கிழக்கு மாகாணமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருப்பதானது பாரம்பரிய பிரதேச தன்மையினை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைவரம் குறித்த கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் விஜயசந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இம்முறை தேர்தலில் தமது பாரம்பரிய பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் சிந்தித்து வாக்களித்திருந்ததனை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அதனை விடுத்து அரசுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது விரும்பத்தக்கதல்ல.
அரசியல் அபிவிருத்தி என்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் இக்கூட்டினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதேவேளை ஆளும் கட்சியைச் சார்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கும் அடித்தளம் இடப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி இருந்தால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்னும் பல சாதக விளைவுகளும் ஏற்பட்டிருக்கும். எனினும் இப்போது அது கை கூடாது போயுள்ளது. எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment