html 

No comments:

Post a Comment