Translate

Tuesday, 11 September 2012

கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க ஆளும்கட்சி முயற்சி

மாகாணசபை ஆட்சியை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்கு பணம் தருவதாக கூறிக்கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சிலர் மிரட்டல் பாணியில் அணுகியதாக தேர்தல்கள் ஆணையாளிரிடம் முறையிடப்பட்டுள்ளது.


37 அங்கத்தவர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் எந்தவொரு தனிக்கட்சியும் இறுதி பெரும்பான்மையை பெறாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது, 7 அங்கத்தவர்களை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற முயல்கின்றது. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை பெற்று மாகாணசபையை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது.

இந்நிலையில், 'தனது கட்சி உறுப்பினர்களான நான்கு பேரிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உடன் சேரும்படி கேட்கப்பட்டுள்ளது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

'அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜேஸ்வரன், மட்டக்களப்பை சேர்ந்த எம்.கிருஷ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், பி.நடராசா ஆகியோரே இவர்கள்' என அவர் கூறினார்.

'நாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். தெரிவு செய்யப்பட்ட எமது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் அவரிடம் கேட்டுள்ளோம். தேர்தல் முடிவுகள் வர்த்தமானியில் வெளியிடப்படும்வரை பாதுகாப்பு விடயத்தில் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு' என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

மாகாணசபை அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக கேட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதிலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

தாம் அதிகாரத்தை கைப்பற்றினால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு சிங்களவரை அமைச்சர் சபையில் சேர்த்துக்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.

‘பலமான ஆயுதபாணிகள்‘ இதற்காக பெருந்தொகைப் பணத்தை வழங்குவதாக பேரம் பேசி மிரட்டியுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment